கலி(ஃபோர்னியா) காலம் - பாகம் 11
முன் சுருக்கம்:

2000-க்கும், 2001-க்கும் இடையிலான ஒரு வருட காலத்தில் அமெரிக்கப் பொருளாதார நிலையின் பெரும் சீர்குலைவு எதனால் ஏற்பட்டிருக்கலாம் என்று கற்பனை உலகுக்குச் சென்று பார்த்தோம்.

நாரதர், கலிஃபோர்னியாவில் புரளும் செல்வம் லஷ்மி கடாட்சத்தாலேயே என்று கலக மூட்டி விடவே, வந்து பார்த்த விஷ்ணுவும் முதலில் லக்ஷ்மியின் அருள் பலத்தை ஒப்புக் கொண்டார். ஆனால் டாட்காம் கொப்பளம் உடைந்து, அதன் பின் 9/11 விளைவு, என்ரான், வொர்ல்ட்காம் ஊழல் எனத் துன்பங்கள் தொடர்ந்தன. அவற்றுக்குக் காரணம் மாயையால் விளைந்த மமதையும் பேராசையும் என்று விஷ்ணு விளக்கினார்.

அப்படிப்பட்ட விளைவுகளிலிருந்து எப்படி மக்கள் விடுபட்டு மீண்டும் சீர்நிலை பெறுவது என்று நாரதர் கேட்கவே, மஹாவிஷ்ணு தான் கண்ணனாக அவதரித்த போதே கீதையில் கர்ம யோகம் பற்றி உரைத்து விட்டதாகக் கூறினார். நாரதர் பலரும் கீதையை மறந்து விட்டதால் அதை மீண்டும் தற்கால ரீதியில் உணர்த்த வழி கேட்டார். லக்ஷ்மி தேவியும் விஷ்ணு மீண்டும் அதற்காக அவதரிக்க வேண்டுமோ என்று கேட்டாள். விஷ்ணு, அவசியமில்லை, புத்தர் போன்ற பலரும் அந்தக் கருத்துக்களை அவ்வப்போது உரைத்திருக்கிறார்கள், தற்போது கூட குடும்ப வாழ்வு வாழ்ந்து கொண்டே ஞானம் பெற்ற பலர் மற்றவர்களுக்கு வழி காட்டுகிறார்கள் என்று கூறி, அத்தகைய ஒருவரை பூலோகத்தில் காட்டினார்.

அவர் பெயர் அருண். அவர் பல வருட காலமாக பல உயர் தொழில் நுட்ப (hi-tech) நிறுவனங்களில் பணி புரிந்தவர். அவர் அடைந்திருந்த வெற்றிகளாலும் venture உலகில் அவருக்கிருந்த பலப் பலத் தொடர்புகளாலும் அவருடைய பெயர் பரவியிருந்தது. அப்படியிருந்தாலும் தலைக் கனமின்றி யார் என்ன கேட்டாலும் பொறுமையாக பதிலளிப்பார். அதே போல் யார் என்ன உதவி கேட்டாலும், தன்னாலான வரை தயங்காமல் செய்வார்.

அருணைப் பலர் கேட்கும் கேள்விகளுக்கு அவர் அளிக்கும் பதில்கள் மூலம் நாரதரின் கேள்விக்கு நாராயணன் உரைத்த பதிலின் விளக்கத்தைச் சிறிது சிறிதாக அறிந்து கொண்டிருக்கிறோம்.

சென்ற இதழில், சிவா என்ற இளைஞன் தன் நிறுவனம், தொழில் நுட்ப வேலைகளை இந்தியாவுக்கு அனுப்பிவிட்டதால், தான் வேலை இழந்து விட்டதாகவும், வேறு பல நிறுவனங்களிலும் அதே காரணத்தால் வேலை நீக்கங்கள்தான் உள்ளது, வேலை வாய்ப்பே இல்லை எனவும் கூறினான். இந்த நிலைக்கு அருண் என்ன தீர்வு கூற முடியும் என சிவா கேட்கவே, அருண் இந்த மாதிரி நிலை இப்போது தொழில் நுட்பத் துறையில் மிகவும் சகஜமாகிவிட்டது; எனவே சரித்திரத்தில் முன்பு மற்றத் துறைகளில் இதே மாதிரி நடந்த போது பாதிக்கப் பட்டவர்கள் செய்ததை அறிந்து கொண்டு அந்த மாதிரி செயல் பட வேண்டும் என்று கூறினார். தொழிற்சாலை உற்பத்தித் துறையில் வேலை வாய்ப்புக்கள் ஹாங்காங், சைனாவுக்குப் போன போது, பலர் வேறு தொழிற்சாலைகளுக்கும், சேவை, அலுவலகம் போன்ற வேறு துறைகளுக்கும் மாறியதை விளக்கின'ர். அந்த ஒரு முறை மட்டுமல்லாமல் அதற்கு முன்பும் பிறகும் அந்த மாதிரி நடந்ததைப் பற்றி சிவா விளக்கம் கேட்கவே, விவரிக்க ஆரம்பித்தார். அதைப் பற்றி இப்போது காண்போம்:

அருண் தொடர்ந்தார். "சிவா, வேறு பலமுறை வேலை இழப்பு அலைகளால் பெரும்பாலான மக்கள் பாதிக்கப்பட்டதைப் பற்றிக் கேட்டீங்க. இது பல நூற்றாண்டுகளாக நடந்து வரும் விஷயந்தான். முதல் முறை தொழில்புரட்சி எனப்படும் industrial revolution ஏற்பட்ட காலம்னு நான் நினைக்கிறேன். அது பதினேழாம், பதினெட்டாம் நூற்றாண்டுகளிலேயே நடை பெற்றது. அந்தக் காலத்தில் உலகத்தில் பெரும்பாலும் மக்கள் சிறுநில விவசாயத்திலும், சிறுதொழிற்சாலைகளில் கைத்தொழில் பொருள் உற்பத்தியும் செய்து வந்தனர். தொழில்புரட்சி பலவிதமான வேலைகளையும் இயந்திரத்தால் செய்யக் கூடிய ஆற்றலைக் கொண்டு வந்து விடவே, கைத்தொழில் செய்து வந்த பலர் வேலை இழந்தனர். இயந்திரங்களை வாங்கிப் பயன் படுத்த முடியாதத் தொழிற்சாலைகளும் அழிந்து போயின."

சிவா, "ஐயையோ! அப்புறம்? அவங்கெல்லாம் என்ன செஞ்சாங்க?" என்றான்.

அருண் சிரித்தார். "அந்த முறை, எனக்குத் தெரிந்த வரை ஒண்ணும் ஐயையோன்னும் படி நடக்கலை. தொழில் புரட்சி முதலில் கொஞ்சம் வேலை இழப்புக்குக் காரணமாயிருந்தாலும் அது ஒரு உன்னதமான பொருளாதார வளர்ச்சிக்கும் காரணமாயிற்று. இயந்திரங்களால் ஊக்குவிக்கப் பட்ட உற்பத்திப் பெருக்கால் பொருட்கள் விலை சரியவே, நிறைய மக்களால் வாங்க முடிஞ்சுது. அது புதுத் தொழிற்சாலை வேலைகளையும் வணிக சம்பந்தமான வேலைகளையும் உருவாக்கியது. அதனால் விரைவிலேயே மக்கள் வேறு திறன்களைக் கற்றுக் கொண்டு வேலை தேடிக் கொள்ள முடிந்தது."

சிவா நிம்மதிப் பெருமூச்சு விட்டான். "அப்பாடா! நீங்க விளக்கினது நல்லதாப் போச்சு. ரெண்டு முறையும் வளர்ச்சியினாலயோ, இல்லை வேறு தொழிலுக்கு மாறினதாலயோ வேலை தேடிக்க முடிஞ்சுது போலிருக்கு. அது எனக்கு நம்பிக்கை குடுக்குது. ரொம்ப நன்றி! ஆனா நீங்க முதல்ல சொன்னது நாப்பது வருஷத்துக்கு முன்னால நடந்தது. அடுத்தது இருநூறு, முன்னூறு வருஷமாச்சு. அது முன்னால நடந்த கதை. பிறகு, இன்னும் சமீபத்துல நடந்திருக்குன்னு சொன்னீங்களே, அதைப்பத்திக் கொஞ்சம் சொல்லுங்களேன்."

அருண் மகிழ்ச்சியுடன் தொடர்ந்தார். "நான் சொல்றது உங்களுக்கு நம்பிக்கை அளிக்கறதைப் பத்தி ரொம்ப சந்தோஷம். அந்த நாப்பது ஆண்டுகளை விட இன்னும் சமீபமா ஒரு முறையில்ல, ரெண்டு முறை பெரிய வேலை நீக்கம், தொழில் மாற்றம் ஆகியிருக்கு. அதுல முதல் முறை நம்ம உயர் தொழில் நுட்பத் (Hi-tech) துறையிலேயே ஆகியிருக்கு. 1980 வாக்குல DRAM எனப்படும் மெமரி சிப் உற்பத்தித் தொழிற்சாலைகளும் மற்ற பலப்பல குறைந்த விலை மற்றும் ASIC சிப் உற்பத்தித் தொழிற்சாலைகளும் தாய்வானுக்கும் மற்ற ஆசிய நாடுகளுக்கும் வெளியேற்றப் பட்டு அமெரிக்க மண்ணை விட்டே பெரும்பாலும் மறைஞ்சே போச்சு! அதே மாதிரி, personal computer (PC) ரொம்பப் பிரமாதமா வளர ஆரம்பிச்சதும் அதையெல்லாம் உற்பத்திப் செய்யற தொழிற்சாலைகளும் அந்த இடங்களுக்கே போயிடுச்சு."

சிவாவுக்கு ஆவல் அதிகரித்தது. "ஹும்... நம்ம தொழிலில நடந்ததுன்னா, எனக்கு நல்ல பாடமாவே இருக்கும். அந்தத் தொழிற் சாலைகளில வேலை செஞ்சவங்களுக்கெல்லாம் என்ன ஆச்சு?"

அருண் தொடர்ந்தார். "கொஞ்ச நாள் கஷ்டமாத்தான் இருந்துச்சு. நானும் அதுல மாட்டிக் கிட்டவன் தான்! Harvard Business Review இதழில கூட Computerless Computer Company அப்படின்னு, தொழிற்சாலை இல்லாம, டிசைன் மட்டும் அமெரிக்காவில செய்யற நிறுவனங்க தான் ஜெயித்து வளர முடியும்னு எழுதினாங்க. அப்படின்னா இங்க Hi-tech தொழிற்சாலைகள் இருக்கவே வாய்ப் பில்லைன்னு பல பேர் முடிவு செஞ்சிட்டாங்க."

படபடவெனப் பேசிக் கொண்டே போன அருண் ஒரு நிமிடம் மூச்சு வாங்கிக் கொண்டு ஏதோ நினைவில் மூழ்கி மெளனமானார்.

சிவா மேலும் ஊக்குவித்தான். "ஹும்...ஹும்... மேல சொல்லுங்க. இது ரொம்ப முக்கியமான விஷயமா இருக்கும் போலிருக்கே!"

அருண் தலையை உலுக்கிக் கொண்டு "ஓ, ஸாரி, எதோ பழைய நினைவுக்குப் போயிட்டேன். அந்த வேலை நீக்க அலையால எனக்கும் என் நெருங்கிய நண்பர்களுக்கும் கூட ரொம்ப பாதிப்பாயிடுச்சு, அதான் அதைப் பத்தின யோசனையிலயே ஒரு நிமிஷம் முழுகிட்டேன். ஆனா Intel, IBM Microelectronics போன்ற நிறுவனங்கள், கோடிக் கணக்கில் microprocessor உற்பத்தி செய்ய வேண்டி அமெரிக்காவிலேயே தொழிற்சாலைகளை ஆரம்பித்தனர். மேலும், PC உற்பத்தி வெளிநாடுகளுக்கு அனுப்பப் பட்டாலும், பெரிய கம்ப்யூட்டர் மற்றும் மின்வலைக்கான Router போன்ற சாதனங்களும் அந்தக் காலத்தில் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப் பட்டதால், பெரும்பாலானோர் வேலை தேடிக் கொள்ள முடிந்தது. நிறுவன இயக்க Software (ERP) போன்ற பெரிய மின்பொருள் நிறுவனங்களிலும் வேலை வளர்ச்சி இருந்தது."

சிவா "அதுக்கப்புறமும் இன்னொரு தடவை நடந்ததா என்ன? அது ரொம்ப சமீபமாவே இருக்கே" என்றான்.

அருண் ஆமோதித்தார். "சமீபந்தான். ஆனா அதுக்கப்புறமும் அந்த அளவுக்கு ஆகலைன்னாலும், சோவியத் யூனியன் சிதறி, பனிப் போரில் (cold war) அமெரிக்க அமோக வெற்றி பெற்றதும், நாட்டுப் பாதுகாப்புச் செலவை அமெரிக்கா மிகவும் குறைத்ததால் தேசியப் பாதுகாப்புத் துறை நிறுவனங்களில் இருந்த பலர் வேலையிழந்தனர். அது 1990க்குப் பிறகு நடந்ததுதான்."

சிவா "ஆமாம், அது எனக்கே நினைவிருக்கு. நான் அப்போதான் மேல் பட்டப் படிப்பை முடிச்சுட்டு வேலை தேட ஆரம்பிச்சிருந்தேன். அப்போ பொதுவான பொருளாதார சூழ்நிலையும் மந்தமா இருந்துச்சு, எனக்கு வேலை கிடைக்கறதே பெரும் பாடாப் போச்சு!"

அருண் "ஆனா எப்படியோ கிடைச்சுது இல்லையா? அதுக்கப்புறம் பொருளாதார வளர்ச்சியாலும், மின்வலையின் வெடிப்பாலும், Y2K-வுக்குத் தயாரிக்க வேண்டிய முயற்சிகளாலும் வெவ்வேறு விதமான வேலைகள் வந்து விடவே வேலை இல்லை என்பது போய், வேலைக்கு ஆள் இல்லை என்று ஆகி விட்டது. இந்தியா போன்ற நாடுகளிலிருந்து H-1 விசாவில் ஒரு படையையே வரவழைக்க வேண்டியதாகி விட்டது!"

சிவாவின் முகம் மலர்ந்து விட்டது. "அப்படின்னா இதெல்லாம் ஒரு சுழற்சி (cycle)தான், திரும்ப ஒரு பொருளாதார வளர்ச்சி வந்து எல்லாம் மீண்டும் ஆனந்த மயமாயிடும் அப்படீங்கறீங்க, அப்படித்தானே?" என்றான், வாயெல்லாம் பல்லாக. ஆனால் அருணின் முக பாவத்தில் அந்த ஆனந்தத்தின் எதிரொலி காணப்படாததால் படக்கென்று வாயை மூடிக் கொண்டான்.

அருண் மெல்லத் தலையசைத்தார். "இல்லை சிவா, இந்த முறை அவ்வளவு சுலபமா சொல்லித் தூக்கிப் போட்டுட முடியாது..." என்று இழுத்தார்.

சிவா "ஐயையோ! ஏன் அப்படி சொல்றீங்க, இன்னும் கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க" என்று கெஞ்சினான்.

அருண் தன் கவலையை விளக்க ஆரம்பித்தார்.

(தொடரும்)

கதிரவன் எழில்மன்னன்

© TamilOnline.com