தமிழ்நாட்டில் எல்லா நாட்டு மருந்து வகைகளும் எளிதாகக் கடைகளில் கிடைக்கும். ஆனால் இங்கு கிடைக்கும் பொருட்களை வைத்துக்கொண்டு எப்படி தீபாவளி மருந்து செய்வது என்று இப்போது பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
மிளகு - 1/16 கிண்ணம் சீரகம் - 1/4 கிண்ணம் ஓமம் - 1/2 கிண்ணம் ஜாதிக்காய் (nutmeg) - 1 சுக்கு - ஒரு துண்டு ஏலக்காய் - 7
மேற்கூறிய பொருட்களை லேசாகத் தனித்தனியாக சூடுபடுத்திக்கொண்டு மிக்ஸியில் போட்டு நன்றாகப் பொடி செய்து சலித்துக் கொள்ளவும். சலித்து வந்த மருந்துப் பொடியை அளந்து கொள்ளவும். அதற்குச் சம அளவு நல்ல வெல்லம் எடுத்துப் பொடி செய்து கொள்ளவும்.
தேன் - 3 தேக்கரண்டி நெய் - 5 தேக்கரண்டி
செய்முறை
மருந்துப் பொடியை ஒரு பாத்திரத்தில் போட்டு பொடி மூழ்கும் வரை தண்ணீர் விட்டு அரை மணி நேரம் ஊறவிடவும். பின்னர் மிக்ஸியில் போட்டு முடிந்த வரை அதிகம் தண்ணீர் விடாமல் நன்றாக அரைக்கவும். அடி கனமான வாணலியில் இந்த விழுதைப் போட்டு நன்றாகச் சிறிது நேரம் கிளறவும். இது தளதள என்று கொதிக்கும் போது வெல்லத்தையும் சேர்த்து நன்றாகக் கிளறவும்.
அவ்வப்போது நெய் சேர்த்துக்கொள்ளவும். கெட்டியான பதம் வந்த பின்பு அடுப்பிலிருந்து இறக்கித் தேன் சேர்த்து நன்றாகக் கலந்து ஆறிய பின்பு ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.
சரஸ்வதி தியாகராஜன் |