நவராத்திரி ஸ்பெஷல்
சுண்டல்கள் பலவிதம்!

நவராத்திரியில் தினமும் மாலையில் ஏதாவது ஒரு சுண்டல் செய்வது வழக்கமாக இருந்து வருகிறது. இங்கு இந்தியாவை விட அதிகம் பலவிதமான காய்ந்த பயறு வகைகள் (dried legumes) கிடைக்கின்றன. இதில் ஏதாவது ஒன்றை நன்றாகத் தண்ணீரில் சுத்தம் செய்து குறைந்தது ஐந்து மணி நேரமாவது ஊறவைக்க வேண்டும். சமையல் சோடா, உப்பு போடாமல் ஊறவைக்க வேண்டும். சமையல் சோடாவை வேகவைக்கும்போதும் சேர்க்கக் கூடாது. எளிதில் வெந்துவிடும் என்று சிலர் சேர்ப்பதுண்டு. உணவில் உள்ள தேவையான சத்துக்களை இது அழித்துவிடும்.

கார சுண்டல்

தேவையான பொருட்கள்

கொண்டைக்கடலை, சன்னா, பாசிப்பயறு, மொச்சை, பட்டர் பீன்ஸ், வெள்ளை அல்லது சிவப்புக் காராமணி, கொள்ளு, ராஜ்மா, வெள்ளை பீன்ஸ், லிமா பீன்ஸ், சோயா பீன்ஸ், பிண்டோ பீன்ஸ், வேர்க்கடலை இவற்றில் ஏதாவது
ஒன்று - 2 கிண்ணம்
கடுகு - 1/2 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
பெருங்காயத் தூள் - சிறிதளவு
தாளிப்பதற்கு: சமையல் எண்ணெய் - 1 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 2
தேங்காய்த் துருவல் - 1 மேசைக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
பச்சை மிளகாய் (சிறிதாக நறுக்கியது) - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 5

செய்முறை

நன்றாக ஊறிய பயறை, தண்ணீரை வடித்துவிட்டு நன்கு வேகவிடவும். பிரஷர் குக்கரில் எளிதாக வெந்துவிடும். குழையாமல் பார்த்துக்கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு போட்டு வெடித்ததும், உளுத்தம் பருப்பு போட்டு பொன்னிறமான பின்பு பச்சை மிளகாய் போட்டு வதக்கி, மிளகாய் வற்றலை ஒன்றிரண்டாக ஒடித்துப் போடவும். கறிவேப்பிலை, வெந்த பயறு, உப்பு, பெருங்காயம் ஆகியவற்றைப் போடவும்.

கடைசியில் தேங்காய்த் துருவல் போட்டு ஒன்று அல்லது இரண்டு நிமிடங்கள் கிளறி அடுப்பிலிருந்து இறக்கவும்.

கடலை பருப்பு, பாசிப் பருப்பு இவற்றை ஊறவிடாமல் தண்ணீரில் அலம்பி ப்ரஷர் குக்கரில் ஒரு விசில் (whistle) வந்ததும் இறக்கவேண்டும். இவை எளிதில் வெந்துவிடும். மற்ற செய்முறை எல்லாம் மேலே கூறியபடிதான்.

மேற்கூறிய எல்லாக் கார சுண்டலுக்கும் கடைசியில் சிறிது எலுமிச்சைச் சாறு கலந்தால் சுவையாக இருக்கும்.

சரஸ்வதி தியாகராஜன்

© TamilOnline.com