மஹாத்மா மஹாத்மா தான்
அக்டோபர் 2ம் தேதி காந்தியடிகளின் பிறந்த நாள். தவறாமல் எல்லோரும் உதட்டால் அஞ்சலி செலுத்தி மறந்து விடுகிறார்கள். அவரை மிகவும் திட்டுகிறவர்களையும் நாம் பார்க்கிறோம். ஆனாலும் அவரை மஹாத்மா, அண்ணல், மகான் என்றெல்லாம் அழைத்தார்கள் என்றால் காரணமில்லாமல் இல்லை. கீழ்க்கண்ட சம்பவத்தைப் பாருங்கள்.

ஆண்டு 1904. இடம் லண்டன். அங்கே இருந்த இந்தியா ஹவுஸில் பல இந்திய மாணவர்களில் 'இன்பத் தமிழ் வளர்க்கக் குருகுலமும் வகுத்தோன்' என்று புரட்சிக்கவி பாரதிதாசனால் போற்றப்பட்ட வ.வே.சு. ஐயரும், டாக்டர் டி.எஸ்.எஸ் ராஜன், தீரர் வினாயக சாவர்க்கர் ஆகியோரும் இருந்தனர். தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா போகும் வழியில் லண்டனுக்குச் சென்றிருந்தார் காந்தி. அவரால் மிகவும் கவரப்பட்ட வ.வே.சு. ஐயர் அவரை நவராத்திரி விழாவுக்குத் தலைமை தாங்க அழைக்க விரும்பினார். ஐயரும் சாவர்க்கரும் சென்று காந்தியை அழைத்தனர். அந்த ஆண்டு அக்டோபர் 24, ஞாயிறன்று விஜயதசமி வந்தது.

"கொண்டாட்டம் எதற்காக?" என்றார் காந்தி.

ஐயர் சொன்னார்: "இங்கிலாந்தில் எழுநூறு இந்திய மாணவர்கள் இருக்கிறார்கள். பெரும்பாலோர் பணக்காரப்பிள்ளைகள். அவர்களுக்குத் தங்கள் தாய்நாட்டைப் பற்றிய சிந்தனையே கிடையாது. வெள்ளையரைப் போல வாழ்வதே சொர்க்கம் என்ற மூடநம்பிக்கை உள்ளவர்கள். தசராப் பண்டிகை என்பது ஒரு சாக்குப் போக்கு. தகுந்த சாக்குப் போக்கு. எல்லோரையும் ஒரு பொதுப் பண்டிகை சமயத்தில் ஒன்று கூட்டி, அவர்கள் இந்திய நாட்டின் பிரஜைகள் என்ற நினைவை உண்டாக்குவதே கொண்டாட்டத்தின் நோக்கம்" என்றார் ஐயர்.

"யோசனை நல்லது; ஆனால் யாரும் ஒன்று கூடி ஒரு ஹோட்டலில் பணம் கொடுத்து ஆங்கில முறையில் உண்டு, பேசிக் கலைவதில் எனக்கு விருப்பமில்லை" என்று காந்தி சொன்னார்: "நாம் இந்தியர், இது இந்தியப்பண்டிகை என்பதற்கு அடையாளமாக இந்திய உணவு, புலால் இன்றி ஏற்பாடு செய்தால்" தாம் வருவதாக ஒப்புக் கொண்டார். "இது மிகவும் கடினமான நிபந்தனை. இருந்தபோதிலும் தகுந்த ஏற்பாடு செய்துவிடுகிறோம்" என்று ஐயர் விடை பெற்றார்.

சுமார் எழுநூறு பேருக்கு விருந்து. சிரமமான காரியம்; பாத்திரம் பண்டமெல்லாம் வேண்டுமே; இருப்பினும் ஒப்புக்கொண்டுவிட்டார்கள்.

ஒரு பெரிய ஹால் வாடகைக்கு எடுத்தார்கள். பாத்திரங்கள் சேர்த்தார்கள். டாக்டர் டி.எஸ்.எஸ். ராஜன் தலைமையில் ஆறு பேர் சமையல் பொறுப்பை ஏற்றார்கள். மிகவும் கஷ்டப்பட்டுக் கடை கடையாய் அலைந்து, சமையலுக்கான பண்டங்களைச் சேகரித்தார்கள். விழாவுக்கு முந்தின தினம் ஐயர், காந்தியிடம் மறுநாள் நிகழ்ச்சியை நினைவூட்டப் போனார். இடம், நேரம், நிகழ்ச்சி நிரல் எல்லாம் உன்னிப்புடன் கேட்டுத் தெரிந்துகொண்டார் காந்தி.

விருந்து நடக்க இருந்த தினம் பிற்பகல் ஒரு மணிக்கே சமையல் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். இதை டாக்டர் ராஜன் மேலும் விவரிக்கட்டும்:

"வேலை தெரிந்தவர்களும், தெரியாவிட்டாலும் ஊக்கம் உடையவர்களுமான ஆறு பேர் அடங்கிய ஒரு கோஷ்டி சமையல் வேலையைத் தொடங்கியது. நானும், என் நண்பர் ஒருவரும் சமையலைச் செய்ய மற்றவர்கள் உதவி செய்தார்கள். பழக்கம் இல்லாததனால் வேலை சற்றுத் தாமதமாகவே நடந்தது. அன்று வரையில் ஐயரிடமிருந்து கேட்டதைத் தவிர நான் நேரில் காந்தியைப் பார்த்ததில்லை. நாங்கள் வேலை செய்யத் தொடங்கி அரைமணி நேரத்துக்கெல்லாம், நடு வயசுள்ளவரும், பலம் அற்றவர் போலத் தோன்றியவருமான ஒருவர் எங்களுடன் வந்து கலந்துகொண்டார். வேலையில் அவர் காட்டிய ஊக்கமும், ஆர்வமும் மற்றவர்களில் ஒருவருக்குக் கூட இல்லை. அவரைப் பலவித முரட்டு வேலைகளில் விட்டோம். தட்டு, தொட்டி, பாத்திரம் இவைகளைக் கழுவுவது, கறிகாய் நறுக்குவது, தண்ணீர் கொண்டுவந்து கொடுப்பது முதலிய எல்லா வேலைகளையும் சொல்லுவதற்கு முன்பாகவே அறிந்துகொண்டு அவர் செய்தார். இந்தியாவிலிருந்து வந்திருக்கும் புதிய ஆசாமி என்று அவரை நாங்கள் நினைத்து நல்ல வேர்க்க வேர்க்க வேலை வாங்கினோம்."

மாலை 7.30 மணிக்கு விருந்து. சுமார் 6 மணிக்கு, வெளியே போயிருந்த ஐயர் வந்தார். டாக்டர் ராஜன் விவரிப்பதைக் கவனிப்போம்.

"ஐயர் சமையல் அறைக்கு வந்தார். 'எல்லாம் முடிந்துவிட்டதா?' என்று கேட்டுக்கொண்டே என்னைப் பார்த்துக் கவலையுடன், 'இங்கு வந்திருக்கும் இவரை யார் வேலை செய்யச் சொன்னது? இவர்தாம் இன்றைக் கூட்டத் தலைவரான ஸ்ரீமான் காந்தி. இவரை நீங்கள் நடத்தும் முறை மிக அழகாக இருக்கிறது' என்று சற்று துக்கத்துடன் சொன்னார்.

"உடனே நாங்களும் ஐயருடன் சேர்ந்து மன்னிப்புக் கேட்டோம். காந்தி குலுங்க நகைத்து, 'நான் யாரை எதற்காக மன்னிப்பது என்று தெரியவில்லை. இந்த வேலையில் முதல் குற்றவாளி நான். இந்த ஊரில் இந்த மாதிரி விருந்து நடத்துவது எவ்வளவு கடினம் என்று எனக்குத் தெரியும். எனினும் உங்களைப் போன்ற இளைஞர்கள் இந்த வேலைசெய்ய முன்வந்தது எனக்கு எவ்வளவு ஆனந்தத்தைக் கொடுக்கிறது; அதற்காக நான் அல்லவோ உங்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்ள வேண்டும்? என்றார்."

எவ்வளவு தடுத்தும் தாம் செய்துகொண்டிருந்த வேலையை காந்தி நிறுத்தவில்லை. எல்லாருக்கும் மேஜைகளில் தட்டுகளில் உணவு பரிமாறிய பின்பே கடைசியாகத் தமது இடத்தில் அமர்ந்தார்.

மேற்கண்ட சம்பவம் திரு ரா.அ. பத்மநாபன் எழுதிய வ.வே.ஸ¤. ஐயர் (நேஷனல் புக் டிரஸ்ட்) என்ற நூலில் காணப்படுகிறது.

இன்றைய தலைவர்களின் நடத்தையோடு ஒப்பிட்டுப் பார்ப்பதை நம்மால் தவிர்க்க முடிவதில்லை. அண்மையில் மேற்கு வங்க மாநில முதலமைச்சரின் மகள் காரில் செல்லும்போது அங்கே காவலில் இருந்த போலிஸ்காரர் சல்யூட் அடிக்கவில்லை என்பதற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. அப்படித் தண்டிப்பது சரிதான் என்று முதல்வரும் பேசியதுதான் அதில் வேதனை.

மஹாத்மா மஹாத்மாதான்.

மதுரபாரதி

© TamilOnline.com