பாதாம் அல்வா
தேவையான பொருட்கள்

பாதாம் பருப்பு - 1 கிண்ணம்
சர்க்கரை - 2 கிண்ணம்
மஞ்சள் நிற உணவு தூள் (yellow food color) - 1 சிட்டிகை (தேவையானால்)
பால் - 1/2 கிண்ணம்
நெய் - 1/4 கிண்ணம்
பாதாம் எஸன்ஸ் - 1/2 தேக்கரண்டி

செய்முறை

ஒரு பாத்திரத்தில் 2 கிண்ணம் தண்ணீரை விட்டு நன்றாகக் கொதிக்கவிடவும். பாதாம் பருப்பை இதில் போட்டு பாத்திரத்தை மூடி அடுப்பை அணைக்கவும். 15 நிமிடங்கள் கழித்து பாதாம் பருப்பை கட்டைவிரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் நடுவில் வைத்து அழுத்தின'ல் அதன் தோல் நீங்கி விடும். இவ்வாறு தோல் நீக்கிய பாதாம் பருப்புகளை பாலுடன் சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைக்கவும்.

சர்க்கரையை தண்ணீருடன் சேர்த்து ஒரு அடி கனமான வாயகன்ற பாத்திரத்தில் போட்டு, மஞ்சள் நிற உணவுத் தூளையும் சேர்த்து, கம்பிப் பதம் வரும்வரை கொதிக்கவிடவும். பின்னர் அரைத்த பாதாம் விழுதை இதில் போட்டு கிளறிக்கொண்டு இருக்கவும். அவ்வப்போது நெய் விட்டுக் கிளறவும்.

நன்றாகக் கரண்டியில் எடுத்து விடும் பதம் வந்ததும் அடுப்பை அணைத்து, சற்று ஆறிய பின்பு பாதாம் எஸன்ஸ் சேர்த்து நன்றாகக் கலக்கவும். நன்றாக ஆறிய பின்பு பாத்திரத்தில் போட்டு மூடி வைக்கவும்.

ரொம்ப கெட்டியாக இருந்தால் சிறிது பால் விட்டு மறுபடி அடுப்பில் சிறிது நேரம் வைத்துக் கிளறினால் நெகிழ்ந்துவிடும். கவலைப்பட வேண்டாம். இனிப்பு அதிகம் வேண்டுமானால் சர்க்கரை அளவை கூட்டிக் கொள்ளலாம்.

குறிப்பு: தோல் நீக்கிய பாதாம் பருப்புடன் கொஞ்சம் முந்திரிப் பருப்பையும் பாலுடன் சேர்த்து அரைத்துச் செய்தால் சுவை கூடும். அரைத்த பாதாம் பருப்பை சர்க்கரைப் பாகில் போட்டு கிளறும்போது மில்க்மெய்ட் (condensed milk) 1/2 கிண்ணம் சேர்த்து செய்தால் இன்னும் சுவை கூடும். சர்க்கரை சேர்த்த மில்க் மெய்ட் ஆனால் போடும் சர்க்கரை அளவை சற்று குறைத்துக் கொள்ளலாம்.

சரஸ்வதி தியாகராஜன்

© TamilOnline.com