தொழில்நுட்பப் புரட்சி மூலம் உலகையே மாற்றமுடியும் என்ற நம்பிக்கை சிலிக்கன் வேல்லியின் அடிநாதமாய் இருந்து வந்திருக்கிறது. இண்டெல், ஆப்பிள், நெட்ஸ்கேப், யாகூ, சன், ஓரக்கிள் நிறுவனங்கள் எல்லாமே ஓரளவுக்கு இந்த அடிநாதத்தைக் கொண்டு தம்மை விளம்பரப் படுத்தி வந்திருக்கின்றன. கடந்த பத்தாண்டுகளின் பிரமிக்கத்தக்க பொருளாதார வளர்ச்சிக்கு வித்திட்டதே இணையம் என்ற இண்டர்நெட் தொழில்நுட்ப வளர்ச்சிதான். அது உலகையே மாற்றியிருக்கிறது என்பதில் சற்றும் ஐயமில்லை. ஆனால் பழைய உலகத்தை வேரோடு சாய்த்துப் புதியதோர் உலகம் படைப்பதில் வெற்றி கண்டிருக்கிறதா?
இணையப் புரட்சிக்கும் தங்களுக்கும் ஒரு தொடர்பும் இல்லாவிட்டாலும், இணையத் தொழில்நுட்பத்தைப் பரப்புவதில் பங்கேற்று அதனால் வளம் பெற்ற நிறுவனங்களுள் மைக்ரோசா·ப்டும், அமெரிக்கா ஆன்லைனும் குறிப்பிடத் தக்கவை. அதிலும் அமெரிக்கா ஆன்லைன் (ஏஓஎல்) நிறுவனம் புத்திசாலித்தனமாக இணைய வளர்ச்சியில் பங்கேற்று உலகிலேயே மிகப்பெரிய ஊடக நிறுவனமான டைம்-வார்னர் நிறுவனத்தையே தன்னோடு இணைத்துக் கொள்ளும்படி வளர்ந்தது தகவல் தொழில்நுட்ப யுகத்தின் மிகப்பெரிய சாதனை என்று சொல்லலாம். டாட்.காம் நிறுவனங்கள் நிழல்வெளியிலிருந்து நிஜ வெளியை வெல்லும் அளவுக்கு வளர்ந்து விட்டதற்கு அமெரிக்கா ஆன்லைன் வளர்ச்சியை எடுத்துக்காட்டாகக் கூறுவார்கள். இந்த வாரம், ஏஓஎல்-டைம் வார்னர் நிறுவனம் தனது பெயரிலிருந்து ஏஓஎல்லை நீக்குவதென்று முடிவெடுத்திருக் கிறது. டாட்காம் யுகத்தின் அசுரத்தனமான பங்குவிலை மதிப்பீடுகள் மண்ணைக் கவ்விய பின்னர் அமெரிக்கா ஆன்லைன் என்ற பெயர்கூடத் தம் நிறுவனத்தின் தலைப்பில் இருக்கக்கூடாது என டைம் வார்னர் உயர் அலுவலர்கள் தீர்மானித்திருக்கின்றனர்.
டைம் வார்னர் தம் பெயரில் வேண்டுமானால் ஏஓஎல்லை அகற்றியிருக்கலாம்; ஆனால் புதிய தொழில்நுட்பங்களைக் கொண்டு வளர்வதில் முன்னைப் போலவே முழுமுனைப்புடன் தொடர்கிறது. டாட்காம்மில் இருக்கும் டாட் நாங்கள்தாம் என்று பறைசாற்றிக் கொண்டிருந்த சன் நிறுவனமும் இப்போது டாட்காம் பற்றிப் பேசுவதை நிறுத்தி விட்டது. இருந்தாலும், தகவல் தொழில்நுட்பப் புரட்சியின் தாக்கங்கள் உலகெங்கிலும் தெரிகின்றன. மூளையைப் பயன்படுத்தும் எந்த வேலையையும், யார் வேண்டுமானாலும், உலகில் எங்கிருந்தும் செய்ய முடியும் என்ற நிலையை நியதியாய்க் கொண்டு வந்திருப்பது இந்தப் புரட்சிதான்.
அமெரிக்காவில் காணாமல் போய்க் கொண்டிருக்கும் தகவல் தொழில் நுட்ப வேலைகள் இப்போது இந்தியாவில் இந்து பத்திரிக்கையில் வேலைகள் விளம்பரப் பக்கங்களில் மறுபிறவி எடுத்திருக்கின்றன. முன்னைப் போல் அமெரிக்காவில் வேலை என்ற வெறியோடு கணினிக் கல்வி படிப்பது வெகுவாகக் குறைந்து விட்டது என்றாலும், இந்தியாவிலேயே நல்ல சம்பளத்தில் நல்ல வேலை கிடைக்க விரும்புபவர்கள் தொடர்ந்து கணினி படிக்கிறார்கள். மூளைகள் எல்லாம் இந்தியாவை விட்டு வெளியே போய்க் கொண்டிருக்கிருக்கின்றனவே என்று பயந்து கொண்டிருந்தவர்கள், மூளைகள் மீண்டும் இந்தியாவுக்கு இடம் பெயர்வது குறித்து மகிழ்கிறார்கள். தங்கள் படிப்புக்கேற்ற வேலைகள் இந்தியாவில் இல்லை என்று மேல்நாடு வந்தவர்கள் இந்தியாவுக்குத் திரும்பத் தயங்க வேண்டியதில்லை. தற்போதைக்கு மேல்நாட்டுத் தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை அனுபவமுள்ளவர்கள் இந்தியாவுக் குத் தேவை. இன்னும் சில ஆண்டுகளில், இந்திய அனுபவம் இல்லாதவர்களுக்கு இந்தியாவில் வேலை கிடைப்பது சந்தேகமே! இந்தியாவுக்குத் திரும்பலாமா வேண்டாமா என்று மதில் மேல் பூனையாக இருப்பவர்கள் முடிவெடுக்க வேண்டிய காலம் நெருங்கி விட்டது.
தகவல் தொழில்நுட்பப் புரட்சியின் தாக்கத்தைச் சென்னை மாநகரில் தினமும் அனுபவிக்க முடிகிறது. தொலைபேசிக்குப் பதிவு செய்து பல பத்தாண்டுகள் காத்திருந்த காலம் மலையேறி விட்டது. செல்பேசி செங்கோலோச்சுகிறது சென்னையில். எங்கும் எதிலும் செல்பேசியும் எஸ் எம் எஸ்ஸ¤ம்தான். வேலைக்காரப் பெண்மணியிடம் பேச மட்டும் தமிழ் கற்றுக் கொண்டவர்கள் பெரும்பான்மையாக இருப்பதாலோ என்னவோ சென்னையில் தமிழ் விளம்பரங்கள் கூட ஆங்கில எழுத்துகளில் வருகின்றன. "konjam samaiyal, konjam serial" என்று செல்பேசி விளம்பரப் பலகைகள் ஒரு புதிய கலவை மொழியை உருவாக்கி வருகின்றன. இந்த மொழி தமிழும் ஆங்கிலமும் கலந்த தமிங்கிலம் இல்லை. இது தமிழும் அமெரிக்க மொழியும் இணைந்த தமெரிக்க மொழி! ஆமாம், நுனிநாக்கில் ஆக்ஸ்பிரிட்ஜியன் ஆங்கிலம் பேசிக் கொண்டிருந்த சென்னை உயர்குடிப் பெருமக்கள் இப்போது நல்ல தரமான அமெரிக்க மொழியை அமெரிக்க உச்சரிப்பிலேயே பேசிக் கொண்டிருக்கிறார்கள்!
"அமெரிக்காவிலிருந்து வந்திருக்கிறீர்கள்! ஆனால், நம்ம ஊர் நாட்டுப்புறத்தானைப் போல நல்ல தமிழில் பேசுகிறீர்களே!" என்று என் தமிழைப் பார்த்து மூக்கில் விரல் வைத்தார்கள் சென்னைத் தமிழர்கள். அன்றாட வாழ்வில் எல்லாமே கலப்படம் என்பதால், மொழி, பண்பாடு இவற்றிலும் கலப்படம் வேரூன்றியிருப்பதைச் சென்னைத் தமிழர்கள் பொருட்படுத்துவதில்லை. நல்ல தமிழ் பேசினால் யாருக்கும் புரியாது என்ற சாக்கில் பிட்ஜின் கலவை மொழியைத் தொலைக்காட்சி, திரைப்படம், வானொலியில் திணித்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் பேசும் சொற்கள், உச்சரிப்பு இவற்றில் ஒரு புதிய மொழியே உருவாகிக் கொண்டிருக்கிறது என்கிறார் எழுத்தாளர் சுஜாதா. வானொலியில் நல்ல தமிழ் கேட்க வேண்டுமென்றால் அறுபது ஆண்டுகளாகத் தமிழ் மணம் பரப்பி வரும் பி.பி.சி. தமிழோசை மற்றும் சிங்கப்பூர் ஒலி 96.8, மலேசிய வானொலி, இலங்கை வர்த்தக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் இவற்றோடு வட அமெரிக்க, ஐரோப்பிய ஒலிபரப்புகள் இருக்கவே இருக்கின்றன. ஆகக்கூடி, தமிழ்நாட்டில் தான் தமிழுக்கு மதிப்பு இல்லை!
மணி மு. மணிவண்ணன் |