தெற்கு சான் ஹோஸே திருக்கோவிலில் தியானம்
'கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்' என்பது தமிழ்ப் பழமொழி. இப்போது தெற்கு சான்ஹோஸே பகுதிக்குப் புதியதாய்க் கிடைத்திருக்கும் சிறப்பு அங்குத் தோன்றியிருக்கும் 'ஸ்ரீ லக்ஷ்மி கணபதி திருக்கோவில்'. இங்குக் கடவுள் நமக்கு நெருங்கியவராக இருக்கிறார். காரணம், அனைவருக்கும் தங்கள் கைகளினாலேயே அபிஷேகம் செய்யவும், துதிப்பாடல்களைப் பாடி மகிழவும், பூக்களால் அர்ச்சிக்கவும் தரப்படும் வாய்ப்பு.

விரிகுடாப் பகுதிக்கு விஜயம் செய்யும் துறவிகளும், இந்து மதப் பெரியவர்களும் இக்கோவிலுக்குத் தவறாது வருகை புரிகின்றனர். அவர்களில் ஒருவர், கிருஷ்ண ஜெயந்தி அன்று வருகை தந்த திரு நித்யானந்த ஸ்வாமிகள். அன்று அவர் பக்தர்களுடன் நடத்திய கலந்துரையாடலும் தியானப் பயிற்சியும் அனைவருக்கும் வித்தியாசமான அனுபவத்தைத் தந்தது.

மாலை ஐந்தரை மணியளவில் ஆரம்பித்த பூஜை கிருஷ்ணருக்கான சிறப்பு அலங்காரம் மற்றும் நைவேத்தியங்களுடன் முடிந்தது. தொடர்ந்து தெற்கு சான்ஹோஸே பகுதியைச் சேர்ந்த சிவகுமார் மற்றும் சிலர் கிருஷ்ண கானம் இசைத்தனர். கானம் முடியும் சமயத்தில் கணேஷ் சாஸ்திரிகள் பூரண கும்பம் அளிக்க எழுந்தருளினார் நித்யானந்தா. தனது சிறு வயதிலேயே பேரின்ப அனுவத்தைப் பெற்ற அவர் பக்தர்களுடன் தனது உரையாடலைத் துவக்கினார். பக்தர்கள் கேட்ட கேள்விகளும் அவருடைய பதில்களும் அனைவரையும் அவர் வசப்படுத்தியது. திருவண்ணமலையில் தான் பெற்ற அனுபவங்களை அவர் கூறியது மெய்சிலிர்க்க வைத்தது.

இந்து மதம் இந்த காலத்தில் நிலைத்திருக்குமா என்ற கேள்விக்குப் பதிலளிக்கையில் எந்தக் காலத்திற்கும் பொறுத்தமான இந்து மதத்தைப் பற்றி அந்த கவலை தேவையில்லை என்றார். பலரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த தியான நேரம் வந்தது. கண்களை மூடி, நாபியிலிருந்து 'ஓம்' என்ற ஒலியெழுப்பி அனைவரையும் முப்பது நிமிடங்களுக்கு இவ்வுலகை மறந்து தியானிக்கும் வழியருளினார். பின் பக்தர்களுக்கு ஆசீர்வாதம் செய்து இறையருளை வழங்கினார். இக்கோவில் பற்றிய மற்ற விவரங்களை www.vvgc.org என்ற வளை பகுதியில் பார்க்கலாம்.

பத்மப்ரியன்

© TamilOnline.com