அது கணினி விளையாட்டில் ஒரு காட்சியாக இருந்திருக்கலாம். அல்லது ஹைடெக் அனிமேட்டட் சினிமாவில் ஒரு நம்பிக்கைக்கு அப்பாற்பட்ட காட்சியாக. இரண்டுமே இல்லை என்பதுதான் பரிதாபம். இரண்டு நெடிதுயர்ந்து நிற்கும் சகோதரக் கட்டிடங்கள்; விமானம் ஏதோ தன்னிச்சையாய் வருவதுபோல் வருகிறது. விமானம் விலகும் அல்லது கட்டிடம் சற்றே நந்திபோல் நகரும், சேதமொன்றும் இராது என நிச்சயமாக நம்பி முடிப்பதற்குள் நாம் பொய்ப்பிக்கப் படுகிறோம். நெருப்பு, பெருநெருப்பு, புகை, சரிவு, சேதம், பேரழிவு.
வீட்டில் தொலைபேசி அடிக்கிறது. "டி.வி. பார்த்தாயா மதுரபாரதி! 14ம் தேதி எப்படிப் புறப்படப் போகிறாய்?" நண்பர்களின் கரிசனக் குரல். கலக்கமான துணிச்சலுடன் "இதுக் கெல்லாம் பயந்தால் முடியுமா?" என்று கேட்டபோது நடந்ததன் ஆழம் தெரிந்திருக்கவில்லை. சென்னையிலிருந்து அமெரிக்காவுக்குப் போகும் என் விமானத்தை மட்டுமல்ல, உலகெங்கும் விண்ணூர்திப் போக்குவரத்தையே அந்நிகழ்ச்சி ஸ்தம்பிக்கச் செய்துவிட்டது.
முதலில் குறித்த தேதிக்கு ஒருவாரம் கழித்துத்தான் நான் பயணிக்க முடிந்தது. பனைமரத்தில் தேள் கொட்ட தென்னை மரத்திற்கு நெறிகட்டியதுபோல சிங்கப்பூரிலேயே தாக்கம் தெரிந்தது. பெட்டிகளை அப்படியே தொடரும் விமானத்தில் ஏற்றாமல், நம்மிடம் கொடுத்து, கொட்டிக்கவிழ்த்துப் பரிசீலித்து மீண்டும் வண்டியேற்றினார்கள். சென்னையிலும் ஒரே கெடுபிடி என்று செய்தித்தாள்கள் ஏற்படுத்திய பரபரப்புக்கு ஏதும் தடயம் இருக்கவில்லை. ஆனால் அதன்பின் எந்தக் குந்தகமும் இன்றி ஆபிரஹாம் லிங்கனின் மண்ணை எட்டியபோது எல்லாவற்றையும் தாண்டி ஒரு மகிழ்ச்சி வரத்தான் செய்தது.
ஆனால் தாடிவைத்த ஆபிரஹாம் லிங்கன் அப்போது அமெரிக்காவில் இருந்தால் யாராவது ஒருவர் பெட்ரோல் நிலையத்தில் அவரைச் சுட்டுத் தள்ளியிருப்பார் - ஒரு சீக்கியச் சகோதரருக்கு நடந்தாற்போல. ஒசாமா பின் லாடன் அணிந்திருந்தான் என்ற காரணத்தாலே தலைப்பாகையும் தாடியும் வெறுப்புக்குகந்தவை ஆயின. பாகிஸ்தானிலும் இதர சில நாடுகளிலும் ஏராளமான பெற்றோர் தம் குழந்தைகளுக்கு ஒசாமா என்று பேரிட்டனர்.
குறிஞ்சித்திணையின் பேரெழிலை ஒருசேரக் கொண்ட ஆ·ப்கனிஸ்தான் சிமெண்டுத் தொழிற்சாலையை அண்மித்த இடம் போலத் துகள்பட்டுப்போனது. முயலுடனே ஓடிக் கொண்டே வேட்டை நாய்க்கு வழிகாட்டிய பாகிஸ்தான் அமெரிக்காவிடம் பணம்பிடுங்க இதையும் ஒரு தந்திரமாகப் பயன்படுத்திக் கொண்டது. புலனாகாப் போர்விமானங்கள் இரவு நேரத்தில் டிஸ்னிலாண்ட் வாண வேடிக்கையாகக் கம்பளக் குண்டுவீச உலகெங்கும் மக்கள் அதை தொலைக்காட்சியில் கண்டுகளித்தனர். இன்னுமொரு குவையத் சண்டையின் மெருகேறிய பதிப்புப்போல.
நான் தங்கியிருந்த விரிகுடாப்பகுதி கோபமும் வெறுப்பும் தளும்புவதாய் இருந்தது. "எங்கள் மதம் சமாதானத்தைப் போதிக்கிறது. வந்து தெரிந்துகொள்ளுங்கள்" எனப் பர்தா அணிந்த இசுலாமிய மகளிர் பரிச்சயக் கூட்டம் நடத்தியபோது அதில் ஏராளமான அமெரிக்கர்கள் கலந்துகொண்டு கண்களைத் துடைத்தபடி "உண்மைதான்" என்று பத்திரிக்கைகளில் பேட்டி கொடுத்தார்கள். அமெரிக்கக் கொடியை வீட்டின்மேலும், வாகனங்களிலும் காட்சிப்படுத்துவது மிக அவசியமானதாய் இருந்தது. இணையம் வழியேயோ, கடைகளிலோ தயாராகக் கிடைத்தன. சாலைச் சந்திப்புகளில் பச்சை விளக்குக்காக நிற்கும்போது தேசாபிமானிகள் கொடி கொடுத்து உண்டியல் குலுக்கினார்கள். கொரியா போர்க்கால வேகத்தில் அமெரிக்கக் கொடிகளைத் தயாரித்து அனுப்பி ஏராளமான டாலர் சம்பாதித்தது.
அதுவரையில் திக்கி முக்கி உளறிக் கொண்டிருந்த ஜார்ஜ் புஷ் திடீரென்று வீரபாண்டிய கட்டபொம்மனானது இன்னொரு பேராச்சரியம். ஏராளமாக வீர வசனம். வெள்ளை மாளிகையில், ராணுவ வீரர்களுக்கு நடுவில், நாய் ஒரு பக்கமும் மனைவி ஒரு பக்கமுமாக ரான்ச்சில் ஓய்வெடுக்கப் போகும்போது - எப்போதும் எப்படி அமெரிக்கா வன்முறையாளர் களிடமிருந்து இந்த 'உலகத்தை'க் காக்கும் என்பதுதான் பேச்சு. ஸ்டேட் ஆ·ப் தி யூனியன் சொற்பொழிவு வழக்கமாக அமெரிக்க மக்களுக்கான மேம்பாட்டுத் திட்டங்கள், நிதி நிலைமை, எதிர்காலம் பற்றிய அரசின் பார்வை என்று இவை குறித்ததாக இருப்பது வழக்கம். 2002ல் மட்டும் அது விதிவிலக்காக இருந்தது. "இரட்டைக் கோபுரத்தை இடித்தவனைத் தாய் தடுத்தாலும் விடேன்" என்கிற சூளுரையை வெவ்வேறு சொற்றொடர்களால் வீரா வேசத்துடன் புஷ் வெளியிட ஒவ்வொரு வாக்கியத்திற்கும் அவை எழுந்து கரகோஷம். ஹில்லாரி கிளிண்டனும் வேறு வழியில்லாமல் அதையே செய்தார். மனிதனின் கண்ணீர்ச் சுரப்பிகளும் மூளையும் எவ்வளவு எளிதில் ஏமாந்துவிடும் என்பதற்கு அது நல்ல அத்தாட்சி.
வன்முறையை - அது தீங்குசெய்தவரைப் பழிவாங்குவதற்காக இருந்தாலும் - ஆதரிக்கமுடியாது. ஒசாமா சொல்லுவதும் அதே காரணம்தான் என்பதையும் யோசிக்கவேண்டும். எந்த ஒரு கொள்கைரீதியான பிடிவாதத்திற்காகவும் அழிவுச்செயல்களை மருந்தாகக் கொள்ளக்கூடது - இது அமெரிக்காவுக்கும் பொருந்தும், ஆ·ப்கனிஸ்தானத்துக்கும் பொருந்தும். இந்த விபரீதமான சூழ்நிலையில் பாகிஸ்தான் அமெரிக்காவின் அதிதீவிர நண்பனாகிவிட்டது 'குடங்கருள் பாம்போடு உடன் உறைந்தற்று' எனப் பேராசான் சொன்னதுபோல என்பதை விரைவில் அமெரிக்கா உணரும். அப்படி உணரும்போது, அதன் பயனாளி பாரதமாக இருக்கக்கூடும்.
மதுரபாரதி |