இருதயம் செயலிழக்கும் போது இருமினால் மூளைக்கு ரத்தம் செல்கிறது. அதனால் நோயாளி அதிக நேரம் சுய நினைவோடு இருந்து, உதவிக்கு டாக்டரையோ ஆம்புலன்ஸையோ மற்றவர்களையோ அழைக்க முடியும். இருமும் போது இதயதுடிப்பும் சீராகும். பொது மக்களுக்கு இப்புதிய உத்தியை டாக்டர்கள் சொல்லித்தரலாம்.
போலந்து டாக்டர் பீட்டலென்ஸ், வியன்னாவில் நடந்த ஐரோப்பிய இதயநோய் டாக்டர்கள் கூட்டத்தில் பேசியது...
******
எனக்கு முக்கியமான மூன்று குணங்களை எனது 3 ஆசிரியர்கள் போதித்தனர். ஒருவர் எனது தந்தை. அடுத்தவர் எனது ஆரம்பப் பள்ளி ஆசிரியர். மூன்றாவதாக 'இஸ்ரோ'வின் முன்னாள் தலைவர் பேராசிரியர் சதீஷ் தவன்.
ஒருமுறை ஒருவர் அளித்த அன்பளிப்பை நான் பெற்றேன். அதற்காக எனது தந்தையிடம் அடி வாங்கினேன்.
அன்பளிப்புகள் ஒரு பதில் நடவடிக்கையை எதிர்பார்த்துத்தான் அளிக்கப்படுகின்றன. எனவே அவற்றில் மனத்தைப் பறிகொடுத்துவிடக் கூடாது என்பார் எனது தந்தை.
இறைவன் ஒருவருக்கு ஒரு பொறுப்பைக் கொடுக்கும்போது அவருடைய தேவை என்னவோ அதையும் கவனித்துக் கொள்கிறார். அதற்கு அதிகமாக ஒருவர் ஏதேனும் பெற்றால், அது சட்டவிரோதமான ஆதாயம்தான் என்று ஓர் இஸ்லாமிய நீதிமொழியைச் சுட்டிக்காட்டிக் கூறுவார் எனது தந்தை. அன்பளிப்புப் பெறுவதானது, பாம்பைத் தொட்டுவிட்டு அதனிடமிருந்து விஷத்தைப் பெறுவதற்கு ஒப்பாகும்.
எனது ஆரம்பப் பள்ளி ஆசிரியர் சிவசுப்பிரமணிய ஐயர் பறவைகளைப் பற்றிக் கற்பிக்கும்போது வெறும் பாடத்தை நடத்திவிட்டுச் செல்லாமல், நேரடியாகப் பறவைகளைக் காட்டி விளக்குவார். அதுதான் எனக்கு ஒரு இலட்சியத்தைக் கொடுத்தது; என் வாழ்க்கைக்கு ஒரு குறிக்கோளை உருவாக்கிக் கொள்ளத் தூண்டியது.
ஓர் ஆசிரியரானவர் மிக நுணுக்கமாகத் திட்டமிட்டு, தனது கற்பிப்புப் பணிக்கான தயாரிப்புகளைச் செய்ய வேண்டும். அறிவைப் பெறுவதற்கு மாணவனையும் தயார் செய்ய வேண்டும் என்பதைக் கடைப்பிடித்தவர் எனது ஆசிரியர் சதீஷ் தவன்.
குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் - ஆசிரியர் தின வானொலி உரையிலிருந்து...
******
இந்தியாவிலும், ஆசியன் (ASEAN) அமைப்பில் (தென்கிழக்கு ஆசிய நாடுகள் அமைப்பு) இடம் பெற்றுள்ள நாடுகளிலும் கோடிக்கணக்கான மக்கள் விவசாயத் தொழிலைச் சார்ந்து இருக்கிறார்கள். விவசாயத்தில் பாதிப்பு ஏற்பட்டால் அதன் காரணமாக பொருளாதாரத்தில் மட்டும் இன்றி சமுதாயத்திலும், அரசியலிலும்கூட பாதிப்பு ஏற்படும். எனவே விவசாயிகளின் நலன்களை பாதுகாக்க வளரும் நாடுகள ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
தோகாவில் நடந்த உலகவர்த்தக அமைப்பின் மாநாட்டில் எடுக்கப்பட்ட சில முடிவுகளைச் செயல்படுத்துவதில் போதிய கவனம் செலுத்தாதது வருத்தம் அளிப்பதாக உள்ளது. உலக வர்த்தக அமைப்பின் நடவடிக்கை களுக்கும் சர்வதேச வர்த்தக உடன்பாடுகளும் பாரபட்சம் இல்லாததாக இருக்க வேண்டும். உலக வர்த்தகத்தில் பாரபட்சம் ஏற்படுவதைத் தடுக்க இந்தியாவும் 'ஆசியன்' நாடுகளும் மற்ற வளரும் நாடுகளும் ஒருங்கிணைந்து போராட வேண்டும்.
தென்கிழக்கு ஆசிய மாநடுகளுடன் வர்த்த கத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கை களை இந்தியா எடுத்துவருகிறது.
நம்மிடையே போக்குவரத்து வசதியும் மேம்பட வேண்டும். இந்தியாவுடன் தாய்லாந்து, மியான்மர் நாடுகளை இணைக்கும் மிகப்பெரிய சாலை அமைப்பதற்கான பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன.
பிரதமர் வாஜ்பாய் - இந்திய, தென்கிழக்கு ஆசியநாடுகள் அமைப்பின் வர்த்தக உச்சி மாநாட்டு தொடக்க உரையில்...
******
குடும்பத்தில் ஒரு பெண்ணுக்குத் திருமணம் ஆகாவிட்டால் அவள், அந்தக் குடும்பத்திலிலுள்ள மற்ற பெண்களுக்கும் தடைக்கல்லாயிருக்கிறாள். அவளிடம் லட்சியங்கள் இருந்தும் குடும்பத்துக் காக மாற வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. மணமாகாத பெண் கடைக்கோ, பொது இடங்களுக்கோ சென்று வீடு திரும்பும் போது சமூகம் தவறாகத்தான் பார்க்கிறது. இது மாதிரி நிலை வரும்போது தன்னம்பிக்கையைத் தளரவிடுவதில்லை. பெண்கள் தனித்து வாழமுடியாது என்று எதுவும் இல்லை. தனித்து வாழக்கூடாது என்றதொரு சம்பிரதாயத்தை இந்தச் சமூகம் சட்டமாக வைத்திருக்கும் நிலைதான் அவளுக்கு அதைச் சாத்திய மற்றதாக்குகிறது.
ஜோதிர்லதா கிரிஜா, எழுத்தாளர் - தினமணிகதிரில் 'திருமணம் செய்யாமல் வாழ முடியுமா' என்ற தலைப்பில்...
******
10-15 வயதில், தியேட்டரில் அந்தக் காலத்தில் வெளிவரும் புதிய படங்களை முதல் காட்சியிலே பார்ப்பது பெரும் பெருமையாகக் கருதப்பட்டது. சட்டையை நண்பர்களிடம் கழட்டிக் கொடுத்துவிட்டு வெறும் பனியனுடன் மட்டும் கூட்டத்தில் முண்டியடித்துச் செல்வோம் டிக்கெட் வாங்குவதற்கு. டிக்கெட் எடுத்துவிட்டு வெளியில் வரும்போது பொதுமக்கள் ஒலிம்பிக் வீரனைப் பார்ப்பதுபோல் பார்ப்பார்கள். இவனும் பனியனைக் கழட்டி பிழிவான், ஆறாக ஓடும். இப்படியெல்லாம் படம் பார்த்து ரசித்தோம். இன்று வீட்டில் டி.வி, டெக், டிவிடி-யில் படம் பார்க்கும்போது ஏற்படாத உற்சாகம் அன்றிருந்தது. இப்படிப்பட்ட காலத்தில் படம் பார்த்து, அதைப் பற்றியே நினைத்து அசைபோட்டுக் கொண்டிருப்பேன். நான்காம் வகுப்பு முதல் சென்னையில் படித்ததால், இன்று அழிந்துவிட்ட மூர்மார்கெட்டுக்குப் போவேன். அங்கு மலைபோல குவித்து வைத்திருக்கும் ரிக்கார்டுகளில் பிடித்தமானவற்றை அம்மா கொடுக்கும் பணத்தில் மிச்சம் பிடித்து வாங்குவேன்.
இந்தப் பழக்கம் 1955களிலேயே தொடங்கிவிட்டது. நான் வாங்கிச் சேர்த்த இந்த ரிக்கார்டுகள் அனைத்தும் என் விருப்பத்தின் அடிப்படையில், என் சொந்த சம்பளத்திலிருந்தே வாங்கிச் சேர்த்தவை. எந்த ஒரு நிலையிலும் நான் என் பதவியைக் காரணம் காட்டி யாரிடமும் இலவசமாகவோ, குறைத்துக் கொடுக்கும்படி சொல்லியோ வாங்கியதில்லை. ரிக்கார்டின் தன்மை அறிந்து அதற்கான தொகை கொடுத்தே வாங்கிச் சேர்த்தேன். வேலை கிடைத்ததும், தினம் மாலை 5 முதல் 7.30 மணிவரை மூர்மார்க்கெட் செல்வது வழக்கமானது.
இங்கு வாங்கும் ரிக்கார்டுகள் இரண்டாம் தரமானவை. கோடு கிழித்தும், தேய்ந்தும் இருக்கும். அதனால் மலேஷியா, சிங்கப்பூர் ரிக்கார்டு கடைக்காரர்களிடம் சொல்லி வைத்து புது ரிக்கார்டாகவும் வாங்க ஆரம்பித்தேன். தமிழிலிருந்து, தெலுங்கு, இந்தி என்று எல்லா மொழி ரிக்கார்டுகளும் நாளடைவில் வாங்கிச் சேர்க்க ஆரம்பித்தேன்.
சந்தானகிருஷ்ணன், ஓய்வு பெற்ற கலெக்டர் - பாடல் ரிக்கார்டுகள் சேகரிப்பாளர் நிழல் பேட்டியில்.
தொகுப்பு: கேடிஸ்ரீ |