இறந்தே பிறந்த கேள்விகள்
காதலின் கணநேர சுகத்தில்
உருவான கரு நான்
விடியாத இரவில் விதைக்கப்பட்ட
சிசுவிதை நான் உன்னுள்
முளைத்தபோது
ஏக்கக் கனவுடன் நீயிருக்க
உனைப் பார்க்கும் நாளுக்காக
வளர்த்து வந்தேன்
மேடிட்ட வயிற்றை மென்மையாய்
தடவும்போது, உன் தாயன்பில்
சிலிர்த்துப் புரண்டேன்.

சூல் முதிர்ந்து புவிபார்க்கும்
நாள் எனக்கு கிடைத்தது
வேதனைக் குரல்கேட்டு வேகமாய்
வெளிவரத் துடித்தேன்
உதிரம் குழைத்துப் பிறந்த என்னை
துடைத்து எடுத்து வந்தபோது
சிலர் துயருற்றது ஏன் ?
பெண்ணாக நான் பிறந்ததாலா?

முகம் பார்த்துன் மடிசுகம் காணுமுன்
நெல்மணி கொடுத்து மூச்சடைக்க
துடிக்க வைத்து, இடுகாட்டில்
தூங்க வைத்தாயே, ஈரமில்லா
ஈன நெஞ்சா எனை ஈன்றவளுக்கு?

கள்ளிப்பாலைத் தாய்ப்பாலென ஊட்டி
கருகவைத்தாயே கண் திறக்குமுன்னே
கருணையிலா கல்மனதா? கசியாதா
பாசச் சுரப்பிகள் உன்னிடத்தில்?

பெண்ணின் வயிற்றில் பிறந்து
பெண்ணையே துணையாக வரித்த
உன் கணவனுக்குப் பொறுக்காததேன்
பெண்ணாய் நான் பிறந்தது?

லதா கிரிதர்
ஓவியம்: சந்த்ரு

© TamilOnline.com