அன்புள்ள சித்ரா அம்மையாருக்கு,
நான் உங்கள் பகுதியைக் கடந்த 5-6 இதழ்களாகப் படித்துக்கொண்டு வருகிறேன். எப்போதும் பெண்கள் பிரச்சினையையே எடுத்துக்கொண்டு எழுதுகிறீர்கள். 'அன்புள்ள சிநேகிதியே என்றால்' பெண்கள் மட்டும்தான் எழுதலாமா? பெண்களுக்கு மட்டும்தான் பிரச்சினையா? அதிலும் கணவர்களைப்பற்றிக் குறைகூறியே வேறு எழுதுகிறார்கள்.
ஆண்களும் பெண்கள் கையில் மாட்டிக் கொண்டு எவ்வளவு திண்டாடுகிறார்கள் என்று உங்களுக்குத் தெரிவிக்க நான் ஒருவனே போதும். என்னுடைய பிரச்சினை தீர ஆலோசனை சொல்லுங்களேன்.
சின்ன வயதில் அப்பா இறந்துபோய் மாமன் ஆதரவில்தான் நானும் என் அம்மாவும் இருந்தோம். என்னை நன்றாகப் படிக்க வைத்தார் - பிற்காலத்தில் அவர் மகளை நான் கட்டிக்கொள்வேன் என்று. அப்படித்தான் ஒரு விருப்பு வெறுப்பு இல்லாமல் மாமன் மகளுக்குத் தாலிகட்டினேன்.
எனக்கு வாய்த்திருப்பவள் தாயா, பேயா என்று இன்னும் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஒரே பெண், சின்ன வயதில் ஏக செல்லம். அதிகாரம். எதற்கு எடுத்தாலும் ஒரு தர்க்கம். குடும்ப நிம்மதிக்காக அவள் வழிக்கே விட்டுவிட்டேன். ஆனால் எனக்குத் தலைவலி வந்தால்கூடப் பொறுக்க மாட்டாள். அத்தனை கடவுளர்க்கும் வேண்டுதல்கள் பறக்கும்.
இப்போதுகூட, போன வருஷம் எனக்கு ஏதோ வயிற்றுவலி வந்தது என்று வேண்டுதலை நிறைவேற்ற இந்தியா போயிருக்கிறாள். வர 2 மாதம் ஆகும். அந்த தைரியத்தில்தான் எழுதுகிறேன்.
அவள் பேச்சில் நியாயம் இருந்தாலும் கறாராக எல்லோரிடமும் பேசுவாள். சண்டை போடுவாள். சத்தம்போட்டுச் சிரிப்பாள். ஏன் இப்படிச் செய்கிறாய் என்று கேட்டால் இடி, மின்னல், மழை. இவளை எப்படி வழிக்குக் கொண்டு வருவது?
சிநேகிதரே,
முதலில் இந்த 'அன்புள்ள சிநேகிதியே' பகுதியைப்பற்றி உங்கள் சந்தேகத்தைத் தீர்த்துவைக்கிறேன். அப்புறம் உங்கள் பிரச்சனைக்கு வருவோம்.
கேள்விகள் எனக்கு எழுதப்படுவதால் 'சிநேகிதியே' என்று குறிப்பிட்டு இருக்கிறது. ஆண்கள், பெண்கள் யார் வேண்டுமானாலும் எழுதலாம். என்னுடைய அனுபவத்தில் பெண்கள்தான் பெரும்பாலும் தங்கள் பிரச்சினைகளை வெளிப்படையாகத் தெரிவித்து வழிகாண விரும்புகிறார்கள். ஆண்கள் தங்கள் உணர்ச்சிகளையோ, உள்ளக் குமுறல்களையோ தங்களுக்குள்ளேயே அடக்கி வைத்துக்கொள்ளப் பார்ப்பார்கள். எல்லோரும் அப்படியென்று சொல்லவில்லை. இந்தப் பகுதியில் பெயரையோ, ஊரையோ வெளிப்படுத்துவதில்லை. ஆகவே ஆண், பெண் பாகுபாடில்லாமல் எழுதினால், படிப்பவர்களுக்கு மனித உறவுகளைப்பற்றி வேறொரு கண்ணோட்டத்தில் புரிவதற்கு வாய்ப்பு இருக்கும் என்று நம்புகிறேன்.
உங்களுக்கு பதில் எழுதும்போது, சில வருடங்களுக்கு முன்பு இந்தியா சென்றபொழுது சந்தித்த ஒரு குடும்பம் நினைவுக்கு வருகிறது. அந்த மனைவி நீங்கள் சொல்வதுபோல இருந்தாலும் அந்தக் கணவர் மிகவும் நிம்மதியாக இருந்தார். நான் அந்தக் கணவரைக் கேட்டேன் "எப்படிச் சமாளித்துவருகிறீர்கள்?" என்று. அவர் சொன்னார்: "என் அப்பா எப்போதும் சொல்வார், 'ஒன்று அடக்கு, இல்லாவிட்டால் அடங்கிவிடு' என்று. நானும் யோசித்துப் பார்த்தேன். இவள் என்னை நன்றாகக் கவனித்துக் கொள்கிறாள். குழந்தைகளை நன்றாகப் பராமரிக்கிறாள். அதிகாரம் பண்ணுவதில் அவளுக்கு அதிக ஆசை. எனக்கோ அதிகாரம் கொடுத்தாலும் நான் அதை உபயோகிக்கப் போவதில்லை. அவளே வாழ்க்கையில் அடிபட்டு, காரம் குறைந்து, கனிந்து வரட்டும். அவள் அடிப்படைக் குணத்தை என்னால் மாற்றமுடியாது. நான் என் தொழிலில் சந்தோஷமாகக் கவனம் செலுத்தப்போகிறேன் என்று முடிவெடுத்தேன்" என்றார்.
"உங்கள் மனைவி சத்தம் போட்டால் என்ன செய்வீர்கள்?" என்று கேட்டேன்.
"டி.வியில் ஏதோ சண்டைக் காட்சி வருகிறதென்று நினைத்துக்கொண்டு, என் கம்ப்யூட்டர் முன்னால் உட்கார்ந்துகொண்டு இருப்பேன். மிகவும் கத்திக்கொண்டே இருந்தால், ரொம்ப சாந்தமாகப் பதிலளித்து விட்டு, வெளியே போய்விடுவேன். திரும்பி வரும்போது, புயல் ஓய்ந்து அடங்கியிருக்கும். சண்டை போட்ட குற்ற உணர்ச்சியில் சாப்பிடாமல் காத்திருப்பாள். நான் நடந்ததைப் பற்றியே பேசாமல் சாதாரணமாக அவளுடன் சாப்பிட்டுத் தூங்கப் போய்விடுவேன். அன்று அவள் போட்ட ஆர்ப்பாட்டத்தை மறுபடியும் post-mortem செய்யமாட்டேன். இப்போது அவளும் வழிக்கு வந்து கொண்டிருக்கிறாள்" என்றார்.
இப்போது உங்கள் மனைவியைப் பற்றிச் சிறிது யோசிப்போம். அவர் உங்கள்மேல் உயிரையே வைத்திருந்தாலும், அந்த அன்பை ஆசையில் காட்டாமல், அதிகாரத்தில் காட்டுகிறார்.
நீங்களோ நல்ல குணம் படைத்து, நன்றி மறவாமல் உங்கள் மாமன் மகளை மணம் செய்து கொண்டிருக்கிறீர்கள். இருந்தாலும் அது நன்றிக் கடனாக இருந்துவிட்ட காரணத்தால் அவர்மேல் அன்பை வளர்த்துக் கொள்ளத் தெரியாமல், குறைகளை மட்டுமே எடுத்துக்கொள்ளத் தோன்றுகிறது. மனதால் விலகிப் போய்க்கொண்டே இருக்கிறீர்கள். உங்கள் மனைவி உங்கள் அன்புக்கு ஏங்கி (attention seeking என்று சொல்வார்கள்) அதனால் சப்தம் போட்டுக் கொண்டே இருக்கலாம்.
உங்கள் மனைவியைவிட நீங்கள் மனதில் முதிர்ச்சியடைந்தவராக இருந்தால், உங்கள் கண்டிப்பையும் கனிவாக வெளிப்படுத்தி, அவர் பேரில் அன்பாக இருந்து பாருங்கள். அப்படியும் பயன் இல்லையென்றால். நான் குறிப்பிட்ட நண்பர் செய்தது போல் செய்து பாருங்கள்.
வாழ்த்துக்கள், சித்ரா வைத்தீஸ்வரன் |