சிகாகோ பட்டினத்தில் ருத்ரப்பட்டணம் சகோதரர்கள்
லெமான்ட் (சிகாகோ) ஹிந்துக் கோவிலில் ருத்ரப்பட்டணம் சகோதரர்கள் அக்டோபர் 19, 2003 ஞாயிறன்று நடத்திய புரந்தர தாஸர் நினைவுக் கச்சேரி வெகு நிறைவாக இருந்தது. தாஸரின் பல கிருதிகளை இவர்கள் பாடுகையில் 'tradition at its best' எனச் சிலாகிக்கும்படி இருந்தது. ரீதிகௌளையில் ஆரம்பித்த கச்சேரி பந்துவராளியில் 'நின்ன நோடி'யில் சுறுசுறுப்பானது. சஹானாவில் 'கோவிந்த தியான' கீர்த்தனையை இந்த அளவிற்கு அனுபவித்துப் பாடிக் கேட்டு வெகு நாளாகிறது. 'நாம கீர்த்தனே அனுதின' (தன்யாசி), 'தாள பேக்கு தக்க மேள பேக்கு' (பைரவி) ஆகிய கிருதிகள் இறையருள் பெற்ற கவியரசரின் சொல்லாட்சிக்குச் சான்றுகள். இறுதியில் பாடிய ராகமாலிகை ஒரு பல்சுவை விருந்து.

பக்க வாத்தியங்கள் மைசூர் V. ஸ்ரீகாந்த் (வயலின்), P.K. சுவாமிநாதன் (மிருதங்கம்) ஆகியோரும் சிறப்பாகச் செய்தனர். உமையாள்புரத்தின் சீடரான சுவமிநாதனின் (தொழில் ரீதியில் மருத்துவர்!) வாசிப்புக்கு 'பலே' போடாதவரே இல்லை.

கச்சேரி முடிந்து வெளியே வரும்போது இவ்வளவு இசை அறிந்தவர்கள் இருக்கும் இந்நகரில் அற்புதமான இந்தக் கச்சேரிக்குக் கூட்டம் அதிகமில்லையே என்னும் ஆதங்கம் இருக்கத்தான் செய்தது.

ஜோலியட் ரகு

© TamilOnline.com