பொடாவில் சிக்கும் மத்திய அமைச்சர்
மதிமுகவின் தலைவர் வைகோ மற்றும் அக்கட்சியைச் சேர்ந்த 8 பேர் ஏற்கெனவே விடுதலைப்புலி ஆதரவு நிலை எடுத்ததற்காக பொடாவில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவரமுடியாமல் இருக்கின்ற நிலையில் அக்கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர் கண்ணப்பன் மீதும் பொடா பாயும் நிலை ஏற்பட்டுள்ளது.

செப்டம்பர் 16ம் தேதி ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்ற அமைச்சர் கண்ணப்பன், விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக அவ்விழாவில் பேசியுள்ளார். இவரின் ஆதரவுநிலை பேச்சினால் 'பொடா' இவர் மேல் பாயக்கூடிய ஆபத்து உருவாகியுள்ளது.

இந்தியாவில் தடைசெய்யப்பட்ட ஓர் இயக்கத்திற்கு ஆதரவாகப் பேசிய மத்திய அமைச்சர் கண்ணப்பனைப் பதவிநீக்கம் செய்யவேண்டும் என்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பிரதமருக்குக் கடிதம் அனுப்பியுள்ளார்.

சட்டத்தின் மேலாண்மையை நிலைநாட்டும் மாநிலம் என்ற வகையில் கண்ணப்பன் மீது நடவடிக்கை எடுப்பதே சரியானதாக இருக்கும் என இந்த அரசு கருதுகிறது. எனவே பொடா சட்டத்தின் கீழ் கண்ணப்பன் மீது நடவடிக்கை எடுக்க எனது அரசு முடிவு செய்துள்ளது'' என்று கூறியுள்ளார்.

உலகில் எங்கெல்லாம் தமிழர்களுக்குத் தீங்கிழைக்கப் பட்டாலும் அதை எதிர்ப்பது ஒவ்வொரு தமிழனின் கடமை, மதிமுக ஏதும் பணமோ, ஆயுதங்களோ புலிகளுக்குக் கொடுத்துவிடவில்லை என்று சொன்ன கண்ணப்பன் அதோடு நிற்காமல் "எங்கே, தமிழக முதல்வர் என்னைக் கைது செய்யட்டும் பார்க்கலாம்" என்றும் சவால் விடுத்துள்ளார்.

இந்நிலையில் மதிமுகவை சேர்ந்த மத்திய அமைச்சர் செஞ்சி ராமச்சந்திரன், அவைத் தலைவர் எல். கணேசன் ஆகியோர் துணைபிரதமர் அத்வானியை சந்தித்து பேசியுள்ளது மிக முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது.

நாட்டுநலனைப் பாதுகாக்க பொடா சட்டம் கட்டாயம் தேவை என்பதில் பாஜக உறுதியாக இருப்பதாக அக்கட்சியின் அகில இந்தியத் தலைவர் வெங்கையநாயுடு திருப்பூரில் நிருபர்களிடையே கூறினார். இச்செய்தி எழுதப்படும்போது பிரதமர் அமெரிக்காவில் இருக்கிறார். அவர் இந்தியா திரும்பிய பின்னரே முடிவு எடுக்கப்படும் என அத்வானி கூறியுள்ளார்.

ஆக மத்திய அமைச்சர் கண்ணப்பனின் பதவி நீடிக்குமா? பொடாவில் அவர் கைது செய்யப்படுவாரா?

கேடிஸ்ரீ

© TamilOnline.com