தீபாவளி என்றால் பொதுவாக குழந்தைகளுக்கு கொண்டாட்டம்தான். ஆனால் எனக்கு சின்னவயதில் 'ஐயோ தீபாவளி வருகிறதே' என்று மனசுக்குள் ஒரே திக்திக் என்று இருக்கும்.
அதற்கு முதல் காரணம் என் தாத்தா. அவர் தீவிர காந்தியவாதி. புத்தாடைகள், பட்டாசுகள், இனிப்புகள் போன்ற ஆடம்பரங்களை விரும்பவில்லை. அதனால், தினம் விடியற்காலை 5 மணிக்கு முன்பே எழுந்து ஜபம் செய்யும் அவர், தீபாவளி அன்று மட்டும் 7 மணி வரை படுக்கையைவிட்டு அசைய மாட்டார். ராமபக்தரான அவர், "ராமர் என்ன தீபாவளியா கொண்டாடினார். எனக்கு மட்டும் என்ன?'' என்று விதண்டாவாதம் வேறு செய்வார். ''தீபாவளி - துணிக்கடைக்காரர்கள் சதி'' என்பது அவர் கருத்து.
அடுத்து என் அப்பா. பிச்சைக்காரர்களுக்கு 10 பைசா போடுவதாக இருந்தால்கூட பட்ஜெட் கணக்கைப் பார்த்துவிட்டு, பின் அன்றைய தேதியுடன் 'பிச்சை 10 பைசா' என்று செலவுக் கணக்கு எழுதியபின்தான் தட்டில் காசு போடுவார். தீபாவளி மாதம் அதிகப்படியாகத் தேவைப்படும் எண்ணெய், சர்க்கரை போன்றவற்றை எதிர்பார்த்துத் திட்டமிட்டிருப்பார். ஆனால் துணி வாங்கக் கடைக்குப் போனதும் நாங்கள் ''இதைவிட அது நன்றாய் இருக்கிறது'' என்று விலை அதிகமான துணிகளை எடுக்க, 'பாவம் குழந்தைகள்' என்று மறுப்பு சொல்லாமல் வாங்கிவிடுவார். அடுத்த சில மாதங்கள் இழுபறியை சமாளிக்க வேண்டி இருப்பதால் ''தீபாவளி - தலையில துண்டுக்கு வழி'' என்று அப்பாவும் அவர் பட்ஜெட் புத்தகமும் சொல்லாமல் சொல்லும்.
என் அம்மா கதை வேறுவிதம். பெண்கள், குழந்தைகள் உடைகளைத் தைப்பதில் வல்லவரான அவருக்கு தீபாவளி சமயத்தில் மூச்சுவிடக்கூட நேரம் இருக்காது. நவராத்திரியில் ஆரம்பித்தே வாடிக்கையாளர்களிடம் ''சீக்கிரம் துணியைத் தாங்க. கடைசி நிமிஷத்தில் தராதீங்க'' என்று கீறல் விழுந்த ரெக்கார்டாய் திரும்பத் திரும்பச் சொன்னாலும், இதோ அதோ என்று இழுத்தடிப்பார்கள். தீபாவளி நாள் நெருங்கும் பொழுது ஒவ்வொன்றாய்த் துணிகளை ''ப்ளீஸ் மாமி, இதை மட்டும் தைச்சுக்குடுங்க மாமி. உங்களைத்தான் நம்பி இருக்கோம்'' என்று கெஞ்சி - கொஞ்சி வேண்டுகோளுடன் கொண்டு வந்து கொடுப்பார்கள். அந்த ரவிக்ககைள், பாவாடைகள், சுரிதார்களைத் தைத்து முடித்து, வீட்டிற்கு பட்சணம் செய்து எழுந்திருப்பதற்குள் ஜுரமே வந்துவிடும். ''தீபாவளி - உடம்பெல்லாம் வலி'' என்பது அம்மாவின் அனுபவம்.
என் அண்ணனின் கதையைக் கேட்டால் அம்மாவின் ஜுரம் அல்பவிஷயம் என்று நினைக்கத் தோன்றும். அவனுக்கு பத்து வயது இருக்கும் பொழுது பிசுபிசுத்து போன பல வெடிகளை சேகரித்து, காதிகத்தை நீக்கி மருந்தை எடுத்து பெரிய அணுகுண்டு தானாகவே தயாரித்தான். வெடி மருந்து கையுடன் தீக்குச்சியை கிழிக்க...மீதியை ஊகிக்க நீங்கள் ஷெர்லாக் ஹோம்ஸாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. காயம் ஆற கிட்டத்தட்ட 3 தீபாவளி ஆனது. ''தீபாவளி - வேண்டாமடா எனக்கு வெடி'' என்று ஆர்வம் இழந்துவிட்டான்.
பணக்கஷ்டம், உடல்நோய் என்று பல கஷ்டங்களுக்கு நடுவில் நாட்டில் எல்லோரும் சந்தோஷமாய் தீபாவளி கொண்டாடுவது ஏன் என்று பலமுறை நான் யோசித்ததுண்டு. பிரச்சனைகள் பல இருப்பதினால் தான் பண்டிகைகள் சிறப்பு நாட்களாகின்றன என்பதை நான் உணரப் பல வருடங்கள் ஆயின. 'தீமைகள் அழியும். நல்லவை வெல்லும்' என்னும் நம்பிக்கையை வலியுறுத்தும் பண்டிகை தீபாவளி. வாழ்க்கையில் வரும் முட்டுக்கட்டைகளை நாம் சமாளிக்க இந்த நம்பிக்கை அல்லவா நமக்கு ஊன்றுகோல்!
தீபாவளியின்பொழுது பல வாணங்களையும், வெடிகளையும் கொளுத்துகிறோம். ஏகப்பட்ட பணம் கொடுத்து வாங்கிய புஸ்வானம் சில நிமிடங்கள் நெருப்புப் பூமழை பொழிகிறது. பின்னர் கருகிய காகிதம் ஆகிறது. ''காயமே இது பொய்யடா, வெறும் காற்றடித்த பையடா'' என்ற வாழ்வின் அநித்தியத்தை எடுத்துக்காட்ட இதைவிடச் சிறந்த உதாரணத்தை நான் பார்த்ததில்லை.
நான் தினமும் குளிக்கும் அதே குளியலறையில், அதே குழாய்த் தண்ணீரை ஊற்றித்தான் தீபாவளி அன்றும் குளிக்கிறோம். ஆனால் ''தண்ணி வரலையா? லாரியிலிருந்து வாங்கினயா?'' என்று வழக்கமான பல்லவியைப் பாடாமல், வற்றாத ஜீவநதியான புண்ணிய கங்கையை நம் வீட்டிற்கு வந்ததாய் நினைத்து ''கங்கா ஸ்நானம் ஆச்சா?'' என்று அல்லவோ கேட்கிறோம்! உண்மையாகவே கங்கையில் முங்கிக் குளிக்காவிட்டாலும், வருடத்திற்கு ஒரு நாளைக்காவது கற்பனையில் கங்கையில் தலை நனைவது ஒரு ஆனந்தம் தானே.
அந்தக் காலத்தில் பெண்கள் வெள்ளிக்கிழமையும் ஆண்கள் சனிக்கிமையும் வாரம் தவறாமல் எண்ணெய் தேய்த்துக் குளிப்பார்கள். உச்சந்தலையில் நல்லெண்ணையை அழுந்தத் தேய்த்து குளிப்பார்கள். அப்படித் தேய்ப்பதால் உடல்சூடு தணியும்; ஜீரணம் சம்பந்தப்பட்ட நோய்களும், நரம்பு சம்பந்தப்பட்ட நோய்களும் வருவது குறையும் என்று பெரியவர்கள் சொல்வார்கள். என்ன என்று கேட்கக்கூட நேரம் இல்லாமல் எல்லாரும் அவசரமாய் ஓடிக்கொண்டிருக்கும் இந்த நாளில், எண்ணெய் தேய்ப்பதற்கு அவகாசம் ஏது? தீபாவளி அன்றாவது எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால், உடல் குளிர்ச்சியடைந்து, அதனால் சோர்வு நீங்குவதைச் சுகமாக அனுபவிக்கலாம்.
தமிழ்நாட்டில் மட்டுமின்றி பாரதம் முழுதிலும் கொண்டாடுப்படும் தேசியப் பண்டிகை இதுதான். நம்மில் பலர் இந்தியாவை விட்டு வெகுதூரத்தில் இருக்கிறோம். ''அலுவலகத்தில் தீபாவளி அன்று விடுமுறை இல்லை'', ''பட்டாசு இல்லாத தீபாவளி தேவையா?'' என்று பல சின்னக் காரணங்களினால் தீபாவளியை மறந்துவிடுகிறோம். ஒரு வளர்ந்த மரத்தின் இலைகள் காலத்திற்கு ஏற்ப நிறம் மாறியும், உதிர்ந்தும், துளிர்த்தும் இருக்கும். கிளைகள் காற்று வீசும் திசையில் ஆடும். மரமே சூரியஒளி வரும் பக்கமாய்ச் சாயும், ஆனால் அதன் வேர்கள் உறுதியாய இருக்கும். அதுபோல நம்மைத் தாங்கி நிற்பவை நம் கலாசார வேர்களான தீபாவளி போன்ற பண்டிகைகள்தாம். அதனால் ஏண்டா வருது தீபாவளி என்றோ, வந்தா வருது தீபாவளி என்றோ இல்லாமல் 'ஹையா, ஜாலி தீபாவளி' என்று குழந்தைகளின் உற்சாகத்துடன் இந்த வருடம் கொண்டாடலாமே!
மீராசிவகுமார் |