ராகு கேது திருநாகேஸ்வரம்
பக்தரைக் காத்தருளும் மகேசன் கோயிலில் அங்கே அவனை வழிபட்ட மற்றொரு கிரகத்தின் சன்னிதியும் பிரசித்தி பெற்று வழங்கும் அதிசயத்தைக் கும்பகோணத்துக்கு அருகிலுள்ள ஒரு கோயிலில் காணலாம். அதுதான் நாகநாதசுவாமி கோயில். இக்கோயில் ராகு பகவானுக்குரிய விசேஷ தலமாகும். நாகராஜனாகிய ராகு இங்குள்ள சிவபெருமானை வழிபட்டதால் இக் கோயிலின் மூலவர் நாகநாதசுவாமி என்றழைக்கப்படுகின்றார்; இவ்வூரும் திருநாகேஸ்வரம்என்று அழைக்கப்படுகின்றது.

இராமேஸ்வரம், காளஹஸ்தி, திருக்களர் போன்ற ராகு பகவான் தலங்கள் பல இருந்த போதிலும் இந்தத் தலத்திற்குத் தனிச் சிறப்பு ஒன்றுண்டு. நாகநாதசுவாமி கோயிலின் தென் மேற்கு மூலையில் தன் இரு தேவிமாருடன் ராகு தனிக்கோயிலில் அமர்ந்து காட்சி அளிக்கின்றான்.

ராகுவின் பிறப்பு வரலாறும் கிரகச்சிறப்பும் சுவை நிரம்பியவை: ராஜவம்சத்து மன்னன் ஒருவனுக்கும் அசுரகுலப் பெண்ணொருத் திக்கும் மகனாகப் பிறந்தவன் ராகு. தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடையும்போது அசுரனாகிய ராகு உருமாறி தேவர்கள் வரிசையில் சேர்ந்து மஹாவிஷ்ணுவிடமிருந்து அமிர்தத்தைப் பெற்று உண்டு விட்டான். உண்மை அறிந்த மஹாவிஷ்ணு கையிலிருந்த அகப்பையால் அவனது மண்டையில் அடிக்க தலை வேறு உடல் வேறாகி விழுந்தான். ஆனாலும் அமிர்தம் உண்ட மஹிமையால் அவன் தலைப்பகுதியில் உயிர் இருந்தது. ராகுவும் தவறுக்கு வருந்தி இறைவனை வேண்டி நிற்க. இறைவன் பாம்பின் உடலை அவனுக்குக் கொடுத்து அவனை ஒரு நிழல் கிரகமாகவும் ஆக்கினார்.

விஞ்ஞான அடிப்படையிலும் இக்கிரகத்தை விளக்கலாம். சூரியனைப் பூமி சுற்றுவதைப் போலவே சந்திரனும் பூமியைச் சுற்றி வருகிறது. பூமி தன்னைத்தானே சுற்றிக்கொண்டு சூரியனைச் சுற்றி வருகையில் அதன் பயணம் ஒரு நீண்ட வட்ட மார்க்கத்தில் போய்க் கொண்டிருக்கும். சந்திரன் பூமியைச் சுற்றும்போது மேல் நோக்கிப் போகும் மார்க்கத்தில் ஒரு முறையும், கீழ் நோக்கி வரும்போது ஒரு முறையும் ஆக தன்னுடைய வழியில் இரண்டு முறை பூமியைச் சந்திக்கின்றது. இவற்றில் மேல்நோக்கிப் போகையில் குறுக்கிடும் கிரகம் தான் ராகு. அதேபோல் கீழ் நோக்கி வருகையில் பூமிக்கும் சந்திரனுக்கும் குறுக்கே வருவது கேது என்ற இன்னொரு நிழல் கிரகமாகும். ராகுவை ascending node என்றும் கேதுவை descending node என்றும் ஆங்கிலத்தில் அழைக்கின்றனர்.

தமிழில் ஞாயிறு முதல் சனி வரை ஏழு நாட்கள் ஏழு கிரகங்களாக அழைக்கப்படுகின்றன. இவற்றுடன் இந்த நிழல் கிரகங்களும் சேர நவகிரகங்களாக வைத்து எண்ணப்படுகின்றன. இதைப்போலவே ஒவ்வொரு கிரகத்துக்கும் தினமும் பொழுது இருப்பது போலவே ராகுவுக்கும் கேதுவுக்கும் ஒவ்வொரு நாளிலும் ஒன்றரை மணி நேரம் அளிக்கப்பட்டுள்ளது. ராகுவுக்கு உள்ள நேரந்தான் ராகு காலம் என்றும் கேதுவுக்கு உள்ள நேரம் எமகண்டம் என்றும் வகுக்கப்பட்டுள்ளது. தனக்கென்று சொந்த இடம் (ராசி) இல்லாத ராகுவும் கேதுவும் ஒவ்வொரு ராசியாக நகரும். ஒன்றிலிருந்து இன்னொரு ராசிக்கு நகர ஒண்ணரை ஆண்டுகளாகும். இவ்வாறு நகரும் நாட்களைத் தான் ராகு கேது பெயர்ச்சி என்கிறோம்.

கோயிலைப் பற்றிய சிறப்பான செய்திகள்:

இங்குள்ள நாகநாதசுவாமிக்கு ஷண்பகாரண் யேசுவரர் என்ற பெயரும் உண்டு. காரணம் இக்கோயிலின் தல விருட்சம் ஷண்பகமரம். இறைவி பெயர் மிகவும் அழகான தமிழ்ப்பெயர். 'பிறையணி வாள் நுதல் அம்மை' என்பதாம் (நுதல் = நெற்றி). இது தவிரத் தனிக்கோயிலில் மற்றொரு இறைவியாக 'கிரி குஜாம்பிகை' சந்நிதி உள்ளது. இங்கு அன்னை தவக்கோலத்தில் காட்சி அளிக்கின்றாள். சிலையாக வடிக்கப்படாத அம்மனுக்கு அபிஷேகம் கிடையாது. தை மாதத்தில் தைலக்காப்பு மட்டுமே சாத்தப்பெறும்.

தென் மேற்கில் கோயில் கொண்டுள்ள ராகு தன் தேவியர் இருவருடன் காட்சி தருகின்றார். இவருக்குகந்த நிறம் நீலம் என்பதால் அணிகின்ற ஆடை மட்டுமல்ல, இவருக்குச் செய்கின்ற பாலாபிஷேகத்தின்போது அபிஷேகம் ஆகி வழிகின்ற பாலின் நிறமும் நீலமாகிவிடுகின்ற அதிசயத்தைப் பார்க்கலாம். இவருக்குகந்த மலர் மந்தாரை.

இக்கோயிலில் கண்ட இன்னொரு அதிசயம்: 1986ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16ஆம் நாள் ராகு பகவானின் மீதிருந்து பாம்பு தோலுரிப்பது போலவே ஐந்தரை அடி நீளமுள்ள தோல் உரிந்து விழுந்ததாம். அதை எடுத்து பத்திரப் படுத்திக் கண்ணாடிப் பேழைக்குள் வைத்திருக்கின்றனர். இறைவனைத் தரிசிக்க வரும் பக்தர்கள் பார்வைக்குக் காட்சிப் பொருளாக வைக்கப் பட்டிருக்கின்றது. ஐந்து அடுக்குகளைக் கொண்ட நான்கு கோபுரங்களோடு பிரம்மாண்ட மாகக் கட்டப்பட்டுள்ள இக்கோயிலில் சேக்கிழாருக்கென ஒரு சந்நிதியும் 63 நாயன்மார்களின் உருவச்சிலைகளும் இடம் பெற்றுள்ளன.

தீர்த்தம்: இத்தலத்தில் ஒரு காலத்தில் பன்னிரண்டு தீர்த்தங்கள் இருந்கதாகக் குறிப்புக்கள் உள்ளன. இன்று கோயிலின் உள்ளேயே சூரிய புஷ்கரிணி என்ற ஒரு தீர்த்தம் காணப்படுகின்றது. இத்தீர்த்தத்தின் வலப் பக்கத்தில் நூற்றுக்கால் மண்டபம் அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் காணப்படுவதோடு ஒரு தேரின் மீது இம்மண்டபம் அமைந்திருப்பதுபோல மண்டபத்தின் கீழே கற்களாலான சக்கரங் களுடன் சுற்றிலும் நாட்டியமாடுவதுபோன்ற பாவங்களில் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. "பக்திச் சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவி வலவ" என்று மஹாவித்துவான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை அவர்களால் பாராட்டப்பட்ட பெரிய புராண ஆசிரியர் சேக்கிழார் பெருமான் திருநாகேஸ்வரரின்மேல் கொண்ட அபரிமிதமான ஈடுபாட்டின் காரணமாகத் தம்முடைய சொந்த ஊரான குன்றத்தூரில் தாம் கட்டிய கோயிலுக்கும் திருநாகேஸ்வரம் என்றே பெயரிட்டுள்ளார். இவருக்குத் திருவடிஞானம்கிடைத்ததும் இத்தலத்திலேதான் என்பது இன்னுமொரு சிறப்பாகும்.

இங்கே வழிபட்டு கௌதமர் அகலிகையோடு மீண்டும் இணைந்தார்; நளன் தன் இழந்த செல்வத்தை மீண்டும் பெற்றான்; பாண்டவர்கள் தாங்கள் இழந்த நாட்டை மீண்டும் பெற்றனர். சைவ சமயக் குரவர் அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகியோர் பாடிப் பரவியுள்ள தலமாகும். அருணகிரியார் தம் திருப்புகழ் ஒன்றில் "அருள் நாகேச நாமத் தகப்பன் மெச்சிய பெருமாளே" என்று இத்தலத்தைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். இக்கோயிலில் காணப்படும் கணக்கற்ற கல்வெட்டுக்கள் கோயிலின் வளர்ச்சிக்கும், திருவிழாக்களுக்கும், கும்பாபி ஷேகங்களுக்கும் மண்டபங்களின் விஸ்தரிப்புக் களுக்கும் சோழர், பல்லவர், வள்ளல்கள், அன்பர்கள் போன்றோர் அளித்துள்ள பங்கினை விளக்குகின்றன. இன்று இக்கோயில் இந்து அறநிலைய ஆட்சித் துறையின் பொறுப்பில் நிர்வகிக்கப்படுகின்றது.

சேக்கிழாரின் ஈடுபாடு கண்டு இக்கோயிலில் ஆண்டு தோறும் வைகாசிப் பூச நன்னாளில் சேக்கிழார் திருவிழா நடைபெறுகின்றது. கார்த்திகை மாதத்தில் 10 நாட்கள் பிரம்மோத்சவம் நடைபெறும். பிரதோஷம் இங்கு விமரிசையாகக் கொண்டாடப்படும். பிரதி ஞாயிறுதோறும் மாலை ராகு கால நேரத்தில் ராகுவுக்குப் பாலாபிஷேகம் நடைபெறுவது மிகச் சிறப்புடையது. ராகுவைப் போலக் கொடுப்பாரும் இல்லை; கேதுவைப்போல் கெடுப்பாரும் இல்லை என்பது பழமொழி.

டாக்டர் அலர்மேலு ரிஷி

© TamilOnline.com