ஓ கலி·போர்னியா! என்று அமெரிக்கா மட்டுமல்ல, உலகமே திகைத்து நிற்கிறது. நடிப்பில் ஆஸ்கர் விருது பெற முடியாத ஆர்னால்டு ஸ்வார்ட்சநெக்கர் இன்று கலி·போர்னியாவின் ஆளுநர் பதவியை வென்றிருக்கிறார். திரைப்பட நட்சத்திரத்தின் கவர்ச்சி அரசியல்வாதியைக் கவிழ்ப்பது தமிழ்நாட்டுக்குப் பழைய செய்தி. ஆனால், தமிழ்நாட்டைப் போலவே, கலி·போர்னியாவிலும் நட்சத்திரத்தின் வெற்றிக்கு அவரது கவர்ச்சி மட்டுமே காரணமில்லை. இது நிலநடுக்கத்துக்குப் பெயர்போன கலி ·போர்னியாவின் அரசியல் பூகம்பம். இது வழக்கமான அரசியலின்மேல் நம்பிக்கை இழந்து கொதித்தெழுந்த மக்களின் போர்க்குரல். இந்தக் கொதிப்பு அமெரிக்காவின் ஆளும் வகுப்புகளைக் கலங்க வைத்திருக்கிறது. அடுத்த தேர்தலுக்குள் இந்தக் கோபத்தை எப்படித் தணிப்பது என்று வாஷிங்டன் முதல் பியோரியா வரை எல்லா அரசியல்வாதிகளும் கணக்குப் போடத் தொடங்கி இருக்கிறார்கள்.
இது விந்தையான தேர்தல் காலம்! அன்று கிளின்டனின் நடத்தையைக் கண்டித்த பழமைவாதிகள் இன்று ஆர்னியின் 'பொறுக்கித் தனத்தை' மன்னிக்கிறார்கள். அன்று கிளின்டனை மன்னித்த பெண்ணியவாதிகள் இன்று ஆர்னியைக் கடுமையாகக் கண்டிக் கிறார்கள். ஆகப்போக, இவர்கள் கண்டிப் பதும், மன்னிப்பதும் நடத்தையை அல்ல என்பது வெட்ட வெளிச்சம். இந்தப் போலித்தனத்துக்கு நடுவேயும் தெரிகிறது நம்பிக்கையின் ஒளிவிளக்கு. ஊழல் பேர்வழிகளையும், இன வெறியர்களையும் தரித்து வந்திருக்கும் லூயீசியானா மாநிலத்தின் முதல் தேர்தலில் (primary) குடியரசுக் கட்சிப் பழமைவாதி இந்திய அமெரிக்கர் 'பாபி' ஜிண்டால் முதலிடம் பெற்றிருக்கிறார். இவர் வரும் நவம்பர் 15ம் தேதி தேர்தலில் கேத்லீன் பிளாங்கோவைத் தோற்கடித்தால், அமெரிக்க ஆளுநராகும் முதல் இந்திய அமெரிக்கர் என்று வரலாறு படைப்பார். 1992 இல் "கூ கிளக்ஸ் கிளான்" (Ku Klux Klan) இனவெறியர்களின் முன்னாள் தலைவர் டேவிட் டியூக்குக்கு வாக்களித்த லூயீசியானாவா இது! இப்போதோ, ஒரு குடிபுகுந்த (immigrants) இந்திய அமெரிக்கர்களின் மகனையோ, அல்லது ஒரு கேஜன் பெண்மணியையோ ஆளுநராகத் தேர்ந்தெடுத்து அமெரிக்காவின் பிற்போக்கு மாநிலங்களில் ஒன்று என்ற பழியைத் துடைத்துக் கொள்கிறது லூயீசியானா.
கலி·போர்னியா தேர்தலிலும், முன்னணியில் இருந்த ஐவரில் இருவர் குடிபுகுந்தவர்கள். இன்னும் வெளிநாட்டாரின் உச்சரிப்போடு ஆங்கிலம் பேசுபவர்கள். "உன் பெயர் நீளம், யார் வாயிலும் வராது, மாற்றிக் கொள்" என்று பலர் கட்டாயப் படுத்தினாலும் விடாப் பிடியாகத் தன் பெயரை உலகமெல்லாம் பரப்பியவர் ஆர்னால்டு ஸ்வார்ட்சநெக்கர். "கேல·போர்னி யா" என்ற அமெரிக்க உச்சரிப்பில் பேசாமல் "கலி·போர்னியா" என்று அவர் இந்த மாநிலத்தைக் குறிப்பிட்டதை முதலில் கிண்டல் செய்தவர்களும், மக்களின் எரிச்சலை உணர்ந்து அடங்கி விட்டார்கள். கிரேக்க-அமெரிக்கப் பெண் வேட்பாளர் ரியானா ஹ·பிங்டன் மட்டுமே சளைக்காமல் ஆர்னால்டைக் குத்திக் கொண்டிருந்தார். துணை ஆளுநர் பஸ்டமண்டேயும் குடிபுகுந்த மெக்சிகர்களின் புதல்வர்! "வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்" எப்படி வெளி மாநிலங்களில் பிறந்தவர்களையும், வேற்று மொழிக்காரர்களையும் தம்மில் ஒருவராகப் பார்க்கிறதோ, அதே போல் கலி·போர்னியாவும் கொண்டாடுகிறது. ஆனால், இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானிய மரபுவழி வந்த அமெரிக்கர்களைச் சிறையில் இட்ட அதே கலி·போர்னியாவில் இன்று வேட்பாளர்களின் வெளிநாட்டுப் பிறப்பைப் பழித்து "மண்ணின் மைந்தர்களை" யாரும் உசுப்பவில்லை என்பது கலி·போர்னியாவின் முதிர்ச்சிக்கு அடையாளம்.
சிறு வயதில் என் பாட்டி எனக்குக் கற்பித்த இறைவணக்கப் பாடல்களில் சில இன்னும் பசுமையாக நினைவில் இருக்கின்றன. அவற்றில் ஒன்று, "ஒருமையுடன் நினது திருவடி நினைக்கும் உத்தமர்தம் உறவு வேண்டும், உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்" என்று தொடங்கும் வள்ளலார் பாடல். இறைவனை வேண்டும்போது தப்பித் தவறிக்கூட எதிர்மறைச் சிந்தனைகளோடு எனக்கு இது வேண்டாம் என்று சொல்லுவதைத் தவிர்க்கும் பாடல் அது! "பெரு நெறி பிடித்தொழுக வேண்டும், மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்" என்று வேண்டும் அந்தப் பாடலைச் சூலமங்கலம் சகோதரிகளின் குரலில் கேட்கும்போது இன்றும் மெய் சிலிர்க்கிறேன். மயிலாப்பூர் முண்டகக்கண்ணி அம்மன் கோவிலில் வள்ளலார் சன்னதி அமைத்ததில் என் குடும்பத்தார் பங்கும் உண்டு. சிலம்புச்செல்வர் ம.பொ.சி.யின் "வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு" என்ற நூலின் மூலம் திருவருட் பிரகாச வள்ளலார் எனும் ராமலிங்க அடிகளைப் பற்றி இளமையில் ஓரளவு அறிந்து கொண்டேன்.
இந்தத் தொடர்புகளின் காரணமாகச் சென்ற மாதம் மதுசூதனன் எழுதிய வள்ளலார் கட்டுரையைக் கூர்ந்து படித்தேன். வள்ளலார் மீது ஆழ்ந்த ஈடுபாடு உள்ள ம.பொ.சி. அவர்களின் கருத்துகள் சில இந்தக் கட்டுரையிலும் எதிரொலிக்கின்றன. இந்தியாவின் சித்தர்கள், யோகிகள் மரபுகள் சிக்கலானவை. அவற்றை மதங்கள் என்ற கட்டங்களுக்குள் அடைத்துப் பார்ப்பது சுலபமல்ல. பரமஹம்ச யோகானந்தரின் "ஒரு யோகியின் சுயசரிதை" என்ற நூலும் சித்த மரபுகளைக் கோடிட்டுக் காட்டுகிறது. வள்ளலாரைப் பகுத்தறிவுக் கோணத்தில் பார்ப்பவர்கள் அவரது சமூகப் புரட்சிச் சிந்தனைகளை முன் வைக்கிறார்கள். சித்தர் மரபுகளை ஏற்பவர்கள் அவர் மரணமிலாப் பெருவாழ்வு பெற்றவர் என நம்புகிறார்கள். வள்ளலாரைப் புரிந்து கொள்ள விரும்புவோர் முதலில் அவர் எழுதியதைப் படிக்க வேண்டும். அவை முழுவையும் www.vallalar.org என்ற வலைத்தளத்தில் கிடைக்கின்றன.
சென்ற மாதம் "இன்னும் சில ஆண்டுகளில், இந்திய அனுபவம் இல்லாதவர்களுக்கு இந்தியாவில் வேலை கிடைப்பது சந்தேகமே" என்று எழுதியிருந்தேன். இப்போதே இந்திய அனுபவம் இல்லாவிட்டால் உயர்பதவிகளுக்கு வேலை கிடைப்பதில்லை என்கிறார் இந்தியாவில் வேலைதேடி வரும் நண்பர்! அதே பக்கத்தில், சென்னை விளம்பரப் பலகைகளில் தமிழை ஆங்கில எழுத்துகளில் எழுதுவதைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். அந்தப் போக்கைச் சுட்டிக்காட்டிக் கவலைப்பட்டுக் கவிஞர் வைரமுத்து பேசியதை எழுத்தாளர் காஞ்சனா தாமோதரனின் "இந்திய இலக்கிய மாநாட்டுக் குறிப்புகள்" என்ற கட்டுரையில் காணலாம். சென்ற நவம்பரில் தென்றல் ஆசிரியர் குழுவில் இணைந்த பின் நான் எழுதத் தொடங்கிய 'புழைக்கடைப் பக்கம்' இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்தப் பக்கத்தைப் பற்றிக் கருத்துத் தெரிவித்து வரும் வாசகர்களுக்கும், என்னை ஊக்குவித்து வரும் தென்றல் குழுவுக்கும் என் நன்றி.
மணி மு. மணிவண்ணன் |