'திருக்குறள்' ராம் மோகன்
பிரம்மாண்டமான டிரென்டன் போர் நினைவரங்கு. மேதகு இந்தியக் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்கள் ஐ.எஸ்.டி.என். தொலைத் தொடர்பு வழியாக வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை மாநாட்டுப் பேராளர்களுடன் உரையாடி, உலகத் தமிழ் மொழி அறக்கட்டளையின் அறிவியல் வீடியோ மொழிபெயர்ப்புத் திட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேச இருக்கிறார். 1500 பேர் ஆவலோடு குழுமியிருக்கிறார்கள். நிகழ்ச்சியை அறிமுகப்படுத்த மேடையேறுகிறார் ராம்மோகன். உலகத் தமிழர்கள் பலர் துணையோடு திருக்குறள் நூலை பைபிள் சிறப்புப் பதிப்பு வடிவத்தில் வெளியிட்டதால் 'திருக்குறள்' ராம்மோகன் என்று அன்புடன் அழைக்கப்படுபவர்.

நெடிதுயர்ந்த தோற்றம். மிடுக்கான மாநிறம். அளந்து வைத்தாற் போன்ற பேச்சு. பலர் பல மாதங்களாய் உழைத்து ஏற்பாடு செய்த இந்த நிகழ்ச்சி நன்றாக நடக்கவேண்டுமே என்ற கவலையோ, ஒரு பில்லியன் மக்களின் தலைவரோடு நேரடியாகப் பேசப்போகிறேமே என்ற படபடப்போ இருந்திருந்தால் அவர் முகத்தில் ஏதும் தெரியவில்லை. பல முறை ஒத்திகை செய்திருந்தாலும், தொழில் நுட்பச் சிக்கல்களால் தடங்கல் ஏற்பட நேரிடும் என்று முன்னுரையில் அவர் தெரிவித்த போதும் குரலில் எந்த நடுக்கமும் இல்லை. சொல்லியது போலவே சில சிக்கல்கள் ஏற்பட்டுப் பழுது பார்க்கும்போதும் நிகழ்ச்சியைத் தடங்கல் ஏதும் இல்லாமல் நேர்த்தியாக நடத்திய பாங்கு எதற்கும் தயார் என்ற மனத் திட்பத்தைக் காட்டியது.

அந்த ஒரு மணி நேர நிகழ்ச்சியில், ஒரு நேர்மையான, பண்பட்ட, இலக்கிய நுண்ணுணர்வு கொண்ட தலைவர் கலாம் தம்மோடு குடும்பத்தில் ஒருவராகப் பழகியது போல் உணர்ந்தவர்கள் பலர். நிகழ்ச்சி முடிந்த பின்பு, ஆரவாரமில்லாமல் ஒதுங்கி நின்ற ராம்மோகனைத் தேடி வந்து, கண்ணீர் மல்க, எங்கள் வாழ்வின் ஓர் ஒப்பற்ற நினைவைத் தந்ததற்கு நன்றி, உங்கள் திட்டத்துக்கு நாங்கள் எப்படி உதவி செய்ய முடியும் என்று பலர் வரிசை வரிசையாக வந்து பேசும்போதுதான் ராம் மோகனின் குரலிலும் முகத்திலும் நெகிழ்ச்சி தெரிகிறது. நாமும் அவரை அணுகி, "தென்றல்" சார்பில் வாழ்த்தி, நேர்காண அனுமதி கேட்கிறோம்.

தென்றல்: வணக்கம், திரு. ராம்மோகன்! அதிபர் கலாம் உங்களுக்கு எப்போது அறிமுகமானார்?

ராம்: உலகத் தமிழ் மொழி அறக்கட்டளையின் முதல் திட்டம் "திருக்குறள், தமிழ்ப் பண்பாட்டுக் கையேடு, தமிழின வழிகாட்டி" என்ற நூல். 1991ல் தொடங்கிய இந்தத் திட்டத்தில் உலகெங்கும் உள்ள பல தமிழ் ஆர்வலர்கள் பத்தாண்டுகளாகத் தொடர்ந்து உழைத்தார்கள். அரும்பாடு பட்டு உருவாக்கிய இந்த நூலை வெளியிடும் வேளையில், நூலை வெளியிடத் தக்க ஒருவரைத் தேடினோம். அப்போது புகழ் பெற்ற விஞ்ஞானியாய் மட்டும் இருந்த டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் திருக்குறளைத் தன் ஆசானாக, வாழ்க்கைத்துணை நூலாகப் பின்பற்றி வாழ்ந்து வருவதை அறிந்து அவரை அணுகினோம். எங்கள் முயற்சியைப் பற்றிப் பொறுமையாகக் கேட்டு, அதன் ஆழத்தைப் புரிந்து கொண்டு, எங்கள் நூலை அனுப்பச் சொன்னார். அந்த நூலைப் படித்த பின்பு அவர் உடனே எங்களை அழைத்து இது அற்புதமான புத்தகம் என்று பாராட்டி இந்த நூல் வெளியீட்டு விழாவுக்குத் தலைமை தாங்கச் சம்மதித்தார். சொன்னது போலவே, ஜனவரி 2000இல், காமராஜர் அரங்கில் டெல்லியில் இருந்து வந்து இந்த நூலை வெளியிட்டார். தொலைபேசியில் மட்டும் ஓரிரு மாதங்கள் அவருடன் பேசியிருந்த எனக்கு, அப்போதுதான் அவரை முதன்முதல் நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது.

தெ: விஞ்ஞானி கலாம் இந்தியாவின் குடியரசுத் தலைவர் கலாமாகப் பதவியேற்ற பின்னரும் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை மாநாட்டில் உங்கள் அறிவியல் வீடியோ மொழிபெயர்ப்புத் திட்டத்தைத் தொடங்கி வைக்க எப்படி ஏற்பாடு செய்தீர்கள்?

ரா: அறிவியல் வீடியோ மொழிபெயர்ப்பு எங்கள் இரண்டாவது பெரிய திட்டம். இதைத் தொடங்கி வைக்க அதிபர் கலாம் இன்னும் பொருத்தமானவராகத் தெரிந்தார். அவர் பெரிய விஞ்ஞானி மட்டுமல்ல, தமிழ்க் குழந்தைகளின் மேல் மிகுந்த பற்று உள்ளவர். நாங்கள் என்ன சொல்கிறோமோ, அது எங்கே செல்ல வேண்டும் என்று விரும்புகின்றோமோ, அதை அவர் ஏற்கனவே அடிக்கடிப் பல தமிழகப் பள்ளிகளில் சென்று சொல்லிக்கொண்டே வருகிறார். எனவே எங்கள் திட்டத்தை அவரிடம் கூறிய போது நல்ல திட்டம்தான் என்று வரவேற்றார். இது அமெரிக்கத்தமிழர்கள் கூடி உருவாக்கிய திட்டம் என்பதால் இதைத் தொடங்கி வைக்க வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை மாநாடு பொருத்தமாக இருக்கும் என்று எண்ணினேன்.

மாநாடுகள் வெறும் கூடிக் கலையும் கூட்டங்களாய் மட்டும் இல்லாமல், பெரும் மாற்றங்களுக்கு வித்திட வேண்டும், உந்துதல்களுக்கு வழிகாட்ட வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் பேரவை மாநாட்டில் இதைச் செய்யவேண்டும் என்று நான் வேண்டிய போது மாநாட்டுத் தலைவர் சிவராமன் ஆர்வத்துடன் இதை வரவேற்றார். ஆனால், அதிபர் கலாம் நாட்டின் குடியரசுத் தலைவராய் இருப்பதால், முறையாக அரசு மரியாதையோடு தான் இங்கு வரவேண்டியிருக்கும். எனவே தொலைத் தொடர்புமூலம் பங்கேற்கலாம் என்று நான் பரிந்துரைத்ததை அதிபர் கலாமும் ஆர்வத்துடன் ஏற்றுக் கொண்டார்.

தெ: ஒரு பக்கம் ஒரு பில்லியன் மக்களின் தலைவரோடு மக்கள் முன் நேரடியாகப் பேசுவதில் கவனம். மறு பக்கம், அரும்பாடு பட்டு ஏற்பாடு செய்த தொலைத்தொடர்பில் தொழில் நுட்பச் சிக்கல்கள். இத்தனைக்கும் நடுவில் ஒரு பதட்டமும் காட்டாமல் நீங்கள் எப்படி இருக்க முடிந்தது?

ரா: ஏனென்றால், எனது ஆதார சுருதி திருக்குறள். பகட்டுக்காகவோ, வெற்றுச் சொல்லாகவோ சொல்லவில்லை. குறள் எனது ரத்தத்தில் ஊறியிருக்கிறது. என்னுடைய பார்வையில், எந்தப் பணி செய்தாலும், வாழ்வில் என்ன கஷ்டங்கள் வந்தாலும் அவ்வளவிற்கும் விடைகள் திருக்குறளில் இருக்கிறது என்று முழுமையாக நம்புகிறேன். அதனால். அந்த ஆதாரத்தின் பலமும், எதையும் சமாளிக்க முடியும் திறனும் எனக்கு வந்தது என்று நினைக்கிறேன். திருக்குறள் வெளியீட்டு விழாவில் டாக்டர் கலாமும் அதைத்தான் சொன்னார். நாங்கள் முதன்முதலில் அனுப்பிய திருக்குறள் நூலை அவர் புரட்டும்போது அவர் கண்ணில் பட்டது 666வது குறள் "எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியர் திண்ணியர் ஆகப் பெறின்." அதைத்தான் அவர் தனது சொந்தக் குறளாகவும் கடைப்பிடித்து வந்திருப்பதாகச் சொன்னார்.

அதனால், எதையுமே நீங்கள் சிறப்பாகச் செய்ய வேண்டும் என்று விரும்ப வேண்டும். அதற்காகச் சிறப்பாகச் சிந்தித்துத் திட்டமிட்டு உழைக்கும்போது இடர்ப்பாடுகள் ஏதேனும் வந்தால் அவற்றையும் எப்படிக் கையாள்வது என்று நீங்கள் சிந்திக்க வேண்டும். அதைத்தான் அதிபர் கலாம் அவர்களின் நேரடித் தொலைத்தொடர்பு நிகழ்ச்சிக்கும் செய்திருந்தோம். பல வாரங்கள் அதைத் திட்டமிட்டோம்; ஒவ்வொரு நிமிடத்தையும் என்ன செய்யவேண்டும் என்பதைப் பட்டியலிட்டோம்; சிக்கல்கள் வந்தால் எப்படிக் கையாள வேண்டும் என்று ஆயத்தமாய் இருந்தோம்; வள்ளுவர் சொன்னது போல் இந்தச் செயல்களைச் செய்வதற்குத் தகுதியானவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களிடம் அந்தப் பொறுப்பை அளித்தோம்; அதனால்தான், இடர்ப்பாடுகளை எதிர்கொண்டு நிகழ்ச்சியை நல்லபடியாக நடத்தி முடித்தோம் என நம்புகிறேன்.

தெ: நிகழ்ச்சி முடிந்த பிறகு பலர் உங்களிடம் வந்து கண்ணீர் மல்க, நாத்தழுதழுக்கப் பேசினார்கள்; அதைப் பற்றி என்ன நினைத்தீர்கள்?

ரா: அந்த நிகழ்ச்சி நடக்கும்போது மின்சாரம் பாய்வது போன்ற ஓர் உணர்ச்சி. அவையோர் இந்த நிகழ்ச்சியில் தன்வயப்பட்டு இருப்பதைத் நிகழ்ச்சி முழுவதும் உணர்ந்திருந்தேன். இந்தியக் குடியரசுத் தலைவர் பங்கேற்கும் நிகழ்ச்சியில் முறைப்படி, அவர் பேசும் முன்னரும், பின்னரும் இந்தியத் தேசியகீதம் பாடவேண்டும். அவையிலிருந்த அந்த 1500 பேரும் எழுந்து நின்று ஒரே குரலில், ஒருமித்து இந்தியத் தேசிய கீதம் பாடும்போது மெய்சிலிர்த்துப் போனேன். அந்த ஒரு மணி நேரமும் ஒரு சலசலப்பும் இல்லாமல் அமைதியாய் இருந்து, நிகழ்ச்சியில் மக்கள் காட்டிய ஈடுபாடு அப்போதே தெரிந்தது. ஆனால், நிகழ்ச்சி முடிந்ததும் பலர் - தெரிந்தவர்கள், தெரியாதவர்கள், பெரியவர்கள், பதவியில் உள்ளவர்கள், மற்றவர்கள், கலைஞர்கள், - எல்லோரும் என்னிடம் வந்து கையைத் தொட்டுப் பேசிய போது, அவர்கள் முகத்திலிருந்த ஒளி, கண்ணின் ஓரத்தில் தெரிந்த கண்ணீர்த்துளி இவற்றைப் பார்த்த போது அதன் முழுத்தாக்கத்தையும் உணர்ந்தேன். இது தம் வாழ்க்கையிலேயே மறக்க முடியாத நிகழ்ச்சி என்பதாக உணர்ந்தார்கள். எனக்கும் அப்படியே.

தெ: குடியரசுத் தலைவரே ஆர்வத்துடன் தொடக்கி வைத்த "The Mechanical Universe and Beyond" என்ற 52 அறிவியல் வீடியோத் தொடரைத் தமிழில் மொழி பெயர்க்கும் திட்டம் பற்றிச் சொல்லுங்கள்.

ரா: "பிறநாட்டு நல்லறிஞர்கள் சாத்திரத்தை"த் தமிழில் தரவேண்டும் என்று பாரதி சொன்னது எல்லோருக்குமே தெரியும். பல மேடைகளிலும் முழங்குகிறார்கள். என்னுடைய கருத்து என்னவென்றால், நாம் பேச்சளவில் நிற்காமல், செயலாற்ற வேண்டும். அதுதான் வள்ளுவமும். எண்ணம், செயல், ஒழுக்கம் - இதுதான் வள்ளுவம். தரமான அறிவியல் தமிழிலே இன்னும் அதிகமாக வரவேண்டும். இன்று ஆங்கிலப் பள்ளிகளின் மோகம் கூடியிருப்பதற்கு ஒரு முக்கியக் காரணம் தரமான கல்வி இன்று தமிழில் இல்லை. மிகப் பெரும்பான்மையான தமிழ்க் குழந்தைகளும், ஏழைக்குழந்தைகளும் படிக்கும் பெரும்பாலான அரசுத் தமிழ்ப் பள்ளிகளின் கல்வித்தரம் ஆங்கிலப் பள்ளிகளின் தரத்தை விடத் தாழ்ந்திருக்கிருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே தமிழ்ப் பள்ளிகளின் கல்வித் தரத்தை உயர்த்த வேண்டிய கடமை நம் எல்லோருக்கும் இருக்கிறது. எல்லாவற்றையுமே அரசு செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது. அடிப்படை அறிவியல் பயிற்சிக்கு முக்கியமான பாடங்கள் மூன்று - இயற்பியல் (physics), வேதியியல் (Chemistry), கணக்கு. இவற்றில் இயற்பியலும் அது சார்ந்த கணக்குப் பாடமும் சொல்லிக் கொடுத்து விட்டால், அடிப்படை அறிவியல் பயிற்சியின் தரத்தைக் கூட்டி விடலாம். அதிக விவரங்களுக்கு www.themechanicaluniverse.com என்ற வலைத்தளத்தைப் பார்க்கலாம்.

தெ: தமிழ்ப் பள்ளிகளின் பாடத்திட்டத்தை மாற்றி அமைப்பது சுலமான செயலில்லையே!

ரா: இதற்காகத் தமிழ்ப் பள்ளிகளின் பாடத்திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டிய தேவையில்லை. கூடுதல் பாடங்களிலேயே தரத்தைக் கூட்டி விடலாம். இதற்காக நாம் புதிதாக எதையும் செய்ய வேண்டியதில்லை. உலகிலேயே சிறப்பாக யார் இதைச் செய்திருந்தாலும், அதை எடுத்துக் கொண்டு நாம் மேலே செல்ல வேண்டும். எனவே, 1987ல் ஆனன்பர்க் அறக்கட்டளை (Annenberg Foundation) அமெரிக்கக் கல்வித்தரத்தை உயர்த்த பல மில்லியன் டாலர்கள் செலவழித்து ஒரு இயற்பியல் வீடியோ திட்டத்தை உருவாக்கியது. அமெரிக்காவின் எல்லாப் பாடத்திட்டங்களையும் ஆராய்ந்து இறுதியில் கலி·போர்னியா தொழில்நுட்பக்கழகப் (CalTech, Pasadena) பேராசிரியர் டேவிட் எல். குட்ஸ்டைன் வழங்கிய இயற்பியல் பாடத்திட்டத்தைத் தேர்ந்தெடுத்தார்கள். அமெரிக்காவிலேயே தொலைக்கல்வி முறையில் தலைசிறந்த கலி·போர்னியாவின் சமூகக் கல்லூரிகளுக்காக இந்தப் பாடத்திட்டத்தை அடிப்படையாக வைத்து 52 அரைமணி நேரப் பாடங்களை வீடியோ வடிவில் உருவாக்கினார்கள். பாசடீனாவில் உள்ள நாசா ஜெட் ப்ரொபல்ஷன் லாபரட்டரியின் தலைசிறந்த வரைவியல் நிபுணர்களின் உதவியுடன் பாடங்களுக்கேற்ற படங்களை உருவாக்கினார்கள். வகுப்பில் நடக்கும் பாடங்களுடன், படங்களை இணைத்தது மட்டுமல்லாமல், அறிவியல் வரலாற்றில் நடந்த நிகழ்ச்சிகளை நடந்த இடங்களிலேயே நடிகர்களை வைத்துப் படமெடுத்துக் காட்டினார்கள். இது வெறும் பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக ஆகிவிடாமல் பாடத்திட்டத்துக்கு ஏற்றதாக இருக்கும் வகையில் தேவையான இடங்களில் அளவான கணக்குப் பாடங்களையும் சுவையாக இணைத்தார்கள். இந்தப் பாடத்திட்டத்தை ஒட்டி கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் வழியாகப் பாடநூல், ஆசிரியர் கையேடு, மாணவர் கையேடு ஆகியவற்றை வெளியிட்டார்கள்.

இதன் தரம் உலகிலுள்ள பல நாடுகளைக் கவர்ந்தது. ஐரோப்பிய நாடுகள், தென்னமெரிக்க நாடுகள், ஜப்பான் மற்றும் சீனாவில் இந்தத் தொடர் மொழிபெயர்த்து வெளியிடப் பட்டது. எனவே இது உலகத் தரம் வாய்ந்தது என்பதில் ஐயமில்லை. அது மட்டுமல்லாமல், இது அடிப்படை இயற்பியல் என்பதால், இதில் சொல்லப் படும் கருத்துகள் அடிக்கடி மாறப் போவதில்லை. எனவே தமிழில் அறிவியல் திட்டத்துக்காக இதையே நாங்களும் தேர்ந்தெடுத்தோம்.

தெ: அறிவியல் வீடியோவை எப்படித் தமிழ்ப்படுத்தப் போகிறீர்கள்?

ரா: தமிழ்ப் படுத்தல் என்பது கடினமான முயற்சி. அதற்காகத் தமிழ் ஆர்வமும், அறிவியல் ஆற்றலும் மிக்க பர்டியூ பல்கலைக் கழகப் பேராசிரியர் டாக்டர் கே. கோபாலன் அவர்களைத் திட்ட மேலாளராகப் பொறுப்பேற்க அணுகினோம். அவரும் மனம் உவந்து அதை ஏற்றார். இந்தத்திட்டத்தைப் பற்றி அறியும் அன்பர்கள் பலர் தாமும் இதில் இணைந்து பணியாற்ற முன் வந்துள்ளார்கள். இது எங்களுடைய எட்டாண்டுக் கனவு. இதைத் தமிழில் மொழிபெயர்க்க வேண்டிய தேவைகள், செலவுகள் பற்றிச் சிந்தித்தோம். இது அமெரிக்காவுக்காக உருவாக்கப் பட்டது என்பதால் மற்ற நாடுகள் மொழிபெயர்க்கும் உரிமையை விலை கொடுத்து வாங்கவேண்டும். மொழிபெயர்ப்பு உரிமை, வீடியோவைத் தமிழ்ப்படுத்தல், இலவசமாகத் தமிழ்ப் பள்ளிகளுக்குக் கொடுத்தல் என்று எல்லாக் கணக்கையும் போட்டுப் பார்த்தால் இந்தத் திட்டத்துக்குக் குறைந்தது 100,000 டாலர் செலவாகும். இப்போது எங்களுக்கு ஆள்வலிமையும், திட்டங்களும், திறமையும் இருக்கிறது. ஆனால் செய்யத் தேவையான பொருள்வலிமை குறைவு. இது ஆறு அல்லது ஏழு பேர் செய்யக்கூடிய திட்டமல்ல. ஆறரைக்கோடித் தமிழ் மக்களில் ஒரு லட்சம்பேர் ஆளுக்கு ஒரு டாலர் கொடுத்தால் போதும், இந்தத்திட்டத்துக்கு நிதி திரட்டி விடலாம். ஒரு சினிமாவுக்கோ, காப்பி குடிப்பதற்கோ ஒரு நாளைக்குச் செய்யும் செலவில் ஒரு பகுதி செலவிட்டால், நாம் பல்லாயிரக் கணக்கான புதிய இளம் உள்ளங்களின் அறிவுக்கண்களைத் திறந்து வைக்க முடியும்.

தெ: இது பள்ளியிறுதி மாணவர்கள் அல்லது கல்லூரி மாணவர்களுக்கான பாடமா?

ரா: ஆனன்பர்க் அறக்கட்டளையும் இதைப் பற்றிச் சிந்தித்து, பள்ளி மாணவர்களுக்கு, கல்லூரி மாணவர்களுக்கு என்று இருதரப் பட்ட பாடத்திட்டங்களை உருவாக்கினார்கள். கல்லூரி மாணவர்களுக்கான பாடங்களில் உயர்கணிதம் கூடுதலாக இருக்கும். அவ்வளவுதான். அது மட்டுமல்ல, அவர்கள் ஏற்கனவே இந்தப் பாடங்களைப் பல பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் புழங்கிச் சோதித்துப் பார்த்து நல்ல தரத்தில் உருவாக்கி இருக்கிறார்கள். தமிழ்ப்படுத்துவது தான் நமக்கு இருக்கும் பெரிய வேலை.

தெ: இது இன்றைய தமிழ்ப் பள்ளிகளில் எப்படிப் பட்ட தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நினைக்கிறீர்கள்?

ரா: பெரும்பாலும் அரசுப் பள்ளிகளில் போதிய கருவிகள் இல்லை, சோதனைச் சாலைகள் இல்லை, ஆசிரியர் சொல்லுவதுதான் அவர்களுக்குப் பாடம். ஆங்கிலப் பள்ளிகளில், இவை மட்டுமல்லாமல், படம் போட்டுக் காட்டுகிறார்கள், கள ஆய்வுப் பயிற்சி கொடுக்கிறார்கள். ஆனால், தென்றல் வாசகர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டியது என்னவென்றால், அந்த ஏழைத் தமிழ்ப் பள்ளி மாணவர்களைக் கலி·போர்னியாவுக்கு மனக்கண்ணில் அழைத்து வந்து இந்த மாணவர்கள் கற்கும் அதே பாடங்களைக் கற்றுக் கொடுத்தால், என்ன உணர்வும் என்ன மாறுதலும் உண்டாகும் என்று நினைக்கிறீர்கள்? அதிபர் கலாமும், நீங்களும், நானும், பல தென்றல் வாசகர்களும் தமிழ்வழிப் பள்ளிகளில் படித்து வந்தவர்கள்தாம். உயிரே இல்லாமல் நமக்கு அறிவியல் கற்பிக்கப்பட்டது என்பது நமக்கு நன்றாகத் தெரியும். ஆனால், அதை மாற்றி உலகத்தரத்துக்கு இவர்களை உயர்த்தினால் அதன் தாக்கம் என்னவாகும் என்று நமக்கு நன்றாகப் புலனாகும். இது எந்த விதமான அரசியல் துணையும் இல்லாமல், யாரும் தம் பாடத்திட்டங்களை மாற்ற வேண்டும் என்று கட்டாயப் படுத்தாமல், வீடியோ பாடங்களை வைத்து மட்டுமே செய்யக்கூடிய மாறுதல்.

தெ: சரி, வீடியோ பேழைகளை மட்டும் கொடுத்தால் போதுமா, அவற்றைப் போட்டுப் பார்க்க வீடியோ கருவிகள் வேண்டாமா?

ரா: லயன்ஸ் கிளப், ரோட்டரி கிளப் போன்றவை மட்டுமல்லாமல், கோயில்களும் சமய நிலையங்களும், பள்ளிகளுக்கு வேண்டிய வீடியோ கருவிகளை வழங்கலாம். வணிக நிறுவனங்கள் சேர்ந்து ஒரு பள்ளிக்கு உதவி புரிய வரலாம். அதற்கான முயற்சிகளை நாங்கள் மேற்கொள்ளப் போகிறோம். அரசாங்கமும் ஏற்கனவே ஒவ்வொரு பள்ளியிலும் கணினிகளையும், வீடியோக் கருவிகளையும் கொண்டுவர வேண்டும் என்று விரும்புகிறது. ஆனால், அவர்கள் செய்யும் வரை நாம் காத்திருக்கக் கூடாது. முதலில் சில பள்ளிகளிலாவது இந்தத் திட்டத்தைத் தொடங்குவோம். இதன் விளைவுகளைப் பத்திரிக்கைகளும், மற்ற ஊடகங்களும் கணித்து எழுதினால் இந்தச் செய்தி காட்டுத்தீ போல் பரவும். மற்ற பள்ளிப் பெற்றோர்களும் எப்படியாவது இதைத் தம் பள்ளிகளில் கொண்டு வரவேண்டும் என்று அரசையும் ஆசிரியர்களையும் வற்புறுத்துவார்கள்.

தெ: தென்றல் வாசகர்கள் உங்களுக்கு உதவி செய்ய வேண்டுமென்றால் எந்த முகவரிக்குத் தொடர்பு கொள்ளவேண்டும்?

ரா: உலகத் தமிழ் மொழி அறக்கட்டளை ஒரு வரி விலக்கு பெற்ற, லாப நோக்கற்ற, தொண்டு நிறுவனம். இந்தத் திட்டத்துக்கு உதவ விரும்புபவர்கள் கீழ்க்காணும் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்:

International Tamil Language
Foundation,
8417 Autumn Drive,
Woodridge, IL 60517.
தொலைபேசி: 630-985-3141.
மின்னஞ்சல் முகவரி: thiru@kural.org
வலைத்தளம்: http://www.kural.org

******


'திருக்குறள்' ராம்மோகன், உலகத் தமிழ் மொழி அறக்கட்டளை என்ற அமைப்பின் நிறுவனர். தம் துணைவியார் திருமதி மீனாட்சி ராம்மோகன் துணையுடன், "தமிழால் வளம் கூட்டுக" என்ற கொள்கையை அடிப்படையாகக் கொண்டு ஏறத்தாழப் பத்தாண்டுகளுக்கு முன்னர் இவர் நிறுவிய இந்த அமைப்பு, தமிழ் மொழி, பண்பாட்டு மரபுகளை அமெரிக்காவிலும் பிறநாடுகளிலும் பேணி வளர்க்க முயல்கிறது. இது ஒரு வரிவிலக்கு பெற்ற, லாப நோக்கற்ற, தொண்டு நிறுவனம். பத்தாண்டுகளாக அரும்பாடு பட்டு இந்த நிறுவனம் "திருக்குறள் - தமிழ்ப் பண்பாட்டுக் கையேடு, தமிழின எதிர்கால வழிகாட்டி" என்ற நூலை உருவாக்கி, தைத்திங்கள், 2000ல் பாரதரத்னா அப்துல் கலாம் அவர்கள் தலைமையில் வெளியிட்டது. தொடர்ந்து ஸ்டீ·பன் ஹாக்கிங் எழுதிய காலம் ஒரு வரலாற்றுச் சுருக்கம் (A Brief History of Time) என்ற நூலைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டது. இது 2000 பிரதிகள் நான்கே மாதத்தில் விற்றுச் சாதனை படைத்த நூல். பிறகு "நினைக்கப் பட வேண்டியவர்கள்", சேவியர் கவிதைகள் என்ற நூல்கள் வெளிவந்தன. இந்த அமைப்பின் பிற திட்டங்களில் சில: தமிழிசை மறுமலர்ச்சி - திருக்குறள் இசைமலர் வெளியீடு, மேலை நாட்டு அறிவியல் வீடியோ, புத்தக மொழிபெயர்ப்பு, வள்ளுவர் கல்வி மையம் - நூலகம், அரிதான தமிழ்ச் சுவடிகள் தொகுப்பு/வெளியீடு, தமிழ் வட்டம் (பிரிட்டிஷ் கவுன்சில் போன்றது), குறள் வழி பரப்பும் அமைப்புகள் பட்டியலிடல், தமிழிசைப் பயிற்சிப் பாட வெளியீடு.

ஆண்டுக்கொரு முறை "தமிழ் மாலைப் பொழுது" என்ற நிகழ்ச்சிமூலம் அமெரிக்கர்களுக்கும், இளைய தமிழ்த் தலைமுறையினருக்கும் தமிழ் இலக்கியம், கலை, பண்பாடு இவற்றை அறிமுகப் படுத்தித் தமிழர்களின் விழுமியங்களை அவர்களுக்கு உணர்த்துகிறது. தமிழ்ப் புத்தாண்டு விழா, பொங்கல் நாள்களில் வீடற்றோருக்கும் நலிந்தவர்க்கும் உணவு பரிமாறுகிறது.

சந்திப்பு: மணி மு. மணிவண்ணன்

© TamilOnline.com