இருபதாம் நூற்றாண்டின் நவீன தமிழ் இலக்கியத்தின் போக்கைக் கூர்மைப்படுத்தி வளப்படுத்தியவர்களுள் இரு ஆளுமைகள் முக்கியம். ஒன்று பாரதியார். மற்றது சொ. விருத்தாசலம் என்ற புதுமைப்பித்தன். தமிழ் இலக்கிய வரலாற்றில் புதுமைப்பித்தனுக்கு நிரந்தரமான ஓர் இடமுண்டு. இது அவர் மறைந்த ஐம்பத்தைந்து ஆண்டுகளில் மேலும் உறுதிப்படவே செய்கிறது.
இன்றுவரை புதுமைப்பித்தன் பற்றிய பேச்சுகள், விமரிசனம், எதிர்மறையான தீர்வுகள் மற்றும் அவர் படைப்புகளின் - எழுத்துக்களின் மொத்தத் தொகுப்புகள் தமிழ்ச்சூழலை ஆக்கிரமித்துக் கொண்டே உள்ளன. புதுமைப்பித்தன் மிகுந்த கம்பீரத்துடன் ஒவ்வொரு காலகட்டத்திலும் தவிர்க்க முடியாத சக்தியாக மேற்கிளம்பி வருகின்றார்.
புதுமைப்பித்தன் எழுத்துலகில் நுழைந்தது 1933ம் ஆண்டின் இறுதிப் பகுதியில், இந்திய அரசியலில் மிகவும் பரபரப்பான காலக் கட்டத்தில். விடுதலை வேட்கையின் தீவிரம், சமூகச் சீர்த்திருத்தக் கருத்துக்கள், சோசலிச சிந்தனைகளின் தாக்கம், பழைய மதிப்பீடுகள் கேள்விக்குள்ளாக்கப்பட்டு புதிய சிந்தனை வழியிலான தேடலும், மதிப்பீடுகளின் உருவாக்கமும் நடைபெற்றுக் கொண்டிருந்தன. சமூக மறுமலர்ச்சிச் சிந்தனையின் பிரவாகம் ஒவ்வொருவரையும் ஏதோவொரு வகையில் ஆட்படுத்திக் கொண்டிருந்தது. இந்த அலையின் வேகமும் விசாலமும் கால இலக்கியம் பற்றிய புதுமையான சிந்தனைக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தது. இதனூடு உருவாகி வந்த தலைமுறை எழுத்தாளர்களுள் தனிப்பாதை அமைத்துப் பயணம் செய்தவர்தான் புதுமைப்பித்தன்.
புதுமைப்பித்தன் திருநெல்வேலியைப் பூர்வீகமாகக் கொண்ட ஒரு நடுத்தரவர்க்க குடும்பத்தில் - சொக்கலிங்கம்பிள்ளை-பர்வதத்தம்மாள் தம்பதியருக்கு - 1906 ஏப்ரல் 25ம் தேதி பிறந்தவர். புதுமைப்பித்தனின் தந்தையார் அரசாங்கத்தில் தாசில்தாரராக வேலை பார்த்து வந்தவர். உத்தியோக நிமித்தம் ஊர் ஊராக மாற்றலாகி வந்தார். புதுமைப்பித்தனுக்கு எட்டு வயதாகும்போது தாயார் காலமானார். தந்தையார் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இதன் பின்னர் புதுமைப்பித்தன் ஒருவகைத் தனிமையுணர்ச்சியுடனும் கசப்புணர்ச்சியுடனும் வளர்ந்து வந்தார் என்பதை அவரது வாழ்க்கை வரலாறு காட்டுகிறது.
புதுமைப்பித்தன் பி.ஏ. படிப்பை முடித்தார். தந்தையார் தன்னைப் போல் மகனும் அரசு உத்தியோகம் பார்க்க வேண்டுமென விரும்பினார். ஆனால் புதுமைப்பித்தனுக்கு அதில் விருப்பமில்லை. எழுதுவதையே தொழிலாகக் கொள்ள விரும்பினார்.
1931இல் கமலாம்பாளை திருமணம் செய்து கொண்டார். தந்தையுடன் முரண்பட்டுக் கொண்டு பத்திரிகையில் வேலை தேடிச் சென்னை சென்றார். ஊழியன், தினமணி, தினசரி உள்ளிட்ட பத்திரிகைகளில் பணிபுரிந்தார். ஆனால் இந்த வருமானம் குடும்பம் நடத்தப் போதுமானதாக இருக்கவில்லை. இந்நிலையில் சினிமாத்துறைப் பக்கமும் கவனம் திரும்பியது. ஜெமினி தயாரித்த ஒளவையார் மற்றும் சில படங்களுக்கு வசனம் எழுதினார். ஒளவையார் இவர் எழுதிய வசனத்தில் வெளிவரவில்லை. ஆனால் பணம் கிடைத்தது.
மேலைத்தேச இலக்கியங்கள் தமிழ் இலக்கியங்கள் ஆகியவற்றில் ஆழ்ந்த பரிச்சயம் கொண்டவராக இருந்தார். சிறுகதைத்துறையில் புதுமைப்பித்தன் வருகை, அவருக்குத் தவிர்க்க முடியாத அந்தஸ்தை வழங்கியது. எந்தக் கட்சிக்குள்ளும் மாட்டிக் கொள்ளாததை தனது இயல்பாக்கிக் கொண்டிருந்தார்.
தமது கதைகளில் எழுதுவதற்கு எடுத்துக்கொண்ட விசயங்களைப் பற்றிப் புதுமைப்பித்தன் குறிப்பிடும்போது, ''நடைமுறை விவகாரங்களைப் பற்றி எழுதுவதில் கெளரவக் குறைச்சல் எதுவும் இல்லை'' என்று எழுதுகிறார். அக்காலத்தில் ஒதுக்கப்பட்ட ஓரங்கட்டப்பட்ட மனிதர்களைத் தனது படைப்புலகில் நுழைய விட்டவர். வெகுசாமானிய மக்களைப் பற்றிய விவகாரங்களைச் சிறுகதைப் பொருளாகக் கொண்டவர்களில் புதுமைப்பித்தன் முன்னோடி என்றே கூற வேண்டும்.
புதுமைப்பித்தனின் சிறுகதைகளை வாழ்க்கை என்கிற பெருமாளிகையின் தனிப்பட்ட, வேறுவேறு சாளரங்களைத் திறந்து காட்டுகிற காட்சிகளாக நாம் காண முடிகிறது என க.நா.சு கணிப்பது முற்றிலும் சரியானது. ஏனெனில் புதுமைப்பித்தன் எழுதிய அனைத்துக் கதைகளுமே வாழ்க்கையின், அதற்குள் இயங்கும் மாந்தர்களின் நுண்ணியதான மன அம்சங்களையெல்லாம் அனுபவமாக நம்முன் விரித்துச் செல்லும் பாங்கு புதுமைப்பித்தனுக்குக் கைவந்த கலையாகவே உள்ளது.
கதைகளை ஆத்மதிருப்திக்காக எழுதினாலும், அதை எழுதுவதற்குப் பயிற்சியும் மனஈடுபாடும் அவசியம். இவை புதுமைப்பித்தனுக்கு வெளிப்படையாகவே இருந்திருக்கிறது.
''எழுத்துக்குக் கைப்பழக்கம் மிகவும் அவசியம். முடுக்கிவிட்ட எந்திரம் மாதிரி தானே ஓர் இடத்தில் வந்து நிற்கும். இது என் அனுபவம்'' என்ற அவரது சொற்களால் அவரை நன்கு புரிந்து கொள்ள முடிகிறது. "என் நெஞ்சில் எழுதாத கதைகளாகப் பல எப்பொழுதும் கிடந்து கொண்டே இருக்கும். அந்தக் கிடங்கிலிருந்து நான் எப்பொழுதும் எடுத்துக் கொள்வேன்'' என்று அவர் குறிப்பிட்டதற்கு அவரது கதைகளே நிரூபணம்.
''வாழ்க்கையில் 'முற்றிற்று', 'திருச்சிற்றம்பலம்' என்று கோடு கிழித்துவிட்டு 'ஹாய்'யாக நாற்காலியில் சாய்ந்து கொள்ளும்படி ஏதாவது இருக்கிறதா? வாழ்க்கை எல்லையற்றது. கடவுள் வாழ்க்கையின் கடைசிப் பாகத்தை எழுதி விடவில்லை. அவரால் எழுதவும் சாத்தியப்படாத காரியம்" என்று அவர் புரிந்து கொண்டதால்தான் அவரது கருத்துலகப் பரப்பு விசாலமாக இருந்தது. மனம் அறிவு ஆகியவற்றின் வினையாற்றலால் உண்டாகிற மொத்த அனுபவமாக அமைவது வாழ்க்கை. இதுதான் புதுமைப்பித்தன் கதைகளை வாசிக்கும் வாசகர்களுக்குத் தொற்றி வைக்கப்படும் உணர்வு.
“ஒருவர் என்னுடைய புனைபெயரை வைத்துக் கொண்டு என்னை விமர்சனம் செய்தார். பித்தமும் இடையிடையே புதுமையும் காணப்படும் என்றார். வாஸ்தவம்தான். பித்தா, பிறைசூடி பெருமானே என்ற உருவகத்தில் பொதிந்துள்ள உன்மத்த விகற்பங்களை அவர் குறிப்பிடுகிறார் என்று பொருள்கொண்டு, அவ்வளவும் நமக்குண்டு என ஒப்புக் கொள்கிறேன்; அவரவர் மனசுக்கு உகந்த ரீதியில் இருப்பவைகளே புதுமை எனக் கொள்ளப்படுகின்றன. நான் பொருள் கொடுக்கும் பித்தன்தான். அதுவே புதுமை. என் கதைகளில் புதுமை அதுதான்'' என்பதாகப் புதுமைப்பித்தன் தெளிவாகவே குறிப்பிட்டுள்ளார். இதுபோல்தான் அவரது படைப்புலகு அமைந்திருந்தது. இதனால்தான் அவர் காலத்து எழுத்தாளர்களிடமிருந்து புதுமைப்பித்தன் தனித்து அடையாளம் காணக்கூடியவராக இருக்கிறார்.
தமிழ்ச் சமூகத்தின், தமிழ்க் கலாசாரத்தின் சகல அம்சங்களையும் தன்னுள் கொண்டு காலத்தைப் பிரதிபலிப்பதாய் காலத்தை மீறி நிற்பதாய் அவரது கதைகள் உள்ளன. இதனால்தான் தற்போதுகூடப் புதுமைப்பித்தன் படைப்புலகு நவீன தமிழ் இலக்கியப் பரப்பில் மீள்கண்டுபிடிப்புக்குரியதாகவே உள்ளது.
''இலக்கியம் மன அவசத்தில் தோன்றி புறவுலகின் அடிமுடியை நாட முயலும் ஒரு பிரபஞ்சம்'' எனப் புதுமைப்பித்தன் குறிப்பிட்டது தனக்குள்ளேயே தான் கண்டடைந்த உண்மை என்றே கூற வேண்டும். 1930-48ஆம் ஆண்டுகளில் இயங்கிய புதுமைப்பித்தனின் வேகம் தமிழ்ப்புனைகதை மரபில் புதுப்பாய்ச்சல் உருவாகக் காரணமாயிற்று. அவரது எழுத்துநடை தமிழ் உரைநடை மரபில் புதிய தளம் அமைக்கத் தொடங்கியது. சிறுகதையில் பலவித பரிசோதனைகளைச் செய்து தமிழ்ச் சிறுகதையின் கதை சொல்லல் முறைமையில் புதிய ஆர்வத்தைத் தூண்டினார். மேலும் அவரது கதைகளின் உருவ அமைதியிலும் பொருளைக் கையாளும் முறையிலும் வளர்ச்சியைக் காணக்கூடியதாகவே உள்ளது. இது புதுமைப்பித்தனது தனிச்சிறப்பு என்றே கூறலாம்.
ஆக மொத்தத்தில் புதுமைப்பித்தன் கதைகள் பற்றி அவரது கூற்றில் கூறுவதனால் ''பொதுவாக என்னுடைய கதைகள் உலகத்துக்கு உபதேசம் பண்ணி உய்விக்க ஏற்பாடு செய்யும் ஸ்தாபனம் அல்ல; பிற்கால நல்வாழ்வுக்குச் செளகரியம் பண்ணி வைக்கும் இன்ஷ்யூரன்ஸ் ஏற்பாடும் அல்ல... எனக்குப் பிடிக்கிறவர்களையும் பிடிக்காதவர்களையும் கிண்டல் செய்து கொண்டிருக்கிறேன்.''
தெ. மதுசூதனன் |