கலி(போர்னியா) காலம் - (பாகம் 12)
முன் சுருக்கம்: 2000க்கும் 2001க்கும் இடையிலான ஒரு வருட காலத்தில் அமெரிக்கப் பொருளாதார நிலையின் பெரும் சீர்குலைவு எதனால் ஏற்பட்டிருக்கலாம் என்று கற்பனை உலகுக்குச் சென்று பார்த்தோம்.

நாரதர், கலி·போர்னியாவில் புரளும் செல்வம் லஷ்மி கடாட்சத்தாலேயே என்று கலக மூட்டி விடவே, வந்து பார்த்த விஷ்ணுவும் முதலில் லக்ஷ்மியின் அருள் பலத்தை ஒப்புக் கொண்டார். ஆனால் டாட்-காம் கொப்பளம் உடைந்து, அதன் பின் 9/11 விளைவு, என்ரான், வொர்ல்ட்காம் ஊழல் எனத் துன்பங்கள் தொடர்ந்தன. அவற்றுக்குக் காரணம் மாயையால் விளைந்த மமதையும் பேராசையும் என்று விஷ்ணு விளக்கினார்.

அப்படிப்பட்ட விளைவுகளிலிருந்து எப்படி மக்கள் விடுபட்டு மீண்டும் சீர்நிலை பெறுவது என்று நாரதர் கேட்கவே, மஹாவிஷ்ணு தான் கண்ணனாக அவதரித்த போதே கீதையில் கர்ம யோகம் பற்றி உரைத்து விட்டதாகக் கூறினார். நாரதர் பலரும் கீதையை மறந்து விட்டதால் அதை மீண்டும் தற்கால ரீதியில் உணர்த்த வழி கேட்டார். லக்ஷ்மி தேவியும் விஷ்ணு மீண்டும் அதற்காக அவதரிக்க வேண்டுமோ என்று கேட்டாள். விஷ்ணு, அவசியமில்லை, புத்தர் போன்ற பலரும் அந்தக் கருத்துக்களை அவ்வப்போது உரைத்திருக்கிறார்கள், தற்போது கூட குடும்ப வாழ்வு வாழ்ந்து கொண்டே ஞானம் பெற்ற பலர் மற்றவர்களுக்கு வழி காட்டுகிறார்கள் என்று கூறி, அத்தகைய ஒருவரை பூலோகத்தில் காட்டினார்.

அவர் பெயர் அருண். அவர் பல வருட காலமாக பல உயர் தொழில் நுட்ப (hi-tech) நிறுவனங்களில் பணி புரிந்தவர். அவர் அடைந்திருந்த வெற்றிகளாலும் venture உலகில் அவருக்கிருந்த பலப் பல தொடர்புகளாலும் அவருடைய பெயர் பரவியிருந்தது.

அப்படியிருந்தாலும் தலைக் கனமின்றி யார் என்ன கேட்டாலும் பொறுமையாக பதிலளிப்பார். அதே போல் யார் என்ன உதவி கேட்டாலும், தன்னாலான வரை தயங்காமல் செய்வார். அருணைப் பலர் கேட்கும் கேள்விகளுக்கு அவர் அளிக்கும் பதில்கள் மூலம் நாரதரின் கேள்விக்கு நாராயணன் உரைத்த பதிலின் விளக்கத்தைச் சிறிது சிறிதாக அறிந்து கொண்டிருக்கிறோம்.

சென்ற இதழில் சிவா என்ற இளைஞன் தன் நிறுவனம், தொழில் நுட்ப வேலைகளை இந்தியாவுக்கு அனுப்பி விட்டதால், தான் வேலை இழந்து விட்டதாகவும், வேறு பல நிறுவனங்களிலும் அதே காரணத்தால் வேலை நீக்கங்கள்தான் உள்ளன, வேலை வாய்ப்பே இல்லை எனவும் கூறினான். இந்த நிலைக்கு அருண் என்ன தீர்வு கூற முடியும் என சிவா கேட்கவே, அருண் இந்த மாதிரி நிலை இப்போது தொழில் நுட்பத் துறையில் மிகவும் சகஜமாகிவிட்டது; எனவே சரித்திரத்தில் முன்பு மற்றத் துறைகளில் இதே மாதிரி நடந்த போது பாதிக்கப்பட்டவர்கள் செய்ததை அறிந்து கொண்டு அந்த மாதிரி செயல்பட வேண்டும் என்று கூறினார். தொழிற்சாலை உற்பத்தித் துறையில் வேலை வாய்ப்புக்கள் ஹாங்காங், சைனாவுக்குப் போன போது, பலர் வேறு தொழிற்சாலைகளுக்கும், சேவை, அலுவலகம் போன்ற வேறு துறைகளுக்கும் மாறியதை விளக்கினார்.

அந்த ஒரு முறை மட்டுமல்லாமல், அதற்கு முன்பும், பிறகும் அந்த மாதிரி நடந்ததைப் பற்றி சிவா விளக்கம் கேட்கவே, அருண் தொழில் புரட்சிக் காலத்தில் நடந்ததைப் பற்றியும், PC மெமரிகள், பெட்டிகள் உற்பத்தி ஆசியாவுக்கு அனுப்பப் பட்டதையும், தேசியப் பாதுகாப்புத் துறையில் செலவுக் குறைப்பால் பலர் வேலை இழந்ததையும் குறிப்பிட்டார். ஆனால் ஒவ்வொரு முறையும் வேறு வளர்ச்சியால் பெரும்பாலோர் மீண்டும் வேலை பெற்றதையும் சுட்டிக் காட்டினார். சிவா ஆனந்தமாக அப்படியென்றால் இந்த முறையும் அப்படியே வேறொரு தொழில் நுட்பத்தின் வளர்ச்சியால் சிறிது காலத்தில் நிறைய வேலை வாய்ப்புக் கிடைக்கும் என்று உணர்ந்ததாகக் கூறினான். ஆனால் அருண் இந்த முறை அது அவ்வளவு சுலபமில்லை என்று கூறவே சிவா விளக்கம் கேட்டான்.

அருணின் விளக்கத்தை இப்போது காண்போம்:

அருண் பெருமூச்சுடன் தொடர்ந்தார். "சிவா, முன்பு பல முறை வேலை இழப்பு அலைகளால் பாதிக்கப்பட்ட மக்களில் பெரும்பாலானோர் பொருளாதார வளர்ச்சியாலும், வேறு தொழிற்சாலைகளிலும், மற்றும் வேறு திறன்களைப் பெற்று வேறு தொழில் துறைகளிலும் மீண்டும் வேலை பெற்று விட்டனர் என்பது உண்மைதான். அதனால், இந்த முறை நடக்கும் வேலை நீக்கத்தில் பாதிக்கப் பட்டவர்களும் கவலைப்பட வேண்டியதில்லை, இன்னொரு வளர்ச்சி அலை வந்து எந்தத் துறையிலாவது வேலை வாய்ப்புகளைப் படைத்துக் குவிக்கும் என்று முடிவுக்கு வந்துட்டீங்க ..."

சிவா "ஆமாம், நீங்க சொன்னதெல்லாம் பாத்தா அந்த நம்பிக்கை தானே வருது? ஆனா உங்க முகம் போற போக்கைப் பாத்தா நீங்க அப்படி நினைக்கலைன்னு தோணுதே? எனக்கு ஒரே குழப்பமா இருக்கு, தலையே வெடிச்சுடும் போல இருக்கு! நீங்க என்னதான் நினைக்கறீங்க? கொஞ்சம் உடனே விளக்கிடுங்க" என்றான்.

அருணின் முகத்தில் ஒரு கவலையான சிந்தனை படர்ந்தது. "உண்மைதான். கொஞ்சம் குழப்பிட்டேன். முழு விஷயத்தையும் முதலிலேயே சுருக்கமா சொல்லிட்டிருந்திருக்கணும். நான் எல்லாமே மேகம் விலகி பளிச்சின்னு சூரிய ஒளி வீசறாமாதிரி மாதிரி ஆனந்த நிலை திரும்பிடும்னு சொல்ல வரலை. சொல்ல வந்தது என்னன்னா, அந்த முந்தின வேலைநீக்க அலைகளில் பாதிக்கப் பட்டவங்க சுதாரிச்சிக்கிட்டது வாஸ்தவந்தான். இந்த முறையும் அது நடக்க முடியும். நிச்சயமா ஓரளவுக்கு அதே மாதிரி நடக்கும். ஆனா இது கொஞ்சம் வித்தியாசமான நிலைமை, இதிலிருந்து மொத்தமா மீளறது கொஞ்சம் கஷ்டம்னுதான் நினைக்கிறேன். அதுவும் இங்க சிலிகான் வேல்லியில, software துறையில, அமெரிக்காவில மீதி இடங்களை விட, மீதித் துறைகளை விட இன்னும் கஷ்டமா இருந்தாலும் கூட ஆச்சரியப் படறத்துக்கில்லை."

அவர் கூறியதைக் கேட்ட சிவாவுக்குத் திகீரென அடி வயிற்றில் கொள்ளி போட்டது போல் கவலை பற்றிக் கொண்டது. "அப்படின்னா? ஏன் அப்படி சொல்றீங்க? இது வரைக்கும் சிலிகான் வேல்லிதானே பொருளாதார வளர்ச்சிக் காலத்துல வெடிக்கறா மாதிரி வளர்ந்திருக்கு? கடைசியா மூணு நாலு வருஷத்துக்கு முன்னாடி கூட இங்கேதானே மிகப் பெரிய வளர்ச்சியிருந்துச்சு? இந்த முறை மட்டும் என்ன வித்தியாசம்?" எனக் கேட்டான். அருண் விளக்கினார். "அந்த சமீப வளர்ச்சியும், அந்த வளர்ச்சிக்குக் காரணமாயிருந்த மின்வலையுமேதான் இந்த முறை வேலை வாய்ப்பு வளர்ச்சிக்கு எமனாயிருக்கலாம்னு நான் நினைக்கிறேன். பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டு நிறுவனங்கள் மீண்டும் செழித்தாலும், வேலை இழந்தவர்களில் ஒரு கணிசமான பகுதியினருக்குத் தகுதியான வேலை கிடைக்காமலே இருந்துவிடக் கூடும்."

"ஹும் ... ஏன் அப்படி?!"

"ஏனென்றால் இந்த முறை ஏற்பட்டிருக்கும் வித்தியாசங்களான மின் வலையும், பொருளாதார உலக மயமாக்கலும் (economic globalization). முன்பெல்லாம் இருந்ததை விட இப்போது எந்த நிறுவனம் எந்த நாட்டில் தலைமை மையம் (head quarters) கொண்டிருக்கிறது, எங்கிருந்தெல்லாம் மூலப் பொருள் (raw materials) வாங்குகிறது, எங்கு பகுதிப் பொருட்கள் (parts, components) தயாரிக்கப் படுகின்றன, எங்கு இறுதியாக முழுப் பொருள் உற்பத்தியாகிறது, அவை எங்கெல்லாம் விற்கப் படுகின்றன என்று பார்த்தால் பெரிய நிறுவனங்கள் உலக முழுவதும் பரவி விட்டிருப்பது தெரிய வரும்."

"அதனால்?"

"...அதனால், வாணிபம் மற்றும் வேலை பாதுகாப்பு (trade and job protectionism) அவ்வளவு எளிதல்ல. மேலும், உலகப் பொருளாதார விரிவால் நிறுவனங்களின் வளர்ச்சி அமெரிக்காவில் விற்பதை விட உலகத்தில் மற்ற வேகமாக வளரும் ஐக்கிய ஐரோப்பா, சீனா, இந்தியா போன்ற இடங்களில் விற்பதைப் பொறுத்திருக்கிறது. மேலும் உலக வர்த்தக அமைப்பு (World Trade Organization) போன்ற அமைப்புக்கள் protectionism ஓரளவுக்கு மேல் மீற முடியாமல் தடுக்கின்றன. இவையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது கார் உற்பத்தியில் செய்த அளவுக்கு, இந்த அலுவலக வேலைகளை இப்போது பாதுகாக்க முடியாது என்று தோன்றுகிறது."

சிவா தலையாட்டி ஆமோதித்து விட்டு "சரி, மின்வலையினாலன்னு சொன்னீங்களே, அது ஏன்?" என்று கேட்டான்.

அருண் சோகமாகப் புன்னகைத்தார். "தான் பறிச்ச குழில தானே விழறதுன்னு கேள்விப்பட்டிருப்பே இல்லையா?! அப்படித்தான்! மின் வலையினால, ரெண்டு மாதிரி விளைவு வேலை வாய்ப்புக்களை பாதிச்சிருக்கு. முதலாவது, 1999-2000 ஆண்டு காலத்துல டாட்-காம் கொப்பளம் பெரிசா வளர்ந்து பல லட்சக் கணக்கான வேலைகளை உருவாக்கி வேலை இல்லாமையை ரொம்பக் குறைச்சு, இன்னும் ஆயிரக் கணக்குல இந்தியாவிலேந்து IT துறை ஆளுங்களை வரவழைக்க வேண்டிய தேவையை உருவாக்கிச்சு. அந்தக் கொப்பளம் எத்தனை பெரிசாச்சோ, அது வெடிச்சு புஸ்ஸ¤ன்னு இறங்கிட்டதும், அத்தனைக் கத்தனை நிறைய பேரை வேலையிலிருந்து நீக்க வேண்டியதாப் போச்சு. மேலும் அப்போ ஏறின சம்பளங்கள் இன்னும் வெகுவாக குறைக்க முடியாததால் இந்தியா போன்ற நாடுகளின் குறைஞ்ச சம்பள செலவு இன்னும் ரொம்ப ஈர்ப்பாயிடுச்சு! அதுனால வேலைகளை அனுப்பறதுங்கற முடிவு ரொம்ப சுலபமாயிடுச்சு."

சிவா "ஓ! புரியுது. சம்பளம் ஏத்தறது ரொம்ப சுலபம், குறைக்கறது கஷ்டம். அதுனால, வேலைகளையே குறைச்ச சம்பளம் இருக்கற இடத்துக்கு அனுப்பிடறாங்க. அப்படித்தானே?" என்றான்.

அருண் பாராட்டினார். "அப்படியேதான். ரொம்ப சரியா சுருக்குன்னு பாயின்ட்ட புடிச்சிட்டே."

சிவா "சரி, ஆனா மின்வலை ரெண்டு விதமா பாதிக்குதுன்னு சொன்னீங்களே, ரெண்டாவது விதம் என்ன?" என்று வினாவினான்.

அருண் தொடர்ந்தார். "மின்வலை தொடர்பு இருக்கறதுனால, முன்னை விட இன்னும் பலப் பல விதமான வேலைகளை வெளிநாடுகளுக்கு அனுப்ப முடியுது. Voice Over IP முடியறதுனால call-center, tech-support வேலைகளை அனுப்ப முடியுது. ·பார்ம்களை ஸ்கேன் பண்ணி மின்வலை மூலமா அனுப்பறதால claims processing போன்ற வேலைகளையெல்லாம் அனுப்ப முடியுது. Chip design கூட செய்ய முடியுது. simulation-க்காக பெரிய பெரிய கம்ப்யூட்டர் வலைகள் வேணுமானாலும் அதை வெளிநாட்டிலிருந்தே மின்வலை மூலமா remote access வச்சு நடத்த முடியுது. Physical தொடர்பு வேண்டாத எந்த வேலையையும் virtual-ஆக மின்வலையை வச்சு உலகத்தில எங்கிருந்து வேணா செய்ய முடியுது. இன்னும் போகப் போக நிறைய bandwidth, பாதுகாப்பு, மற்றும் தொலை தூர வலை தாமதக் குறைப்பு (wide area network - WAN - latency reduction) நுணுக்கங்களால இது இன்னும் சுலபமா ஆயிடும். அதுனால மின்வலையினால இந்த வேலை ஏற்றுமதி ஆகும் வேகம் குறையாது, போகப் போக இன்னும் அதிகரிக்கும்னு நான் நினைக்கிறேன்."

சிவாவின் கவலை அதிகரித்தது. "ஐயையோ! அப்படின்னா இந்த நிலை தளராது, இன்னும் மோசமா ஆகலாங்கறீங்களா! அப்ப என்னை மாதிரி ஆளுங்களுக்கு என்னதான் வழி?"

அருண் ஒரு நிமிடம் மெளனமாக யோசித்தார். பிறகு ஒரு பெருமூச்சுடன் தனக்குத் தோன்றிய வழியை விவரிக்க ஆரம்பித்தார்.

(தொடரும்)

கதிரவன் எழில்மன்னன்

© TamilOnline.com