ரூபா மஹாதேவன்: இளைய தலைமுறையின் பாரம்பரிய சங்கீதம்
நம்மில் பலருக்கு ஒரு சந்தேகம் உண்டு. அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்த ஒருவரால் கர்நாடக சங்கீதத்தை சுத்தமாக, கலப்படமில்லாமல் வழங்க முடியமா என்பதே அது. உச்சரிப்பிலோ, பாடும் முறையிலோ, ஏன் தன்னை அலங்கரித்துக் கொள்ளும் விதத்திலோ கூட ஒருவர் இங்கேயே பிறந்து வளர்ந்த இந்தியர் என்பது தெரிந்துவிடும். அப்படியில்லாமல் பார்த்துக் கொள்வது மிகவும் கடினம். செப்டம்பர் பதிமூன்றாம் தேதி சான் ஹோசேயில் கன்கார்ட் முருகன் கோவிலுக்காக இசைக் கச்சேரி வழங்கிய ரூபா மஹாதேவன் அவருடைய பெற்றோர், சங்கீத ஆசிரியை, ஏன் நாம் எல்லோருமே பெருமைப்படும் வகையில் சிறந்த முறையில் பாடி மற்ற விரிகுடாப் பகுதி இளைய தலைமுறைக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருந்தார்.

சாவேரியில் அவர் ஆரம்பித்துப் பாடிய வர்ணம் நமக்குக் காவேரியின் குளிர்ச்சி தந்தது. தொடர்ந்தது பேகட ராகத்தில் 'வல்லப நாயகாஸ்ய'; ஆபோகியில் 'ஸ்ரீலக்ஷ்மி வராகம்' நம்மை தாமிரபரணியின் தண்மை சேர்த்தது. கீரவாணியில் பல்லவி ரூபாவின் சாதக பலத்தை நிரூபித்தது. 'நானொரு விளையாட்டு பொம்மையா' பாடலில் இருந்த கவிநயம் ரூபாவின் குரலில் பளிச்சிட்டது. வயலின் வாசித்த அனில் நரசிம்மா பாட்டுக்குச் சரியான பக்கபலம். இவரும் விரிகுடாப் பகுதியில் வளர்ந்தவரே. மிருதங்கம் வாசித்த லால்குடி ஸ்ரீராம் ப்ரும்மானந்தம் பல கலைஞர்களுடன் வாசித்த அனுபவம் உள்ளவர். அந்த அனுபவத்தின் மேன்மை இங்கும் வெளிப்பட்டது.

கோவிலுக்கு நிதி திரட்டும் நிகழ்ச்சி இங்கு அடிக்கடி நடைபெறுகிறது. இருந்தும் ரூபாவின் கச்சேரிக்குக் கிடைத்த ஆதரவு பல சங்கங்கள் அவரை அணுகும் சாத்தியத்தை வெளிப் படுத்தியது.

காலமும் தேசமும் மாறினாலும் பாரம் பரியச் செழிப்புள்ள கலை தக்கவரிடத் தில் தழைக்கும் என்பது ரூபா, அனில் நரசிம்மா போன்றோரைக் காண்கையில் மீண்டும் உறுதிப்படுகிறது.

பத்மப்ரியன்

© TamilOnline.com