ஜி. நாகராஜன்
நவீன தமிழ் இலக்கியச் சூழலில் ஜி. நாகராஜனின் வருகையும் அவரது எழுத்தும் அவருக்கான தனித்த அடையாளத்தை மெய்ப்பித்துள்ளது. வாழ்வின் இயல்பான களங்களை, மாற்றங்களை தனது படைப்பாளுமையால் உயிர்ப்புடன் இயங்கவிட்ட சிறப்பு அவருடையது. எழுத்தாள உலகில் சித்தர்களும், பித்தர்களும், கலகக்காரர்களும், ஞானிகளும், புரட்சிகாரர்களும் என இயக்கம் கொண்ட நவீன தமிழ்ப்புனைகதை மரபு ஜி. நாகராஜன் வருகையால் மேலும் வளம் கொண்டதாயிற்று.

மனித இயல்புணர்வின் திளைத்த பகுதிகளின் அனுபவ விரிவும், முதிர்ச்சியும் படைப்பு வெளியில் விரிந்து கொண்டே இருந்தது. இந்த விரிவின் உந்துதலாகவே ஜி. நாகராஜனின் படைப்புலகம் இயங்கி உள்ளது. நிலவும் சமூக மதிப்பீடுகளையும், கருத்தாக்கங்களையும் அதன் அழுத்தங் களையும், மனித உறவாடல்களில் உள்ள முரண்களையும், பற்றுகளையும் விட்டொழிந்து வாழ்க்கையின் இயல்பு, குணம், தன்மை பற்றிய ஆத்ம விசாரணைகளை படைப்பு வெளியில் சுதந்திரமாக நிகழ்த்திக் காட்டுகின்றார். இது கலைமணம் சார்ந்தும், வாழ்க்கைத் தரிசனமாகவும், முதிர்ச்சியின் பலமாகவும் வெளிப்படுகிறது. அவர் இயங்கிய இயக்கத்தின் தர்க்க விளைவாகவும் அமைந்துவிடுகிறது.

ஜி. நாகராஜன் 1929 செப் 1ம் தேதி மதுரையில் பிறந்தார். தந்தையார் கணேச ஜயர். இவர் ஒரு வக்கீல். தாயார் தனது ஒன்பதாவது பிரசவத்தின் போது இறந்தார். நாகராஜன் மதுரைக் கல்லூரியில் பி.ஏ. படித்து முடித்தார். கல்லூரி நாட்களில் பாடப் புத்தகங்களோடு பல்வேறு வகையான புத்தகங்களையும் படித்து வந்தார். கணிதப் பாடத்தில் அபாரத் திறமைமிக்கவராகவும் இருந்தார். சிலகாலம் காரைக்குடி கல்லூரியில் டியூட்டராகப் பணிபுரிந்தார். தொடர்ந்து மதுரை அமெரிக்கன் கல்லூரியில் விரிவுரையாளராகச் சேர்ந்தார். இக்காலத்தில் கம்யூனிச இயக்கத்தோடு தொடர்பு ஏற்பட்டது.

கட்சிப் பணிகளில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். அதே நேரம் மாணவர்கள் மத்தியில் எல்லோராலும் விரும்பக்கூடிய ஆசிரியராகவும் இருந்தார். கல்லூரி நிர்வாகம் நாகராஜனை அமெரிக்காவுக்கு அனுப்பத் திட்டமிட்டி ருந்தது. ஆனால் இவரது தீவிர கம்யூனிச ஈடுபாடு அதற்கு தடைபோட்டது. மேலும் கல்லூரிப் பணியில் இருந்து அவரை நீக்குமளவிற்கு நிலைமை வளர்ந்தது.

1962இல் பேரா. வானமாமலை திருநெல்வேலியில் நடத்திக் கொண்டிருந்த தனியார் பயிற்சிக் கல்லூரியில் ஆசிரியராகச் சேர்ந்தார். கம்யூனிச இயக்கத்துடன் முரண்பாடு கொண்டு கட்சிப் பணியில் இருந்து விலகிக் கொண்டார். 1959இல் ஆனந்தா என்பவரை கலப்புத் திருமணம் செய்து கொண்டார். ஆனால் ஒரு சில மாதங்களுள் ஆனந்தா விபத்துக்குள்ளாகி மரணமுற்றார். பின்னர் 1962ல் ஆசிரியை நாகலட்சுமி என்பவரை மணந்து கொண்டார். இரு குழந்தைகளுக்குத் தந்தையானார்.

1957ல் ஜனசக்தி இதழில் 'அணுயுகம்' என்னும் கதை பிரசுரமாயிற்று. தொடர்ந்து இவரது படைப்புலகம் விரியத் தொடங்கியது. சாந்தி, சரஸ்வதி, ஜனசக்தி, ஞானரதம், இரும்புத்திரை உள்ளிட்ட பல்வேறு இதழ்களில் படைப்புகள் வெளிவரத் தொடங்கின. சில கதைகளை ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார்.

நாகராஜன் தன் படைப்புகளை 'பித்தன் பட்டறை' எனும் வெளியீட்டகம் மூலம் தானே வெளியிட்டார். இதன் மூலம் குறத்தி முடுக்கு (சிறுநாவல்) நாளை மற்றொரு நாளே (நாவல்) கண்டதும் கேட்டதும் (சிறுகதைகள்) ஆகிய நூல்கள் வெளியிடப்பட்டன. இத்தொகுப்புகள் மூலம் தமிழ்ச் சூழலில் நாகராஜன் மிகுந்த கவனிப்புக்குரியவரானார். நவீன தமிழ்ப் புனைகதை வரலாற்றில் அவருக்கான இடத்தையும் உறுதிப்படுத்தியது.

மனிதன் தன்னைப்பற்றி தனக்கே தெரியாத உண்மைகளை அறிந்து கொள்ள முற்படுவது இயல்பான செயல். ஆனால் மனித மனத்தின் செயல்பாடுகளை கண்டுணரும் துணிவின்றி போலித்தனங்களிலும் பொய்மைகளிலும் வாழ்க்கையைப் புதைப்பது மனித இயல்பாகி விட்டது. இதுவே சமூகம் எதிர்பார்க்கும் மதிப்பீடுகளாகவும் உள்ளன. இவ்வாறான சமூக மதிப்பீடுகள் மற்றும் ஒழுக்கம் சார்ந்த விழுமியங்களும் முன் தீர்மானங்களும் தனிமனித வாழ்வின் நிதர்சனமான இயல்புகளைக் காயடித்து விடுகின்றன. விழிப்புள்ள மனித மனத்தின் இயல்புகளைச் சிதைத்தும் விடுகின்றது. இந்நிலையில் தான் வாழ்க்கையை அதன் இயல்பான போக்கில் வைத்து நிர்வாணமாகப் பார்க்கும் துணிச்சலும் சுயமரியாதையும் தான் படைப்பாளிகள் சிலரை இலக்கிய வெளியில் செயல்படத் தூண்டுகிறது. இங்கு இவர்கள் ஆத்ம பரிசோதனையை நிகழ்த்திக் காட்ட முற்படுகின்றனர். நாகராஜனின் வாழ்க்கை யையும் அவரது படைப்பு மனவெளியும் இவ்வாறு தான் இயக்கம் கொண்டது.

இதனால் தான் நாகராஜன் படைப்பில் நிஜமான யதார்த்த வாழ்க்கையும் மனிதர்களும் இடம் பெற்றார்கள். குறிப்பாக விளிம்பு நிலை மாந்தர்களின் அன்பும், தோழமையும், மனிதநேயமும், உறவுகளில் ஏற்படக்கூடிய மனித விசாரணையும் என இயங்கும் ஓர் உலகு கலைத்தன்மையுடன் படைக்கப்படுகிறது. குறத்தி முடுக்கு, நாளை மற்றொரு நாளே உள்ளிட்ட படைப்புகள் இதனை மெய்ப்பிக்கும்.

தன்னிலிருந்து தனதான தார்மீக நியதிகளை உருவாக்கும் முனைப்பு பாத்திர வார்ப்புகளில் முக்கியமான ஆனால் இயல்பான பண் பாகவே உள்ளது. நாகராஜனின் படைப்பு மனம் போலித்தனங்கள், பொய்மைகள், சம்பிரதாய ஒழுக்க நெறிகள் இவற்றின் பிடியிலிருந்து விடுபடத் துடிக்கும் சுதந்திர வேட்கையுடன் கூடிய விடுதலையின் தளமாகவே இயங்குகிறது. இதுவே இவரது படைப்பாக்க உந்துதலையும் படைப்புச் செய்நேர்த்தியையும் தீர்மானிக்கின்றது. மேலும் சக மனிதர்கள் மீதான நேசிப்பும் வாழ்வின் மீதான தீராத வேட்கையும்தான் படைப்பு மனவெளியின் இயக்கம் ஆகிறது. இந்த இயக்கமே ஜி. நாகராஜனின் படைப்பு வெற்றியாகவும் உள்ளது.

''நாட்டில் நடப்பதைச் சொல்லியிருக்கிறேன். இதில் உங்களுக்குப் பிடிக்காதது இருந்தால் 'இப்படி யெல்லாம் ஏன் நடக்கிறது' என்று வேண்டுமானால் கேளுங்கள். ''இதையெல் லாம் ஏன் எழுத வேண்டும்?'' என்று கேட்டுத் தப்பித்துக் கொள்ளப் பார்க்காதீர்கள். உண்மையைச் சொல்வதென்றால் முழுமையுந் தான் சொல்லியாக வேண்டும். நான் விரும்பும் அளவுக்குச் சொல்ல முடியவில்லையே என்பதுதான் என் வருத்தம்'' என்று குறத்தி முடுக்கு குறுநாவலில் நாகராஜன் குறிப்பிட்டிருப்பதன் மூலம் அவரது இலக்கிய நோக்கைப் புரிந்து கொள்ளலாம். மேலும் அவரது படைப்பும் கூட வாசகருக்கு ஏற்படுத்தக்கூடிய மனவுணர்வும் இதுதான்.

தெ. மதுசூதனன்

© TamilOnline.com