வீசாக் காதல்
காலை ஆறு மணி. பெங்களூரின் காலைப் பனி வாகனங்களின் புகையால் இரக்கமின்றி கரைக்கப்பட்டுக் கொண்டிருந்தது. அரவிந்தன் தனது நான்கு மணிநேர தூக்கத்தை முடித்து மெல்ல எழுந்து உட்கார்ந்தான். அருகில் தூங்கிக் கொண்டிருந்த பாஸ்கரனை உலுக்கி எழுப்ப முயன்றான்.

"என்னடா மச்சி, இப்பதான் படுத்தேன்!" என்றான் பாஸ்கரன்.

"இன்னிக்கு 8 மணிக்கு சிவா நகர்ல இண்டர்வியூ இல்ல?"

உடனே எதையோ பறிகொடுத்து விடு வோமோ என்ற எக்கம் தாக்கியவனாய் பாஸ்கரன் குளியலறையை நோக்கி வேகமாய் நடந்தான்.

இவர்கள் உரையாடல் கேட்டு அறையில் மற்றவர்களும் மெல்ல எழத் தொடங்கினார்கள்.

அது அல்சூரில் உள்ள ஒரு ஒற்றை அறை வீடு. அதில் மொத்தம் ஒன்பது பேர் தங்கியிருந்தனர். எல்லோரும் ஒரே மொழிகூடப் பேசிக் கொள்ளவில்லை. அவர்களுக்கிடையே வயசு வித்தியாசமும் பலவாராக இருந்தது. ஆனால் ஒன்று பொதுவாக இருந்தது: அனைவரும் கணிப்பொறி சம்பந்தமாக படித்துவிட்டு வேலை தேடிக் கொண்டிருந்தனர். அமெரிக்காவிற்குப் பணிபுரியச் செல்வது பொதுவான குறிக்கோளாய் இருந்தது.

அவர்கள் குறிக்கோள் ஒன்றாய் இருப்பதால் மற்றவற்றைப் பற்றி கவலைப்படவில்லை. அவர்களில் ஒரு சிலருக்கு ஆசிரியராய் இருந்த ஒருவரும்கூட இருந்தார். அவரும் வேலை தேடிக்கொண்டிருந்தார்.

மணி 6.45 ஆனது. பாஸ்கரன் குளித்து வந்தவுடன், ''டேய் அரவிந்தா, நீயும் கிளம்பேண்டா. சேர்ந்தே போயிடலாம்'' என்றான்.

அரவிந்தனும் பதினைந்து நிமிடத்தில் கிளம்பினான். இருவரும் பேருந்து நிலையத்திற்குச் செல்லும் வழியில், மஞ்சுநாதா ·பாஸ்ட் ·புட்டில் 'இட்லி வடா' சாப்பிட்டனர்.

சிவாஜிநகர் வரை ஒன்றாகச் சென்றனர். அரவிந்தன் அங்கிருந்து வேறு பேருந்து மாறி செல்ல வேண்டியிருந்தது. பாஸ்கரனுக்கு வாழ்த்துச் சொல்லிப் பயணமானான். முன்தினம் காலை அரவிந்தனின் பழைய நண்பன் ஒருவன் கோரமங்களாவில் சில சிறிய மென்பொருள் நிறுவனங்களில் ஆள் எடுப்பதாய்ச் சொன்னான். அங்கு சென்று முயற்சி செய்யலாம் என்று கோரமங்களா பேருந்தில் ஏறினான். கன்னடம் கலந்த ஆங்கிலத்தில் கேட்டுப் பயணச்சீட்டு வாங்கிவிட்டு ஒரு ஜன்னலோர இருக்கையைத் தேடி அமர்ந்தான்.

கையில் வைத்திருந்த பையில் டை இருக்கிறதா என்று பார்த்துவிட்டு பயோடேட்டாவின் நகல்கள் எத்தனை உள்ளன என்று எண்ணிப் பார்த்தான். பேருந்து நகர்ந்தது.

மணி 7.40 ஆகியிருந்தாலும் பெங்களூரின் காற்றில் இன்றும் குளிர் இருந்தது. பேருந்து நகரவும் அரவிந்தனின் முகத்தில் தென்றல் ஒற்றிச் சென்றது. அந்த உணர்வு அவன் நினை வலைகளை எழுச் செய்தது. அப்படியே கண்களை மூடினான்...

பசுமையான நெல்லை மாவட்டம். அரவிந்தனின் தந்தை மதுரா கோட்சில் பணிபுரிந்ததால் அவர்கள் குடும்பம் பெரும்பாலும் விக்கிரமசிங்கபுரத்திலேயே வாழ்ந்தது. அப்போது பணிரெண்டாம் வகுப்பு முடித்து பொறியியற் கவ்லூரிக்கான நுழைவுத்தேர்வுக்காகப் படித்துக் கொண்டிருந்த சமயம். அரவிந்தன் தினமும் நெல்லை டவுன்வரை சென்று படிக்க வேண்டியிருந்தது. அப்படி ஒருநாள் பேருந்தில் பயணிக்கையில்தான் தாரிணியைப் பார்த்தான். அந்தப் பேருந்தை விட்டு விட்டால் வகுப்பிற்கு நேரமாகிவிடும் என்பதால் அவள் ஏற ஓடிவந்தாள்.

பேருந்து திடீரென நின்றது. எல்லோரும் ஒருமுறை திரும்பிப் பார்த்தார்கள். ஆனால் அரவிந்தன் மட்டும் அவள் ஏறியது, ஓட்டுனரைப் பார்த்து நன்றிப் புன்னகை புரிந்தது, உட்கார இடம் இருக்கிறதா என்று பார்த்தது, இவன் அருகில் ஓர் இடம் காலியாக இருந்தாலும் அவள் நின்றுக்கொண்டே பயணிக்க முடிவுசெய்தது என்று அவளைக் கவனிக்க ஆரம்பித்தான். அவன் வாழ்க்கையில் தாக்கம் உண்டாக்கிய இரண்டு பெண்களில் அவள் இரண்டாவதாக அமையவிருப்பது அப்பொழுது அவனுக்குத் தெரிந்திருக்கவில்லை.

முதலாவது பெண் அவன் தாய். அவன் தாய் என்றால் அவனுக்கு உயிர். அவள் நெல்லைத் தமிழில் பொழியும் பாசம் நினைக்கவே உருக்கமாய் இருந்தது.

மறுநாளும் தாரிணியை அவன் பார்த்தான். இந்தமுறை அவளுடைய துறுதுறுப்பும், தோழிகளிடையே செய்யும் குறும்புத்தனமும் அவனை ஈர்த்தது. அவளும் அரவிந்தன் சென்ற அதே கோச்சிங் சென்டருக்குதான் சென்றாள் என்பதை அறிய மகிழ்ச்சியாக இருந்தது.

எப்படியாவது அவளிடம் பேசிப் பழக வாய்ப்பு வராதா என்று அரவிந்தன் ஏங்கினான். ஒருநாள் ஓர் ஆசிரியர் பணிக்கு வரவில்லை என்பதால் அவள் வகுப்பை இவன் வகுப்போடு இணைத்து நடத்தினர். அந்த வகுப்பின் முடிவில் சந்தர்ப்பவசமாய் தாரிணியின் அறிமுகம் அரவிந்தனுக்கு கிடைத்தது.

நாட்கள் செல்லச் செல்ல அவர்களிடையே நட்பு வலிமையடைந்தது. ஒருவர் வீட்டிற்கு மற்றவர் சென்றனர். ஒன்றாகப் படித்தனர். சில நாட்கள் வெகுநேரம் அரவிந்தன் வீட்டில் தாரிணி இருந்து படித்துவிட்டு வீடு திரும்புகையில் அவளுடன் துணைக்குச் செல்லுமாறு அரவிந்தனின் தந்தை ராமநாதன் கூறுவார்.

நுழைவுத் தேர்வுக்கான பயிற்சிகள் முடிந்தது. இருவருக்கும் வேறுவேறு கல்லூரிகளில் இடம் கிடைத்துச் சென்றார்கள். கல்லூரிக்கு செல்லும் முன்னர் ஒருவரை ஒருவர் சந்திக்க கூட இல்லை. ஆனால் சந்திக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் இல்லை. அவன் சென்னையிலும் அவள் கோவையிலுமாய் ஒரு வருடம் கழிந்தது. விடுமுறைக்கு வரும் பொழுது அரவிந்தனின் அம்மா அவன் கேட்காமலேயே தாரிணியைப் பற்றி கூறினாள்.

இரண்டாம் ஆண்டு முதல் பருவத்தில் கோவையில் தாரிணி படித்த கல்லூரியில் விஞ்ஞானக் கண்காட்சி ஒன்று நடைபெற விருந்தது. அரவிந்தனின் கல்லூரியிலிருந்து அதில் கலந்து கொள்ளத் தன் பெயரை பதிவு செய்தான் அரவிந்தன்.

கண்காட்சிக்கு அரவிந்தன் ஒருநாள் முன்னதாகவே சென்றான். தாரிணியைக் கண்டுபிடிப்பது ஒன்றும் கடினமாக இல்லை. நீண்ட நாட்கள் தொடர்பில் இல்லாவிட்டாலும், பார்த்ததும் தயக்கமின்றி பேசிக் கொண்டனர். ஊரில் புதுதாய்க் கட்டியிருக்கும் சினிமா கொட்டகையிலிருந்து, இப்போது தேர்ந் தெடுக்கப்பட்டுள்ள தலைவரின் நடவடிக்கைகள் வரை எல்லாம் பேசினார்கள்.

தாரிணி அவனைக் கல்லூரியின் சிறந்த சிற்றுண்டி நிலையத்திற்கு அழைத்துச் சென்றாள். தான் இசை பயிலும் கூடத்தை அவனுக்கு ஒரு ஏழு வயது குழந்தை தன் தந்தையிடம் காட்டுவதுபோல் காட்டினாள்.

அந்தி சாய்ந்ததும் இருவரும் பிரிந்தனர். அரவிந்தன் குளித்துவிட்டு ஏதோ ஒரு பத்திரிக்கையைக் கையில் எடுத்துகொண்டு சாய்ந்தான். அந்தக் கணத்தில் அவன் விநோத மான எதையோ உணர்ந்தான். உலகில் அத்தனையும் அவனுக்கு அன்னியமாய்ப்பட்டது - தாரிணியைத் தவிர!

அவள் அவனுக்கு தோழியைவிட நெருக்க மாய்ப்பட்டாள். தாரிணி தன் அறைக்கு சென்று விளக்கணைத்துவிட்டு ஜன்னல் வழியே கோவை நகரை இரவு வெளிச்சத்தில் பார்த்தாள். அவள் அரவிந்தனுடன் நட்புக் கோட்டை மானசீகமாக மீறிச் சில நாட்கள் ஆகிவிட்டதை உணர்ந்தாள்.

அந்தச் சந்திப்பில் எதுவும் சொல்லாவிட்டாலும் அரவிந்தன் சென்னை சென்றதும் அவர்கள் காதலுக்கு முகவுரை எழுதினான். அவளும் அதற்குப் பச்சைக் கொடி காட்டி இசை பொதிந்த வாழ்த்து அட்டை அனுப்பினாள். காதல் வேர் விட்டு வளர்ந்தது. படித்து முடிக்கும்வரை கடிதம் மூலம் தங்கள் காதலைப் பரிமாறிக் கொண்டனர்.

கடைசியாண்டு தீபாவளிக்கு வீட்டிற்கு சென்றபோது தாரிணி தன் அம்மாவிடம் தம் காதலைப்பற்றிச் சொன்னாள். ஆனால் அவரோ அதிர்ந்துபோய் அவள் மனதை மாற்ற முயற்சித்தார். தான் ஊருக்குச் சென்றபின் அப்பாவிடம் எடுத்து சொல்லுமாறு தாரிணி அம்மாவிடம் சத்தியம் வாங்கிச் சென்றாள்.

அவர்கள் படிப்பு முடிந்தது. இருவருக்குமே வேலை கிடைக்கவில்லை.

வீடு திரும்பினான் அரவிந்தன். வந்ததும் அம்மா "நாலு வருஷமா சரியாவே சாப்பிட்டிருக்க மாட்டே! இப்போ என் கையால் சாப்பிடு" என்று சொல்லிச் சமைத்துப்போட்டாள். தந்தையும் ஆரம்பித்தில் பரிவாகவே இருந்தார். சமயம் கிடைக்கும்போது வேலைக்காகப் படிக்கச் சொன்னார்.

நாள் ஆக ஆக அவன் மனிதர்களின் நிறங்கள் மாறக்கண்டான். தன் தந்தையே சில ஆயிரம் பணத்தை முதலீடு செய்துவிட்டு வருமானம் வராமல் விரக்தி அடைந்த மனிதனைக் கண்டான். "கமலாவின் பிள்ளைக்கும் காமாட்சியின் தங்கை மவனுக்கும் அமெரிக்காவில வேலை கெடச்சுட்டுதா மேடா.." என்று கோவிலுக்குப் போய்விட்டு வந்த அம்மா வேதனையாகச் சொன்னது அரவிந்தனுக்கு முள்ளாய்த் தைத்தது.

அரவிந்தனுக்குத் தான் எந்த தவறும் செய்ததாய்த் தெரியவில்லை. பட்டப்படிப்பிலும் நல்ல மதிப்பெண்தான் பெற்றிருந்தான். பொருளாதார நிலைமையால் தனக்குவேலை கிடைக்காதது தன்னை எப்படித் திறமையற்றவனாய் ஆக்கும் என்பது புரியவில்லை.

அப்பா ராமநாதனைச் சொல்லியும் தவறில்லை. அவர் தினமும் அலுவலகத்திற்குள் நுழையும் பொழுது அவரைப்பற்றி விசாரித்தவர்களைவிட அரவிந்தனைப்பற்றி விசாரித்தவர்கள்தான் அதிகம். ஓராண்டிற்கு முன்னர் இவர்களெல்லாம் இவ்வளவு விசாரிக்கவில்லை என்பது ராமனாதனுக்குப் புரியவில்லை. இதற்கிடையில் தாரிணி படிப்பிற்குச் சம்பந்தமில்லாத ஒரு வேலையைப் பாளையங்கோட்டையில் ஏற்றுக்கொண்டாள்.

இவ்வளவு கஷ்டத்திற்கு இடையிலும் அகஸ்தியர் ·பால்சில் அவர்களது ரகசிய சந்திப்பில் அவள் கூறும் ஊக்கச் சொற்கள் அவனுக்கு மிகுந்த நம்பிக்கையை வளர்த்தது. கொஞ்ச நாட்கள் சென்று அரவிந்தனுக்கு அவன் நண்பன் பாஸ்கரனிடமிருந்து கடிதம் வந்தது. பெங்களூரில் வேலை தேடினால் சுலபமாக கிடைக்கிறது என்றான் பாஸ்கரன். இதைப்பற்றி தாரிணியிடம் கலந்தாலோசித்தான் அரவிந்தன். அவனை பெங்களூர் செல்லுமாறு சொல்லிவிட்டு, சைக்கிளின் பிடியைப்பற்றிக் கொண்டிருந்த அவன் கைகளைப் பற்றினாள். அது அவனுக்குப் பெரும் நம்பிக்கையை அளித்தது. வீட்டில் அனைவரிடமும் சொல்லவிட்டுத் தந்தையிடம் பணம் வாங்கிக்கொண்டு பெங்களூருக்குப் பயணமானான்.

ஆறுமாதங்களாயின. அவனுக்கு வேலை கிடைக்கவில்லை. பலநேரம் தந்தை அனுப்பும் காசு என்பதால் 'மதிய உணவா? பயடேட்டாவின் நகல் எடுப்பதா?' என்ற கட்டம்வர, பசியை இரவுவரை தள்ளிவைப்பான்.

தாரிணி அவன் வாழ்க்கை விளக்காய், குறிக்கோளின் அடிப்படையாய் ஜொலித்தாள். அவன் நம்பிக்கை இழந்திருக்கவில்லை. ஆனால் அவன் தந்தை கொஞ்சம் கொஞ்சமாக நம்பிக்கை இழக்க தொடங்கினார்.

பேருந்தின் நடத்துனர் ஏதோ உரக்கச் சொன்னது கேட்டு சுயநினைவுக்கு வந்தான் அரவிந்தன். அடுத்து தான் இறங்கவேண்டிய நிறுத்தம். மனசுக்குள் ஒருமுறை தாரிணியை நிறுத்திப் பார்த்தான்.

மாலையில் பாஸ்கரன், ''என்னடா ஆச்சு மச்சி! என்றான். இன்னிக்கு ஒன்னும் மாட்லடா!'' என்றான் சற்றே விரக்தியோடு. "சரி! வா ஊருக்கு ·போன் பேசிட்டு வரலாம்" என்று கிளம்பிச் சென்றனர்.

·போனுக்குச் செலவழிக்க அவனிடம் 16 ரூபாய் 65 காசுதான் இருந்தது. இதுதான் கடைசிப்பணம். தந்தையிடம் கொஞ்சம் பணம் கேட்கவேண்டும் என்று அதற்கான சமயத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான். வழக்கம்போல் தந்தை அவனை உச்சஸ்தாயில் தீட்டிக் கொண்டிருந்தார். அவன் எஸ்டிடி மீட்டர் 16 ரூபாயைத் தொட்டதைப் பார்த்தான். அவர் பேச்சை மறித்துப் பணம் கேட்டான். கோபம் உச்சமானவராய் ''ஏலே அரவிந்தா, இந்த பட்டணத்து பொளப்பெல்லாம் நமக்கு சரிப்படாதுலே' பேசாம நீ ஊருக்கு வா. ராணுவத்துல சேர்ந்து உன் தங்கச்சியைக் கரை சேர்க்கப் பார்ப்போம்'' என்றார்.

அவர் பேசிமுடிக்க அரவிந்தன் ·போனைத் தூண்டித்தான்.

இதற்கிடையில் இரண்டு முறை திருமணத்தைத் தட்டிவிடவே தாரிணியின் தந்தை சந்தேகப்பட்டு அவள் அன்னையின் மூலம் உண்மை அறிந்தார். ஆச்சரியப்படும்படியாக அவர் திறந்த மனதோடு இதைப்பற்றிப் பேச அரவிந்தன் வீட்டிற்கு சென்றார்.

ஆனால் ராமநாதனோ வேலை கிடைப்பது ஒன்றுதான் தன் மகனின் எல்லாத் தேவைகளுக்கும் அடிப்படை என்றவாறு பேசினார். அவனது உணர்வுகளுக்குக்கூட அவன் வேலை அவசியம் என்பது போல் கூறினார். அதனால் தாரிணியை வேறு யாருக்காவது திருமணம் செய்து தரும்படி கூறினார். தாரிணியோ அரவிந்தனின் தந்தை குணத்தை எடுத்துக் கூறிக் கெஞ்சினாள். அவரும் கொஞ்ச காலம் திருமணத்தைத் தள்ளிப்போடச் சம்மதித்தார்.

ஒருவாறாக அரவிந்தன் பெங்களூரில் சாதாரண வேலை ஒன்றில் சேர்ந்தான். இதைக் கேட்ட தாரிணி மிகவும் பூரிப்படைந்தாள். ஆனால் ராமனாதனோ குடும்பக் கடனையும், தங்கை திருமணத்தையும் நினைவுகூர்ந்து அமெரிக்கா செல்வதே வழி என்று கூறினார். ஏன் தன்னை ஒரு முதலீடாக இந்த சமுதாயம் பார்க்கிறது என்று அவனுக்கு விளங்கவில்லை.

மீண்டும் ராமநாதனைச் சந்திக்கச் சென்ற தாரிணியின் தந்தையை ராமநாதன் மிகவும் அவமானப்படுத்தினார். தன் மகனின் குறிக்கோளில் அவர் மகள் இடையூறாக இருக்கிறாள் என்றார் அவர்.

"ஒங்க மகளுக்கு வேற மாப்பிளயே கெடக்கலயா?" என்றார். இதைக் கேட்ட தாரிணியின் தந்தை அடுத்த மாதமே ஒரு மாப்பிள்ளைக்கு பேசி முடிவு செய்தார். அந்தத் திருமணத்தில் தனக்குச் சம்மதம் இல்லையென்று சொல்லி தாரிணி கதறினாள்.

அரவிந்தனிடம் சொல்லி அழுதாள். அரவிந்தனும் நடப்பது முற்றிலும் அநியாயமாகத் தோன்றினாலும் இருதலைக் கொள்ளியில் சிக்கிய எறும்பாய்த் தவித்தான். பெற்றோர்களின் சம்மதமின்றி செயல்படுவதிலும் அவர்களுக்கு நாட்டமில்லை. அரவிந்தன் தாரிணியின் தந்தையிடம் பேசி திருமணத்தை தள்ளிப் போட வேண்டினான். பயனில்லை.

செய்வதறியாமல், தாரிணி மணவறை ஏறினாள். அவளுக்கு திருமணம் நடந்த சில நாட்களில் அவனை அமெரிக்கா அனுப்ப அவன் நிறுவனம் முடிவு செய்தது. இதைக் கேட்ட அவன் தந்தை ராமநாதன் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். குடும்பத்தோடு பெங்களூர் வந்து அவனுக்கு வேண்டியவற்றை வாங்கிக்கொடுத்து வழியனுப்பினார்.

அமெரிக்கா வந்து இரண்டு ஆண்டுகள் உழைத்தான். அவன் தங்கையை நல்லமுறையில் திருமணம் செய்து கொடுத்தான். அவன் தங்கையின் திருமணத்திற்கு வந்தவர் மூலம் தாரிணிக்கு ஆண் குழந்தை இருப்பதை அறிந்தான். அந்தத் திருமணம் முடிந்து திரும்புகையில் அவன் பெற்றோர்களை அமெரிக்கா அழைத்து வந்தான்.

அமெரிக்காவில், ராமநாதன் அரவிந்தனுக்காகப் பார்த்திருந்த சில பெண்களின் புகைப்படங்களைக் காட்டினார். ''அரவிந்தா, உனக்கு எது பிடிக்குதுன்னு பாருய்யா!'' என்றார் புதிய பாசத்துடன். அப்பொழுது அரவிந்தன் மெத்தையில் கிடந்த புகைப்படங்களைப் பார்த்துவிட்டு, ஒருமுறை ராமநாதனைப் பார்த்தான். அவர் ''பார்த்தியாய்யா! எல்லாம் பெரிய இடத்து சம்பந்தம். அமெரிக்க விசா கிடைக்கிற வேலை வாங்குவாங்குன்னு சொன்னேனே! இப்போ என்ன நினைக்கிற...'' என்றார்.

அமெரிக்க விசாவினால், வீசாமலே போன தன் காதல் தென்றலைப் பற்றி நினைத்தான். அவன் கண்கள் கண்ணீர் வற்றிப் போயிருந்ததால் விரக்தியை மட்டும் வடித்தன. அவரை அமைதியாய்ப் பார்த்துவிட்டு உள்ளறைக்குச் சென்றான்.

அவன் வாழும் இந்த வாழ்க்கையின் அர்த்தத்தைத் தொலைத்தவனாய் அட்லாண்டா நகரின் இரவு வெளிச்சத்தை வெறித்துப் பார்க்கத் தொடங்கினான்.

புதிய பாரதி

© TamilOnline.com