மூத்தவரும் முன்னோடியுமான வரதர் (1924 - 2006)
ஈழத்தின் நவீன தமிழிலக்கிய வரலாற்றில் 'வரதர்' முக்கியமானவர். இவர் மூத்த எழுத்தாள பரம்பரை யைச் சேர்ந்தவர் மட்டுமல்ல, தொடர்ந்து இலக்கிய செயற்பாட்டினை அடுத்த அடுத்த தலைமுறைக்கு கையளிப்புச் செய்யும் வகிபாகத்தையும் வகித்தவர்.

1924களில் யாழ்ப்பாணம் பொன்னாலையில் பிறந்து அச்சக முகாமையாளர் நூல் வெளியீட்டாளர் போன்ற தொழில்களை மேற்கொண்டவர். 1939களில் ஈழகேசரி 'மாணவர்களுக்கான கல்வி அனுபந்தம்' எனும் பகுதியில் கட்டுரை எழுதத் தொடங்கினார். பின்னர் 1940 ஈழகேசரி ஆண்டுமலரில் 'கல்யாணியின் காதல்' சிறுகதை மூலம் எழுத்துலகில் நுழைந்தார். தொடர்ந்து ஈழகேசரிப் பண்ணையில் வளர்ந்து வந்தார். 1943இல் தமிழிலக்கிய மறுமலர்ச்சிச் சங்கம் உருவாவதற்குக் காரணமாக அமைந்து அதன் மூலம் 1946இல் 'மறுமலர்ச்சி' எனும் இதழைத் தொடங்கினார். தமிழில் மறுமலர்ச்சிச் சிந்தனையின் முகிழ்ப்பு வெளிப்படுவதற்கு இந்த இதழ் பங்களிப்புச் செய்துள்ளது. நவீன தமிழிலக்கியப் பயில்வில் மறுமலர்ச்சி புதுத்தடம் பாய்ச்சியது. குறிப்பாக சிறுகதை வளர்ச்சியில் மறுமலர்ச்சிக்கு முக்கியமான இடமுண்டு. இதனால் 'மறுமலர்ச்சிச் சிறுகதைகள்' எனும் தொகுப்பு தெளிவாக அடையாளப்படுத்துகிறது. இவற்றுக்குப் பின்னால் வரதரின் நோக்கும் போக்கும் முறையாக வெளிப்பட்டுள்ளது.

1940களில் சிறுகதை எழுதத் தொடங்கிய வரதர் ஈழத்துச் சிறுகதை மரபில் தனக்கென்று தனித்தன்மைகள் கொண்டு இயங்கினார். 'கயமை மயக்கம்' எனும் தொகுப்பு வரதரின் சுயத்துவம், தேடல், படைப்பாக்க முறைமை, சமூக அக்கறை, கதை சொல்லும் ஆற்றல் போன்ற அம்சங்களை வெளிப்படையாகவே உணர்த்துகின்றன. யாழ்ப்பாணத்தின் சமூக கலாசார பின்புலத்தின் சாயல்கள் ஆங்காங்கு கதைகளின் ஓட்டத்தினூடு பதிவு செய்யப் பட்டுள்ள தன்மை தனித்து அவதானிக்கலாம்.

1956இல் தமிழர்கள் மீதான சிங்களவர் களின் காடைத்தனத்தின் பொழுது பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட பெண் பற்றிய கதை. தன் மனைவி மானத்தினால் கற்பிழக்கவில்லையென நம்பும் கணபதி ஐயர். அதனைத் தனது நண்பருக்கும் வெளிப் படுத்துகின்றார். இன்றுவரை பெண்கள்மீது தொடரும் 'பாலியல் வன்முறை' என்ற முக்கிய பிரச்சினையின் ஒரு அம்சத்தை இக்கதை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது. காலத்தைக் கடந்தும் மனதில் பதியும் நல்ல கதைகளை வரதர் அப்பொழுதே எழுதியிருந்தார்.

மனித அவலம், சமூக நெருக்கடி பற்றிய துலங்கலுடன் இயங்கியவர் வரதர். மனித நேயம் கொண்டு வாழ்வை நேசித்தவர். மனித மதிப்பீடுகளுக்கு எதிராக இயங்கும் போக்குகளுடன் சக்திகளுடன் உடன்பட மறுத்தவர். அவரளவில் தனக்குள்ளே கலகத் தன்மையுடன் இயங்கியவர். இதனை அவரது படைப்புலகு மட்டுமல்ல இலக்கியச் செயற்பாடு களும் உணர்த்துகின்றன.

வரதர் நடத்திய இதழ்கள் பல. மறுமலர்ச்சி (1946). வரதர் புத்தாண்டு மலர் (1949), ஆனந்தம் (1952), தேன்மொழி (1955), வெள்ளி (1957), புதினம் (1961), அறிவுக் களஞ்சியம் (1992) என பல்வேறு இதழ்களை நடாத்தி வந்தார். இதன் மூலம் தமிழ்சூழலில் பல்வேறு விடயங்கள் அறிமுகமாகவும் அவைசார்ந்த உரையாடல்கள் பெருகவும் காரணமாக இருந்துள்ளார். இது இவரது தனிச்சிறப்பு என்றே கூறலாம். அதைவிட 30க்கு மேற்பட்ட பல்துறைசார் நூல்களையும் வெளியிட்டுள்ளார். க. கைலாசபதி எழுதிய 'இலக்கியமும் திறனாய்வும்' என்ற நூல் கூட வரதர் மூலமாகவே வெளிவந்தது.

எப்போதும் புதுமையை வரவேற்கும் பண்பு கொண்டவர். எதையும் அறிந்து தெளிந்து கொள்ள வேண்டுமென விரும்பியவர். அவரது படைப்பு மனம் விரிந்தது. தன்னுடைமை சார்ந்த மரபுக்குள் சுருங்காமல் பல எழுத்தாளர்களது படைப்புக்களை வெளிப்படுத்துவதிலும் முனைப்பாக இருந்தவர். ஈழத்து நவீன தமிழிலக்கிய வரலாற்றின் திசைப்படுத்தலுக்கான பல்வேறு களங்களை அடையாளம் காட்டியவர். இதில் உறுதியாகவும் தெளிவாகவும் இருந்துள்ளார். அனைத்துக்கும் வரதரது பன்முக ஆளுமையே காரணமாக இருந்துள்ளது. இவரது தலைமுறை சார்ந்த எழுத்தாளர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது 'வரதர்' தனித்துவமான சிந்தனாவாதி, படைப்பாளி, செயற்பாட்டாளர். அத்தகைய தகுதிகள் உள்ளவரது இழப்பு ஈழத்துக்கு பெரும் இழப்புத்தான்.

தனது வாழ்காலத்தில் சமூகத்துக்கும் இலக்கியத்துக்கும் நிறையவே பங்களிப்புச் செய்துள்ளார். அந்தவகையில் எப்போதும் அவர் முக்கிய கவனிப்புக்கு உரியவராகவே உள்ளார்.

தெ.மதுசூதனன்

© TamilOnline.com