சதுரங்கம் எங்களுக்கு ஒரு குடும்ப விளையாட்டாக இருந்தது. என் தாத்தா தங்கசாமி ஆரான் பாளையங்கோட்டை ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் முதல்வராக இருந்தவர். அவர் பாளையங்கோட்டை செண்டினரி ஹாலில் நடக்கின்ற சதுரங்க விளையாட்டுக்களில் ஆங்கிலேய வக்கீல்கள், கலெக்டர்கள் மற்றும் பாதிரியார்களுடன் கலந்து விளையாடுவது வழக்கம். அவர் மிகவும் நல்ல செஸ் ஆட்டக்காரரக இருந்தார் என்று என் பெற்றோர்கள் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். அவர் மூலம் செஸ் ஆர்வம் எங்கள் குடும்பத்தில் பரவியது. என் பெற்றோர்கள், இராஜா ரான் மற்றும் தாயார் புஷ்பம் ரான் ஆகியோரும் நன்றாகச் செஸ் விளையாடுவார்கள்.
இளமைக்காலம்
1935ம் ஆண்டு (டிசம்பர் 30) நான் பர்மாவில் டவுன்கோ என்ற இடத்தில் பிறந்தேன். இரண்டாவது உலக யுத்தத்தின் பொழுது 1941 எங்கள் குடும்பம் இந்தியாவிற்குத் திரும்பி வந்தது. அப்போது எனக்கு சுமார் 6 வயது. செஸ் விளையாடும் ஆர்வம் என் பெற்றோர்கள் விளையாடுவதைப் பார்த்து ஏற்பட்டது. இந்தக் காயை இப்படி நகர்த்து.. அந்தக் காயை அப்படி நகர்த்து என்று யாரும் சொல்லித் தரவில்லை. அனுபவத்தில்தான் கற்றுக் கொண்டேன்.
செஸ் ஒரு விளையாட்டு என்ற முறையில் தான் கற்றுக் கொண்டேன். அதையே வாழ்க்கை என்று நினைத்து வளரவில்லை. ஆனால் செஸ் என் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள மிகவும் உதவியாக இருந்திருக்கிறது. நான் கல்லூரிப் படிப்பை முடித்து விட்டு வேலை தேடிக் கொண்டிருந்தேன். 1959 ஆண்டு தில்லியில் நடந்த 'தேசிய செஸ் சேம்பியன்ஷிப்' என் வாழ்க்கையை மாற்றி அமைத்தது என்று சொல்லலாம். நாங்கள் 60-70 பேர் போட்டியிட்டோம். மூன்று பேர் ஒரே அளவு புள்ளிகளைப் பெற்றிருந்தோம். என்னுடைய ஆட்டத்தை முடித்துவிட்டு நான் கரோல்பாகில் சாப்பிடப் போய்விட்டேன். முடிவு என்ன ஆயிற்று என்று எனக்குத் தெரியாது. நான் மீண்டும் வந்த பொழுது வழியில் பார்த்த ஒருவர் வாழ்த்துக் கூறினார். அப்போதுதான் எனக்கு தேசிய விருதை நான் வென்றிருக்கிறேன் என்று தெரியும். ஒரே புள்ளிகள் பெற்ற மற்ற இருவரில் ஒருவர் தோற்றார், இன்னொருவர் விலகிக் கொண்டார். நான் வெற்றி பெற்றேன். அந்த வெற்றியால் அகில இந்திய செஸ் கிளப்பின் தலைவராக இருந்த கோபாலகிருஷ்ண ரெட்டி அவர்களின் அறிமுகம் ஏற்பட்டது. அவர் என்னைப் பற்றி விசாரித்தார். அப்பொழுது வேலை தேடிக் கொண்டிருக்கிற விபரத்தைச் சொன்னேன். அவர் சிபாரிசு செய்து, இந்தியன் வங்கியில் ராஜா சர் முத்தையா செட்டியாரைப் போய் பார்க்கச் சொன்னார். அவர் மூலம் இந்தியன் வங்கியில் ஆரம்ப நிலை அதிகாரி வேலை கிடைத்தது. 1960 முதல் 1995 வரையில் 35 வருடம் அந்த வங்கியில் வேலை பார்த்தேன்.
எனக்கு இந்தியன் வங்கியில் செஸ் வெற்றிகளுக்காக வேலை கிடைத்தது என்பது ஒரு பெரிய சாதனை என்றே கூறலாம். அந்தக் காலத்தில் விளையாட்டு வீரர்களுக்கென்று தனி இடங்கள் ஒதுக்கப்படவில்லை. தனிப்பட்ட முறையில் எனது மேலிட அதிகாரிகள் செஸ் விளையாட விடுப்புகள் கொடுத்தாலும் கூட, உடன் இருக்கும் அதிகாரிகள் வேலை முடியவில்லை என்று விடுவிக்க மாட்டார்கள். எனவே நான் மிகவும் சிறந்த ஆட்டக்காரனாக இருந்த காலத்தில் அதிகம் சாதனைகள் புரிய இடம் கிடைக்கவில்லை. கடைசி 20 ஆண்டுகள் எனக்கு அதிக சலுகைகள் கிடைத்தது. ஆனால் அந்தச் சமயத்தில் எனது தனிப்பட்ட ஆட்டத்தைப்பற்றிச் சிந்திப்பதை விட்டு நான் செஸ் சங்கத்தில் பணியாற்றுவதில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டேன்.
உலகச் சாம்பியனைத் தோற்கடித்தேன்
எனது சாதனைகள் என்று சிலவற்றைக் கூறலாம். 1961ம் ஆண்டு நான் இந்தியாவின் முதல் IM (இன்டர்நேஷனல் மாஸ்டர்) ஆனேன். அதன் பிறகு 17 ஆண்டுகள் கழித்துத்தான் அடுத்த IM தோன்றினார். நான் மூன்று முறை இந்தியாவின் சார்பில் ஒலிம்பிக் போட்டிகளில் கடைசிச் சுற்றுவரை விளையாடி இருக்கிறேன். நான் முதன்முறை ஒலிம்பிக்கில் விளையாடியதை ஒரு மறக்க முடியாத நிகழ்ச்சி எனலாம். 1960ம் ஆண்டு ஒலிம்பிக்ஸ் ஜெர்மனியில் நடைபெற்றது. நான் இந்தியாவிற்காக விளையாடச் சென்று, முதல் சுற்றில் வெற்றி பெற்றேன். இந்தியா ஹாலந்துக்கு எதிராக விளையாடியதில் டாக்டர் மாக்சே என்கிற உலகச் சாம்பியனை தோற்கடித்தேன். அது இந்திய செஸ்ஸிற்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்ச்சி எனலாம். ஏனென்றால் அதற்கு முன்பு சில ஒலிம்பிக் விளையாட்டுகளுக்கு இந்திய செஸ் ஆட்டக்காரர்கள் சென்றிருந்தாலும், பெரிய வெற்றிகள் எதுவும் பெறவில்லை. இராம்தாஸ் குப்தா என்பவர் 1956ல் சில கிராண்ட் மாஸ்டர்களை வென்றிருக்கிறார். நான்தான் முதன்முறையாக உலகச் சாம்பியனை வீழ்த்தினேன். இந்த நிகழ்ச்சி 'இந்தியர்களாலும் இது போன்ற சாதனைகளைச் செய்ய முடியும்’ என்று காட்டுவதாக அமைந்தது. இருந்தாலும் இறுதிச் சுற்றில் நான் தோற்றுப் போனேன்.
நான் இந்தியக் குழுவிற்கு தலைமை வகித்தும் வெளிநாடுகளில் நடக்கும் பல போட்டிகளில் கலந்து கொண்டிருக்கிறேன். ஆனால் காலப் போக்கில் நானே முதலாக வரவேண்டும் என்ற எண்ணம் மாறி இந்திய செஸ் அணிக்கு சேவை செய்யும் நோக்கம் எனக்கு அதிகரித்ததால் நான் பெரிய போட்டிகளில் கலந்து கொள்வதை நிறுத்திக் கொண்டு மற்றவர்களை அனுப்ப ஆரம்பித்து விட்டேன்.
நான் விளையாடிய காலத்தில் இந்தியாவில் செஸ் இன்று போல் பெரிய அளவில் பண ஆதரவு பெற்று விளங்கவில்லை. அதிகம் புத்தகங்களோ, கட்டுரைகளோ கிடைக்காது. ஆங்கிலப் புத்தகங்கள் சில கிடைக்கும். ஆனால் விலை அதிகம் இருக்கும். நான் எனது சொந்த அறிவை நம்பியே இந்த ஆட்டத்தில் ஈடுபட்டு வந்தேன். செஸ் விளையாட விளையாட்டு முறைகள் பற்றிய அறிவு தேவைதான். ஆனால் சொந்தத் திறனும் வேண்டும். அதில்லை என்றால் எவ்வளவு புத்தக அறிவு இருந்தாலும் பெரிய அளவில் வெற்றிகாண முடியாது.
பல மொழிகள் கற்றேன்
நான் 1960ம் ஆண்டுதான் முதல் செஸ் ஒலிம்பியட் போயிருந்தேன். அங்கே நான் கண்ட ஜெர்மன் ஆட்டக்காரர்களின் திறமையிலும் அறிவிலும் மிகுந்த மதிப்புக் கொண்டேன். அதனால் இந்தியா திரும்பி வந்ததும், ஜெர்மானிய மொழி கற்றுக் கொண்டேன். நண்பர்கள் ஜெர்மன் மொழியிலுள்ள செஸ் புத்தகங்களை வாங்கி அனுப்புவார்கள். ஆங்கிலப் புத்தகங்களைக் காட்டிலும் ஜெர்மன், ருஷ்யப் புத்தகங்களிலுள்ள செஸ் தேற்றங்கள் மிகவும் சிறப்பானதாக இருக்கும். செஸ் விளையாட்டில் மிகச் சிறந்த ஆட்டக்காரர்கள் ஜெர்மனி, ருஷ்யா மற்றும் பிரான்ஸில் இருந்தார்கள். அவர்கள், தங்கள் அனுபவங்களை வைத்து எழுதிய புத்தகங்கள் மிகவும் சிறந்த ஆட்ட நுட்பங்களை விளக்குவதாக இருந்தன. அந்தப் புத்தகங்களைப் படிப்பதற்காக நான் ஜெர்மனி, பிரஞ்சு மற்றும் ருஷ்ய மொழிகளைக் கற்றுக் கொண்டேன். அதனால் பிற நாடுகளில் கிடைக்கும் செஸ் அறிவை இந்தியாவிலிருந்து பெருகின்ற அதிர்ஷ்டம் எனக்குக் கிடைத்தது.
ஆகஸ்ட் மாதம் 14ம் தேதி, 1972ம் ஆண்டு, சுதந்திர தினத்திற்கு ஒரு நாள் முன்பு, 'தால்' செஸ் கிளப் துவங்கினேன். அது அப்போதைய சோவியத் கம்யூனிடி சென்டரில் நடந்தது. அது ஆரம்பித்த பிறகு உலக சாம்பியன்ஷிப் விளையாட்டுக்கள் ஆரம்பமாயின. அமெரிக்காவின் பாபி பிஷர் மிகவும் பிரபலமானவராக இருந்ததல், பலர் செஸ்ஸில் ஆர்வம் காட்டினார்கள். பாபி பிஷர் மற்றும் ஸ்பாஸ்கி ஆடிய ஆட்டத்தின் போது ஒரு செஸ் அலை பரவியது என்று சொல்லலாம். தால் கிளப் பல செஸ் விரும்பிகளின் ஆதரவு பெற்று விளங்கியது. பெரிய ஆட்டக்காரர்கள் பலர் அங்கு வருகை தந்தார்கள். ருஷ்யப் பத்திரிக்கைகள் எல்லாம் அதிகம் அங்கு வருவதால், அந்தப் பத்திரிக்கைகளில் வரும் செஸ் கட்டுரைகளை மொழி பெயர்த்து, செஸ் பற்றிய வகுப்புக்கள் சொல்லிக் கொடுத்தோம்.
திறமை மிக்க இந்தியர்கள்
ஆரம்ப காலத்திலேயே ஆனந்திடம் மிகுந்த திறமை இருந்தது என்பதை என்னால் உணர முடிந்தது. சுல்தான்கான் முதல் பத்து உலக செஸ் ஆட்டக்காரர்களில் ஒருவராகத் திகழ்ந்தார். நான் உலக சாம்பியனை ஒலிம்பியடில் வீழ்த்தினேன். என்னையே தோற்கடிக்க வைக்கும் திறனுள்ள, ஆனந்த் போன்ற திறமைமிக்கவர்கள் இந்தியாவில் இருந்தார்கள். இந்தியாவின் செஸ் எதிர்காலம் மிகவும் சிறப்பானதாக இருக்கிறது என்று உணர்ந்தேன்.
1961ல் நான் ஒருவன் தான் இந்தியாவில் இன்டர்நேஷனல் மாஸ்டர். எவ்வளவோ திறமை உள்ளவர்கள் இருந்தும், அடுத்த 17 ஆண்டுகள் வரையில் யாரும் தோன்றாததற்கு, தமிழ்நாடு செஸ் அமைப்பு சரியாக இயங்காதது தான் காரணம் என்று நான் நினைத்தேன். அதனால், அதை நல்ல முறையில் இயங்க வைக்க வேண்டும் என்று சவால் எடுத்துக் கொண்டு, தமிழ்நாடு செஸ் அசோசியேஷனுக்கு செக்ரடரி பதவி எடுத்துக் கொண்டேன். நான் 1977ல் பதவி ஏற்றேன். 1978ல், சென்னையைச் சேர்ந்த ரவிகுமார் என்பவர் இந்தியாவின் இரண்டாவது இன்டர்நேஷனல் மாஸ்டர் ஆனார். அதன் பிறகு அகில இந்திய செஸ் அசோசியேஷன் செகரடரி ஆனேன். நிறைய பிரச்னைகளைச் சந்திக்க வேண்டி இருந்தது. நிறைய மனிதர்களைச் சந்தித்துப் பேச வேண்டி இருந்தது. என் சொந்தத் திறமைகளை வளர்த்துக் கொள்வதை விட்டுவிட்டு, அமைப்புக்களுக்காக உழைக்க ஆரம்பித்தேன். இப்போதும் அதைத் தொடர்ந்து செய்து கொண்டு இருக்கிறேன்.
இப்போது இந்தியாவில் செஸ் மிகவும் வலுவடைந்துள்ளது. தமிழ் நாட்டில மட்டுமே 17 இன்டர்நேஷனல் மாஸ்டர்ஸ் இருக்கிறார்கள். இரண்டு கிராண்ட் மாஸ்டர்சும், மூன்று பெண்கள் இன்டர்நேஷனல் மாஸ்டர்சும் இருக்கிறார்கள். தமிழ் நாட்டிலிருந்து, விஸ்வநாதன் ஆனந்த் மட்டுமின்றி, சசிகிரன் என்று ஒரு சிறந்த ஆட்டக்காரர் உருவாகி இருக்கிறார். சிந்து, கஸ்தூரி, தீபன் சக்கரவர்த்தி இப்படிப் பல இளைஞர்கள் உருவாகி வருகிறார்கள். இந்தியாவில் எளிதாக செஸ் சம்பத்தப்பட்ட புத்தகங்கள் கிடைக்கின்றன. இப்போது கணினியும், இணையமும் செஸ் கற்றுக் கொள்ளவும், பயிற்சிகள் செய்யவும் மிகவும் உதவியாக இருக்கிறன. மாநில அரசின் உதவிகளும் கிடைக்கின்றன.
இளைய தலைமுறையினர் செஸ் விளையாட்டில் ஆர்வம் காட்டும் பொழுது, அவர்கள் அவசரமாக விளையாடுவதைத் தவிர்க்க வேண்டும். செஸ் மெதுவாக யோசித்து விளையாடும் ஆட்டம் என்று உணர வேண்டும். அவசரமாக ஆடி ஆட்டத்தை முடித்து விட்டால் செஸ் அறிவு வளர்ச்சி அடையாது.
வருங்காலத்தில் செஸ் இந்தியாவில் மிகவும் சிறப்பான ஆட்டமாக இருக்கின்ற வாய்ப்புக்கள் அதிகமாகி வருகின்றது என்பதில் சந்தேகமில்லை.
******
இயற்கைத் திறமை முக்கியம்
சுல்தான் கான் என்று ஒரு இந்திய செஸ் ஆட்டக்காரர் இருந்தார். அவருக்கு ஆங்கிலம் தெரியாது. சர் உமர்ஹயர்கான் என்னும் நவாபிடம் வேலை செய்து வந்தார். அவரது செஸ் ஆட்டத் திறமையைக் கண்ட நவாப் அவரை இங்கிலாந்துக்கு அழைத்துப் போய் போட்டிகளில் பங்குபெற வைத்து, துவக்க ஆட்டம் பற்றியெல்லாம் சொல்லிக் கொடுத்தார்கள். ஆனால் யாருமே எதுவுமே சொல்லித் தராமலேயே அவருடைய மைய மற்றும் இறுதி ஆட்டம் மிகவும் வலுவானதாக இருக்கும். 1930 முதல் 1933 வரை பிரிட்டிஷ் எம்பயர் சாம்பியனாக அவர் திகழ்ந்தார். எந்த புத்தக அறிவுமே இல்லாது செஸ்ஸில் வெற்றிகாண முடியும் என்பதற்கு அவர் ஒரு நல்ல உதாரணம்.
******
பெருகிவரும் பரிசுத் தொகை
நான் முதலில் விளையாட ஆரம்பித்த பொழுது, தமிழ்நாடு சாம்பியன்ஷிப் தொகை ரூ. 100 ஆக இருந்தது. அடுத்த ஆண்டு அதை உயர்த்தி ரூ. 101 ஆக்கினார்கள். நான் செகரட்டரி ஆன பிறகு ஆட்டங்களை ஏலத்தில் எடுக்க வேண்டும் என்று ஏற்பாடு செய்தோம். அதனால் ரூ. 15,000 வரை ஏலத்தொகை வந்தது. சென்ற ஆண்டு 50 ஆண்டு பொன்விழா விளையாட்டுப் போட்டி பொள்ளாச்சியில் நடந்தது. தலைவராக இருந்த பொள்ளாச்சி மாகாலிங்கம் அவர்கள் ரூ. 50,000 பரிசுத் தொகையாக வழங்கினார்கள். இந்த ஆண்டு அவரே அதை ஒரு லட்ச ரூபாயாக உயர்த்திக் கொடுத்தார். 10,000 ரூபாயாக இருந்த பெண்கள் ஆட்டப் பரிசுத் தொகை ரூ. 30,000 ஆக உயர்த்தப் பட்டுள்ளது. ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு செஸ் விளையாட்டின் மிகப் பெரிய ஆதரவாளராக இருந்து, வெற்றி பெற்றவர்களுக்கு மிகுந்த நிதி உதவி செய்கிறார்.
******
சந்திப்பு, தொகுப்பு: பாகீரதி சேஷப்பன் உதவி: இரா.நடேசன், துர்கா புகைப்படங்கள்: சிவா சேஷப்பன் |