சிகாகோ தமிழ்ச் சங்கத்தின் ஆதரவில் நடந்த ஐங்கரன் குழுவினரின் இன்னிசை மழை வந்திருந்தோரின் செவிகளுக்கு தேன்விருந்து. 60களில் ஆரம்பித்து இன்றுவரை உள்ள முத்தான பாடல்களை தேர்வு செய்து சுமார் 4 மணி நேரம் மயங்க வைத்தனர். சங்கத்தின் தலைவர் கிருஷ்ணராஜ் அவர்களின் அறிமுகத்தோடு தொடங்கிய நிகழ்ச்சியை சி.எஸ். பாஸ்கரன் மிகச் சிறப்பாக தொகுத்து வழங்கினார். ஒரே மேடையில் எஸ்.பி. பாலசுப்பிரமணியன், டி.எம்.எஸ், பி.பி. ஸ்ரீனிவாஸ் போன்ற ஜாம்பாவான்களின் பாடல்களைத் தன் இனிமையான குரலால் மீண்டும் ஒலிக்க வைத்த ஐங்கரன் சிகாகோ நகரில் சுமார் இருபது வருடங்களாகத் தன் இசைக்குழுவினரோடு இசைவிருந்து அளித்து வருகிறார்.
குழுவில் பத்தாண்டுகளாக இசை விருந்தளிக்கும் ரமா ரகுராமன் 'சிகாகோ சித்ரா' என்ற பெயர் எடுத்தவர். 'நாளை இந்த வேளை', 'சிட்டு குருவி முத்தம் கொடுத்து' போன்ற பாடல்கள் பசுமை நிறைந்த அந்த நாட்களுக்கு ரசிகர்களை அழைத்துச் சென்றது. இசைக்குயில் சுதா வெங்கட் 'உதயா, உதயா' என்ற கர்நாடக இசையைச் சார்ந்த பாடலை ஐங்கரனுடன் பாடி மிகுந்த பாராட்டுப் பெற்றார். அவர் பாடிய 'அடி ஆத்தாடி' என்ற பாடலுக்கு எழுந்த கரவொலி அடங்க வெகுநேரம் பிடித்தது. ''இசைத்தட்டைவிட இவர்கள் பாடியது அருமை'' என்று சி.எஸ். பாஸ்கர் சொன்னது மிகையல்ல.
இந்த இசைநிகழ்ச்சியில் பல இளம் கலைஞர்களை அறிமுகம் செய்தார்கள். சிறிய வயதிலிருந்தே தமிழ்ச் சங்கத்திற்கு அறிமுகமானாலும் இரண்டு புதுப்பாடல்களைப் பாடி அசத்திவிட்டார் ஆர்த்தி சூசை. அருமையான குரல் வளம். மருத்துவத்தில் தங்கப் பதக்கம் வாங்கிய சூர்யா விஸ்வபாரதி ஐங்கரனுடன் சேர்ந்து நீரோடும் வைகையிலே பாடி இசையிலும் தங்கம் குவித்தார். பச்சை மலைப்பூவு பாடிய பரணி, சாணக்யா பாடிய பாக்யா, செந்தூரப்பூவே பாடிய ஜான்சி, தாளம் படப்பாடலைப் பாடிய ரஜினி ஆகியோர் சிகாகோவின் நம்பிக்கை நட்சத்திரங்கள்.
'கீ போர்ட்' இசைத்த வின்சென்டும், தபலா வாசித்த நடேசனும் ஐங்கரனுக்கு ஈடு கொடுத்து அமர்க்களப்படுத்தினார்கள்.
சிகாகோ பாலாஜி கோயிலில் நடைபெற்ற இந்த இன்னிசை விழாவிற்கு அரங்கத்தில் புதிதாக அமைந்துள்ள 'music system' நன்றாக கைகொடுத்தது. முத்து செல்வராஜின் நன்றியுரையுடன் இரவு சுமார் 11.30 மணிக்கு இன்னிசை விழா நிறைவுபெற்றது. கடந்த 35 வருடங்களாக சிகாகோ தமிழ்ச் சங்கம் அமெரிக்கத் தமிழர்களின் கலாசாரத்தையும் திறமைகளையும் ஊக்குவிப்பதோடு, தமிழ் நாட்டிலிருந்து தமிழ் அறிஞர்களையும் கலைஞர்களையும் அழைத்து கெளரவித்து வருகிறது.
இதில் பங்குகொள்ள விரும்பும் தமிழர்கள் டாக்டர் கிருஷ்ணராஜ் அவர்களை 847-541-5993 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
ஜோலியட் ரகு |