அமெரிக்காவில் பல கர்நாடக இசைமேதைகள் தோன்றக்கூடும் - நெய்வேலி சந்தான கோபாலன்
இசைப்பேரொளி, வாணி கலா சுதாகரா, யுவகலா பாரதி போன்ற பல பட்டங்களுக்கு சொந்தக்காரர் நெய்வேலி சந்தானகோபாலன். உலகநாடுகள் பலவற்றிற்கும் சென்று கர்னாடக இசைக் கச்சேரிகள் செய்தவர். திருப்புகழ், தேவாரம் இர்ண்டையும் தன் இசையின் இரண்டு கண்களாக நினைப்பவர். திரைப் படத்திற்குப் பாடும் வாய்ப்பைக்கூட மறுத்தவர். இசைச் சேவையை இறைவன் சேவையாக நினைத்து வாழ்ந்து வரும் வெகு சிலரில் இவர் ஒருவர். அவரைத் தென்றலுக்காகச் சந்தித்த பொழுது:

கே: உங்களுக்குள் இருந்த இசை ஆர்வத்தை நீங்கள் அறிந்து கொண்டது எப்பொழுது?

ப: நான்கு வயது இருக்கும்பொழுது செம்பை வைத்யநாத பாகவதரின் வாதாபியை கேட்டுவிட்டு உடனே ஓரளவு அதேபோல் பாடியதாக வீட்டில் பெரியோர்கள் சொல்லிக் கேட்டிருக்கிறேன். பின்னர் எட்டு வயதில் அவருடைய மருமகனான செம்பை அனந்தமணி பாகவதரிடம் இசை பயின்றேன். அவரிடமிருந்து அதிகாலையில் சங்கீத சாதகம் செய்வதன் அவசியத்தை உணர்ந்தேன். சில வருடங் களுக்குப் பிறகு பள்ளியில் இசைக்கான ஊக்கத் தொகை கிடைத்தது.

பின் அவரே என்னை பாண்டிச்சேரியில் இருந்த ஸ்ரீரங்கம் ரங்கநாதன் என்ற பெரிய வித்வானிடம் அனுப்பி வைத்தார். அவரிடம் ஏராளமான கீர்த்தனைகள் கற்றுக்கொண்டேன். அவர் தன் நண்பரோடு சேர்ந்து இரவு 10 மணியில் இருந்து காலை 5 வரை இசைப் பயிற்சி செய்வார். அப்போதுதான் இசையை சதாசர்வகாலமும் கேட்கும் வாய்ப்பைப் பெற்றேன்.

கே: மேற்கொண்டு திறமையை வளர்த்துக் கொண்டது பற்றிக் கொஞ்சம்...?

ப: ஒரு முறை T.N. சேஷகோபாலன் குரலைக் கேட்டு மயங்கிப்போனேன். அவர் எங்கு பாடினாலும், அதைப் பதிவுசெய்து கேட்பேன். அப்போது சென்னையில் நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன். அவர் மதுரையில் இருந்து சென்னை வரும் சமயங்களில் எல்லாம் அவரிடம் பயின்றேன். பின் அவருடனேயே மதுரையில் தங்கி குருகுலவாச முறையிலும் இசை பயின்றேன். 1983ம் வருடம் முதல் 1986ம் வருடம் வரையில் அவருடன் இருந்த காலத்தை என் இசைப்பயிற்சியின் பொற்காலம் என்பேன்.

கே: குருகுல வாசம் என்பது எவ்வளவு தூரம் ஒரு மாணவனுக்கு உதவும்? தற்காலத்தில் நடத்தப்படும் 'Music Workshop' என்பதன் மூலம் மாணவர்கள் எவ்வளவு தூரம் பயனடைய முடியும்?

ப: குருகுல வாசம் நம் மனதில் மட்டுமின்றி இரத்தத்தில் கூட சங்கீதத்தைப் புகுத்தி விடும். ஒருவர் இசையையே தொழிலாகக் கொள்ள முடிவு செய்வதென்பது முள்ளின்மேல் நடப்பதுபோல்தான். இசை ஒரு மென்மையான கலை. இன்று கூட என் வீட்டில் இரண்டு மாணவர்கள் குருகுல வாசம் செய்து வருகின்றனர். ஓரளவு கற்றுக்கொண்டபின் ஒவ்வொரு இசை மேதையினிடத்தில் இருக்கும் சிறந்த விஷயங்களையும் குறுகிய காலத்தில் கற்றுக்கொள்ள இது உதவும். சுருங்கச் சொன்னால் ஒரு வித்வானுக்கு சங்கீதம் மட்டும் தெரிந்தால் போதாது, இங்கிதமும் தெரிய வேண்டும். இவை அனைத்தையும் குருகுல வாசத்தில் கற்கமுடியும். ஒரு நல்ல ஆச்¢ரியர் ஆகவும் இது உதவும்.

ஆனால் இன்றைய அவசரக் காலத்தில் அதற்கு அடுத்தபடியான மாற்றுதான் பயிலரங்கு (workshop) என்று கூறலாம். குருகுல வாசம் என்பது ஒரு வண்டு இறைவன் படைத்த செடியையும், அதில் உள்ள மலரையும், பின் அதில் உள்ள தேனையும் ரசித்துப் பருகுவதுபோல. பயிலரங்கு என்பது ஒரு தேனி பல மலர்களில் சென்று தேனை மட்டும் எடுத்து கொள்வது போல் என்று கூறலாம். எதுவாயினும் தேனின் இனிமை ஒன்று தானே!

கே: வாய்ப்பாட்டு மட்டுமன்றி பற்பல வாத்தியங்கள் வாசிப்பதிலும் நீங்கள் கைதேர்ந்தவர் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். இது எந்த விதத்தில் உங்களுக்கு உதவுகிறது?

ப: நான் நெய்வேலியில் இருந்த சமயம் நிறைய சங்கீத வித்வான்களுடன் எனக்கு நெருக்கம் ஏற்பட்டது. அதில் பலர் வீணை, மிருதங்கம், கஞ்சிரா வித்வான்களும் ஆவர். மிருதங்கம் கற்றால் லயஞானம் அதிகரிக்கும். பின்னர் என் வீட்டிலிருந்த வீணையில் நானே முயற்சி செய்து முதலில் ஸ்ரீராகம் வாசிக்க ஆரம்பித்தேன். வீணை என்பது வாய்ப்பாட்டுக்காரர்களுக்கு ஒரு குரு என்றும் கூறலாம். நமக்கு பாடும் பொழுது ஏதாவது சந்தேகம் இருப்பின் வீணையை வாசித்துப் பார்த்து அதை நிவர்த்தி செய்து கொள்ள முடியும். தற்கால மருத்துவத்தில் Endoscopy மூலம் வயிற்றில் உள்ள நோயை அறிந்துகொள்ள முடிவது போல் நாமே நாம் பாடும் இசையின் தரத்தை வீணையை வாசித்துப் பார்த்து கணிக்க முடியும். சுருக்கமாய்ச் சொன்னால் வீணை என்பது லயத்தையும் சுருதியையும் தன்னுள் செறிந்து அடக்கிய முழுமையான இசைக்கருவி. ஒரு திருக்குறளை நாம் பல சந்தர்ப்பங்களுக்கும் ஏற்றபடிப் பயன்படுத்துவதுபோல் பல நேரங்களில் நமக்கு உதவக் கூடிய வாத்தியம் வீணை. சம்பந்தர் கோளறுபதிகத்தில் "வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன் மிக நல்ல வீணை தடவி" என்று கூறியது போல் அதில் வாசித்துப் பழகி, நமக்குத் தேவைப்படும் இயற்கையான இசையை எடுத்துக் கொண்டு, மனோதர்மத்தையும், கற்பனையையும் பெருக்கிக் கொள்ள முடியும். வீணை ஒன்றுதான் உங்க ளைக் கவித்துவமான பாடகராக்கும்.

கே: தியாகப்பிரம்மத்தின் நாதோபாசனைக்கு ராமர் அவர் முன் தோன்றியதுபோல் இன்றும் நடக்க சாத்தியம் உண்டா? இன்றைய நிலையில் அவ்வழிகளைக் கடைப்பிடிக்க முடியுமா?

ப: இக்கேள்விக்குச் சுருங்க பதில் கூறுவது என்பது அவ்வளவு சுலபம் இல்லை. இருந்தாலும் முயற்சி செய்கிறேன். ராகங்கள் ஒவ்வொன்றிற்கும் ஒரு மதிப்பு உண்டு அல்லவா? உதாரணமாக வருண மந்திரத்தை ஒருவன் உப்பு சேர்க்காத உணவுடனும், நியம நிஷ்டைகளுடனும் கூறும்பொழுது, அந்த சரீரத்தில் இருந்து வரும் சாரீ£ரத்துக்குத்தான் மழையை வருவிக்கக் கூடிய சாத்தியம் உண்டு. அது போல் முத்து சுவாமி தீக்ஷ¢தர் அமிர்தவர்ஷிணியைப் பாடும்பொழுது நிச்சயம் மழை கொட்டுமாம். அப்படி சில இசை உபாசகர்கள் ராக தேவதைகளைப் பக்தி சிரத்தையுடன் வசப்படுத்தி வைத்திருந்தனராம்.

நம் உடலில் உள்ள பூதங்களைக் கட்டுப்படுத்தினால் தான் பஞ்சபூதங்களை ஓரளவாவது கட்டுப்படுத்த முடியும். அவ்வழியில் புகழ், பொருள் போன்றவற்றிற்கு அப்பாற்பட்டு மனதை அடக்கி எப்பொழுதும் ராமரையே நினைத்துத் தியாகைய்யர் பாடியதால் ராமர் அவர் முன் தோன்றினார். அதே போல் நாமும் நெஞ்சுருக வேண்டிப் பாடினால் நம் முன்னும் ராமர் தோன்றுவார் என்பதில் எள்ளளவும் ஐயம் இல்லை. Sincerity and serenity கலந்த ஓம்கார சப்தத்தினால் இசைப்பவர் மட்டும் இன்றிக் கேட்போரையும் மகிழ்விக்க கூடிய சக்தி இசைக்குமட்டுமே உண்டு. என் அகத்தைச் சுத்தம் செய்து கொள்ள முயல்வதுடன் கேட்போரையும் அது சரியான முறையில் சென்றடைய இறைவனைப் பிரார்த்தித்துக் கொள்கிறேன். தியாகப்பிரம்மத்தின் அளவு நாதோபாசனை செய்ய முடியாவிட்டாலும் அதில் ஒரு சிறு பங்காவது செய்ய முயற்சிசெய்து வருகிறேன்.

கே: ஒரு இசை ஆசிரியரின் கடமை என்ன?

ப: தர்ம சாஸ்திரங்கள் "ஒருவன் தான் கற்ற வித்தையை மற்றவருக்குக் கற்றுத் தராவிட்டால் அடுத்த பிறவியில் பிரம்மராட்சசனாக பிறக்க வேண்டி வரும்" எனக் கூறுகின்றன. இசைமேதைகள் என்பவர்கள் உலகில் இசையைப் பரப்பக் கடவுளால் அனுப்பப்பட்ட தூதுவர்கள் என்று சொன்னால் மிகையல்ல. கேட்பவருக்கெல்லாம் சொல்லித்தர வேண்டும். கேட்பவருக்கெல்லாம் பாடிக் காட்ட வேண்டும். அக்காலத்தில் செம்மங்குடி ஸ்ரீனிவாச ஐயங்கார், செம்பை வைத்யநாத பாகவதர், மதுரை மணி ஐயர், டாக்டர் ராமனாதன் போன்ற எத்தனையோ பேர் இதைச் செய்ததால்தான் இன்று இசை தன் கிளைகளை மேலும் மேலும் பரப்பிக் கொண்டு தழைத்தோங்கி நிற்கிறது.

கே: உங்கள் இசை வாரிசுகள் யார்? அவர்களை எவ்விதம் ஊக்குவிக்கிறீர்கள்?

ப: என்னிடம் கற்றுத் தேர்ந்த மாணவர்களுக்கு இசைமேடை என்பது அவர்கள் உரிமை; அதில் ஏறிப் பாட அவர்களுக்கு எந்தவித தயக்கமும் தேவை இல்லை என்று கூறி மேடையில் என்னுடன் பின்பாட்டு பாடச் சொல்லுவேன். மேடை என்பது சரஸ்வதியின் பீடம். இக் காலத்திற்கேற்ப சொல்ல வேண்டுமாயின் மேடை என்பது பாடகர்களின் home pitch.

இந்தியாவில் என் மாணவர்களான ஸ்ரீராம் பார்த்தசாரதி, ஸ்ரீவித்யா வெங்கடாசலம், சின்மயா சகோதரிகள் போன்றோர் நல்லமுறையில் சபாக்களில் பாடி வருகின்றனர். ஏன், சான்டா கிளாராவில் இருக்கும் நந்தினி ராமமூர்த்தி அமெரிக்காவிலும், டிசம்பர் மாதங்களில் இந்தியாவிலும் பல சபாக்களில் கச்சேரிகள் செய்கிறார்; இங்கே இசை ஆசிரியையாகவும் இருந்து வருகிறார். பெர்க்லி பல்கலைக் கழகத்தில் படித்து வரும் கிருஷ்ணா பார்த்தசாரதியும் என் மாணவரே.

கே: உங்கள் குடும்பத்தினருக்கு இசை ஆர்வம் உள்ளதா?

ப: என் குடும்பத்தில் என் மனைவி மீரா வீணை வாசிப்பதில் தேர்ந்தவர். பள்ளியில் படித்து வரும் என் மகள் ஸ்ரீரஞ்சனியும் இசையில் நல்ல முறையில் தேர்ச்சி பெற்று வருகிறாள். என் மூன்றுவயது மகன் ஸ்ரீராம்கூடத் தன் பிஞ்சுக் கைகளால் மிருதங்கத்தைத் தட்டி வருகிறான்.

கே: இம்முறை உங்கள் அமெரிக்க விஜயத்தின் நோக்கம் என்ன?

ப: நான் ஜெயா டிவியில் இசைப்பயிற்சி அளித்த நிகழ்ச்சியைப் பார்த்து விட்டு India Music Info என்ற நிறுவனத்தினர் வலைமூலம் e-learning முறையில் இசை பயில்விக்குமாறு என்னைக் கேட்டுக் கொண்டனர். உலகின் எந்த மூலையில் இருப்பவரும் இதனால் அடையப்போகும் பயனை நினைத்து மகிழ்ந்து, ஒப்புக் கொண்டேன். அதற்காகச் சில பயிலரங்குகளும், உரைகளும், சில கச்சேரிகளும் செய்யவே வந்தேன்.

கே: சென்னையில் உள்ள உங்கள் குருகிருபா பள்ளியைப் பற்றிக் கூற முடியுமா?

ப: காஞ்சி மகா பெரியவரின் ஆசியுடன் அவருடைய ஆன்மீக சிந்தனைகளையும் இசையுடன் சேர்த்துப் பரப்ப எண்ணி ஆரம்பிக்கப்பட்ட பள்ளி அது. இசையை வியாபார நோக்கோடு இல்லாமல் ஆத்மார்த்த மாக பக்தி மார்க்கத்தைப் பரப்ப வேண்டும் என்று அவர் சொன்னதை ஏற்றுக் கோயில்களில் மாணவர்களை பாடச் செய்வது, ஏழை மாணவர்களுக்கு இலவசமாக இசையைக் கற்றுக்கொடுப்பது என்று செய்து வருகிறோம். என்னைப்போல் பலருக்கும் அவரே மாதா, பிதா, குரு, தெய்வமாகவும் இருக்கிறார் என்பது பலரும் அறிந்ததுதான். அவர் எழுதிய தெய்வத்தின் குரலில் கூறியுள்ளபடி கடவுள் என்னை இசையின் மூலம் ஆன்மீகத்தைப் பரப்பச் சொல்லியுள்ளதாய் நினைத்துச் செய்து வருகிறேன்.

கே: Fusion Music என்று எதிர் துருவமாக இருக்கும் இரு இசைகளை இணைத்து வழங்க முயற்சிப்பது பற்றி தங்கள் கருத்து என்ன? அதை நீங்கள் வரவேற்கிறீர்களா?

ப: நிச்சயமாக. நான்கூட ப்ரஸல்ஸ் நாட்டில் ஒரு முறை இதை முயற்சி செய்துபார்த்தேன். நம் பாரம்பரியமிக்க கர்னாடக இசை உலகம் முழுதும் சென்றடைய அது சிறந்த வழி என்றும் கூறலாம். நம் நாட்டில் இருந்து மற்றவர்களுக்கு அள்ளி வழங்கக் கூடிய செல்வங்கள் என்னவென்றால் கலையும் கலாச்சாரமும்தான். அதனால் அவரவருக்குப் பிடித்தமான இசை வழியாகப் பற்பல நுணுக்கங்கள் நிறைந்த கர்னாடக இசையையும் சேர்த்து வழங்குவதால் கர்னாடக இசையின் பெருமை உயருமே தவிரக் குறையாது.

கே: ஒரு பாடகர் தன் கச்சேரிக்கு செல்லும் பொழுது அன்றைக்குப் பாட வேண்டிய பாடல்களுக்கான ஒரு திட்டத்துடன் செல்வார் இல்லையா? அப்படி இருக்க, ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்த பாடலுக்கான சீட்டைக் கொடுத்துப் பாடச் சொல்வது சரியா?

ப: அது தவறு என்று கூற முடியாது. ஒரு நல்ல இசை வித்தகருக்கு அழகு, மேடை ஏறிய பத்து நிமிடங்களிலேயே அன்றைய ரசிகர்களின் ரசனை நாடியைப் பிடித்து விடுவதுதான். அதற்கேற்பத் தனது திட்டங்களை உடனுக்குடன் மாற்றிக் கொண்டு சபையறிந்து பாடுவதிலேயே கச்சேரியின் பாதி வெற்றி கிடைத்து விடுகிறது. ரசிகர்களின் நெஞ்சைக் கொள்ளை கொள்ளும் முதல் வழி அடிப்படைகள் மாறாமல் செய்யும் இந்தச் சின்ன தீர்க்க தரிசனம்தான். என்னையும் என் பாட்டையும் பிடித்திருக்கிறது என எனக்கு அறியச் செய்யும் வகையில் சீட்டு அனுப்பும் ரசிகர்களை மகிழ்விப்பதும் எங்கள் கடமையே!

கே: உங்கள் கச்சேரிகளில் அதிகமாகத் தமிழ்ப் பாடல்களும், முக்கியமாகத் திருப்புகழும் பாடக் காரணம் என்ன?

ப: சிறு வயதிலிருந்தே திருப்புகழில் எனக்கு நிறைய ஈடுபாடு. திருப்புகழ் என் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்த ஒன்று என்று சொன்னால் மிகையல்ல. என் கனவில் ஒருமுறை மகாப் பெரியவர் தோன்றி திருப்புகழை விடாமல் பாடுமாறு கூறினார். திருப்புகழை மனமுருகிப் பாடும் பல நேரங்களில் எனக்குப் பல நன்மைகள் ஏற்பட்டதுண்டு. வடபழனி கோயிலின் திருப்புகழ் சபாவில் வருடந்தோறும் இசை நிகழ்ச்சி நடத்தும் பொறுப்பு என்னைத் தேடி வந்தது. என் இசையின் இரு கண்கள் தேவாரமும் திருப்புகழும் தான். அடுத்த முறை அமெரிக்கா வரும் பொழுது திருப்புகழ் பிரச்சாரம் ஒன்று செய்யவேண்டும் என்றுகூட நினைத்திருக்கிறேன்.

மேலும், நாம் அறிந்த மொழியில் பக்தி செய்வது சுலபமல்லவா? மும்மூர்த்திகளின் வழியில் வந்த இசையைப் பாடும்பொழுது அதில் நம் தாய் மொழியையும் கலந்து விட்டால் அந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை என்பது அனுபவித்துப் பார்க்க வேண்டிய ஒன்று. நம் ரத்தத்தில் ஊறிய மொழியில் பாடுவது இயல்பாகவும் அமையும். நம் மக்களின் சிலர் கர்னாடக இசை நமக்கான ஒன்றல்ல என்று ஒதுங்கிவிட்டனர். அவர்களையும் இத்துறைக்கு ஈர்க்கத் தமிழ்ப்பாடல்கள் உதவுகின்றன. பல கிராமங்களில் கூட என் தமிழ்ப்பாடல்களுக்கு ரசிகர்கள் இருப்பதாய் வந்து கூறும் பொழுது மகிழ்ச்சி பொங்குகிறது.

கே: இந்த சங்கீத சாகரத்தில் நீங்கள் இன்னும் என்ன சாதிக்க விரும்புகிறீர்கள்?

ப: சொல்லப் போனால் டிசம்பர் மாதத்தில் ஒவ்வொரு சபாவாக சென்று பாடிக் கொண்டிருப்பதில் தற்பொழுது ஒரு சின்னச் சலிப்பு கூட ஏற்படுகிறது. அதனால் இனி செய்யப் போகும் நிகழ்ச்சிகளை மற்றவருக்கு உதவும்படியோ அல்லது தர்ம காரியத்துக் காகவோ செய்ய நினைத்திருக்கிறேன். கேளிக்கையைவிட ஞானம்தான் அதிகம் தேவை (enlightenment is more required than entertainment) என்று வரவரத் தோன்ற ஆரம்பித்து உள்ளது. வாழ்க்கையின் கலாச்சாரத்திற்கும் இசைக்கும் தொடர்பு உண்டு என்பதை இளைய தலைமுறைக்கு எடுத்துக் கூறுவதே நான் செய்ய வேண்டிய முதல் கடமையாக நினைக்கிறேன்.

பேராசையும், அதிகப்படியான தேடல்களும் என்னை நெருங்கி விடாமல் இருக்க வேண்டும் எனக் கண்ணும் கருத்துமாக இருக்கிறேன். எழுத்தாளர் சுஜாதா ஒருமுறை என்னிடம் பேசிக் கொண்டிருந்த பொழுது தான் எழுதும் அடுத்த படத்தில் என்னைப் பாடச் சொல்லிக் கேட்டார். நான் போடும் உடைக்குக் கொஞ்சம் கூட பொருந்தாத உலகம் அது என்று கூறி மறுத்து விட்டேன்.

கே: அமெரிக்க இசை ரசிகர்களுக்கும் தென்றல் வாசகர்களுக்கும் தாங்கள் கூற விரும்புவது?

ப: அமெரிக்காவில் உள்ளவர்களின் இசை ஆர்வத்தை காணும்பொழுது எதிர்காலத்தில் பல இசை மேதைகள் இங்கிருந்தும் தோன்றக் கூடும் என்று நம்பத் தோன்றுகிறது. அதுவும் இந்த நாட்டில் குடியிருப்புப் பகுதிகளில் தெருக்களில் உள்ள அமைதியைக் காணும் பொழுது இங்கு இசையை வளர்ப்பது சுலபம் என்றே தோன்றுகிறது.

நம்மைப் படைத்த இறைவனின் கருணையின் எல்லைதான் இசை. அது தனிமனிதச் சொத்தல்ல. அனைவருக்கும் சொந்தம். குரல் வளமிருப்போர் ஒரு நல்ல குருவை அணுகி இசையை கற்றுக் கொண்டு, இசைக்கான மரியாதையைக் காக்க வேண்டும். நம் முன்னோர்களிடமிருந்து இசை நமக்கு நல்ல முறையில் வந்ததைப் போல் நாமும் நமது அடுத்த தலைமுறைக்கு அதைப் பத்திரமாகக் கொண்டு சேர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

சந்தித்து உரையாடியவர்: லதா ஸ்ரீனிவாசன்

© TamilOnline.com