உரிமைகளைப் பறிக்கக்கூடாது
இப்பொழுது இருக்கக்கூடிய ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களில் பெரும்பாலான வர்கள் எம்ஜிஆர் காலத்தில் பணியில் சேர்க்கப்பட்டவர்கள்தான். 1967இல் இருந்து 75 வரைதான் திமுக ஆட்சி. அதற்குப் பிறகு வந்தவர்களில் வேலைக்கு அமர்த்தப்பட்டவர்கள் மிகவும் குறைவு. 'எமர்ஜென்சிக்குப் பிறகு எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில்தான் அதிக மானவர்கள் பணியில் சேர்க்கப்பட்டனர். அதிகமான பணியிடங்கள்கூட உருவாக்கப் பட்டன. அதனால் அரசுப் பணியாளர்கள் அனைவரும் திமுககாரர்கள், கம்யூனிஸ்ட்டுகள் என்பதெல்லாம் சரியான பார்வை ஆகாது.

இப்போது நடைபெற்ற போராட்டத்தில் ஊதிய உயர்வு கேட்டுப் போராடவில்லை. ஏற்கெனவே 50 ஆண்டுகாலமாக ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு வழங்கப் பட்டிருந்த சலுகைகளைப் பறிக்கக்கூடாது, என்றுதான் போராடினோம். புதிய கோரிக்கை களை வைத்துப் போராடவில்லை. இருக்கின்ற உரிமைகளைப் பறிக்கக்கூடாது என்பதற்குத் தான் இந்தப் போராட்டமே.

பேரா. அய். இளங்கோவன் வேலூர் மாவட்ட ஜாக்டேஜியோ, கோட்டோ-ஜியோவின் தொடர்பாளர் சிறைக்குச் சென்று பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டவர். பேட்டியில்.

******


இருநாடுகளுக்கு இடையில் ஓடும் நதிகளின் நீர்கூட பிரச்சினையின்றி சுமுகமாகப் பகிர்ந்து கொள்ளப்படுகிறது. ஆனால் இருமாநிலங் களுக்கு இடையில் ஓடும் நதியின் நீரைப் பகிர்ந்து கொள்வதில் பிரச்சினை ஏற்படுகிறது.

எந்த அனுமதியும் இன்றி, அங்கீகாரமற்ற அணைகளைக் கர்நாடகம் கட்டி வருகிறது. நதி உற்பத்தியாகும் மாநிலமாக கர்நாடகம் இருப்பதால், நதிநீர் பாயக்கூடிய கீழேயுள்ள மாநிலங்களின் உரிமையை மறுத்து வருகிறது. இதை எதிர்த்து ஆந்திரமும் தமிழகமும் போராட வேண்டும்.

கூட்டாட்சி முறையை மதித்துக் கர்நாடகம் நடக்க வேண்டும். ஒப்பந்தங்களை மீறக்கூடாது. கீழ்மடைப் பகுதியின் பாசன உரிமை பாதுகாக்கப்பட வேண்டும்.

தமிழகத்துக்குக் கிருஷ்ணா நீர் தர வேண்டும் என்பதில் ஆவலாக இருக்கிறேன். ஆனால் கிஷ்ணாவில் தண்ணீர் இல்லை. கோதாவரியில் இருந்து ஆண்டுக்கு 97 டிஎம்சி நீர் கடலில் கலக்கிறது. இந்த ஆண்டு பருவமழை நன்றாகப் பெய்தால் தமிழகத்திற்கு தண்ணீர் தருவோம்.

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, சென்னை தரமணியில் எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையின் 13வது ஆண்டறிக்கையை வெளியிடுவதற்காக வந்தபோது பத்திரிகையாளர்களிடம் கூறியது.

******


நான் எதற்கும் பயப்படவில்லை. அரசியலுக்கு வரணும் என்ற சூழ்நிலையில் இறக்கி விட்டுட்டாங்கன்னா வருவேன். அப்போ எல்லாத்தையும் சந்திச்சுத்தான் ஆகணும்... நான் படங்களில் சொல்லும் விஷயங்களை நேரிலும் சொல்ல வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்... அதற்கு அவர்களும் நானும் பக்குவப்பட வேண்டும் என்பது என் எண்ணம்... பக்குவப்படும்போது இறங்குவேன். அது எப்போன்னு இப்ப சொல்லமுடியாது. நான் அரசியலுக்கு வர்றதுன்னா இன்னும் அஞ்சு வருஷம் கழிச்சுக்கூட வரலாம் அதுக்கான வயசு எனக்கு இருக்கு... இப்போதைக்கு எனக்கு சினிமாதான் முக்கியம்.

விஜயகாந்த் தமிழ்த்திரைப்பட நடிகர் இந்தியாடுடே இதழ் பேட்டியில்.

******


இந்தியப் பாரம்பரிய அறிவியல் முறைகளைப் பாதுகாத்து, அதன் பயன்கள் தொடர்ந்து நமக்கு கிடைக்கச் செய்ய வேண்டும். நமது நாட்டில் அறிவியல் சிந்தனைக்கும் மதத்துக்கும் இடையே எந்தவிதப் பிணக்கும் இருந்ததில்லை.

நாட்டுக்கேற்ற பிராந்தியத் தேவைகளுக்கேற்ப சமூகநோக்கில் நமது இயக்க நிலை இருக்க வேண்டும். மனிதப் பயன்பாட்டுக்கான தொழில் நுட்பத்தை வளர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

வெளிநாட்டுத் தொழில்நுட்பத்தை ஏற்றுச் செயல்படுத்துபவைகளாக இல்லாமல் புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குபவைகளாக ஐஐடிகள் திகழ வேண்டும்.

ஐஐடிகளில் படிக்கும் மாணவர்கள் உயர் கல்விக்காக வெளிநாடு சென்றாலும்கூட தேசப்பற்றை மறந்துவிடக்கூடாது. நாட்டின் வளர்ச்சிக்காக அவர்கள் பங்களிப்புச் செய்ய வேண்டும்.

முரளிமனோகர் ஜோஷி, மத்திய அமைச்சர் சென்னை ஐஐடி பட்டமளிப்பு விழாவில்.

******


எந்த ஒரு கட்சியுமே பெண்களுக்கான இடஒதுக்கீட்டில் அதிக ஆர்வம் கொண்டிருக்க வில்லை. இந்தக் கசப்பான உண்மையைப் பெண்கள் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். தங்களுக்கான உரிமையை அளிக்குமாறு அரசியல் கட்சிகளிடம் கோரிக்கை விடுப்பதை விட்டுவிட்டு, அதற்கான வேறுவழிகளை, உத்திகளை அவர்கள் தேடிக் காண வேண்டும். மக்கள் தொகையில் பாதிப்பேர் பெண்களாக உள்ள ஒரு மக்களாட்சி நடைமுறையில் பெண்களை அலட்சியப் படுத்தவோ புறக்கணிக்கவோ அரசியல் கட்சிகளால் இயலாது. எனவே பெண்கள் தனியான ஒரு வாக்கு வங்கியாக மாறினால்தான் தங்களுக்குரிய இடத்தைப் பெற முடியும்.

நீரஜா செளத்திரி, இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டில்.

******


தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஊழியர்களை ஒடுக்கிய விதம் ஈரமற்றது, ஜனநாயக மரபுகளுக்கு முரணானது என்றெல்லாம் எதிர்க் கட்சித் தலைவர்களும், சில குறுகிய கண்ணோக்குடையவர்களும் கூறி வருகின்றார்கள். இவர்களுக்கு நான் மூன்று கோணங்களில் பதிலளிக்க விரும்புகிறேன். முதலாவதாக ஊழியர்களுக்காகக் கண்ணீர் விடும் அரசியல்வாதிகள் ஜெயலலிதாவை விமர்சிப்பதற்குப் பதிலாக, அவருக்கு நன்றி சொல்ல வேண்டும். ஏனென்றால், அவர்கள் இத்தனை ஆண்டு காலம் செய்யத் தவறியதைத் தான் அவர் தைரியமாகச் செய்து முடித்திருக்கிறார். அதாவது உடல் வணங்கி, ஊதியத்திற்குத் தகுந்த உழைப்பைத் தராதிருந்தவர்களுக்குப் பாடம் கற்பித்திருக்கிறார். இது மற்றக் கட்சி யினர் மறுபடி ஆட்சிக்கு வருவார்கள் என்று வைத்துக் கொண்டால், அவர்களுக்கும் நல்ல பயனை அளிக்கும்.

இரண்டாவது, எந்த அலுவலரிடமிருந்தாவது எந்தக் குடிமகனுக்காவது கனிவுடனும், மனித நேயத்துடனும், உடனுக்குடனும் வேண்டு கோள்களுக்கும், குறைகளுக்கும் நிவாரணம் கிடைத்திருக்கிறது என்று சரித்திரம் உண்டா? ஒரு சாதாரண குடிமகன் தன் நோயுற்ற குழந்தையையோ, உயிருக்கு மன்றாடும் வயோதிகத் தாய்-தகப்பனையோ, ஒரு அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரும்போது மறைந்திருந்து பாருங்கள். ஈரமின்மையின் உண்மையான இலக்கணம் தெரியவரும். அதேபோல, நியாய விலைக் கடையில் நுகர்வோர்கள் எடை விஷயத்திலும், பொருள் களைக் கலப்படம் செய்தும் ஏமாற்றப் படும்போது அதை மனிதநேயம் என்று சொல்வதா?

ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி திரு பி.எஸ். ராகவன் 'துக்ளக்'கிற்கு அனுப்பிய கட்டுரையின் ஒரு பகுதி.

© TamilOnline.com