சுவர் கடிகாரம் பத்துமுறை ஒலித்தது. அழைப்பு ஊர்தி (Call Taxi) எப்பொழுது வேண்டுமானாலும் வரக்கூடும். இன்னமும் நாற்பத்தைந்து நிமிடங்களுக்குள் நாங்கள் விமானநிலையத்தில் இருக்க வேண்டும். ஆம், இன்றிரவு Lufthansa விமானத்தில் நானும் என் மனைவியும் பாஸ்டன் செல்லுகிறோம் என் மகளின் குடும்பத்தோடு சில மாதங்கள் தங்க. இருபத்து ஆறு மணி நேரப் பிரயாணம். அதனை நினைத்து இப்போதே கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் என் மனைவியைப் பார்த்தேன். ''பாஸ்போர்ட், டாலர்ஸ் எல்லாம் உங்களிடம்தானே இருக்கு?'' என் மனைவி கேட்டாள். ''ஆம்'' இயந்திரத்தனமாக தலையை ஆட்டினேன். 'அண்ணாமலை'யின் அன்றைய இறுதிப் பகுதியில் ராதிகாவும், விஜய் ஆதிராஜும் உரத்த குரலில் விவாதிப்பதைப் பார்த்துக் கொண்டே இருக்கையில் ஆதிராஜ் freeze ஆகித் 'தொடரும்' தோன்றும் போது அழைப்பு ஊர்தி வருவதன் ஒலி கேட்டது. அரை மனதாக எழுந்திருந்து புறப்படத் தயாரானேன்.
எழுந்து என் இரண்டாவது மனைவியை ஆசையோடு பார்த்துக்கொண்டே இருந்தேன். உன் மாங்கல்யத்தின் மங்கள ஓசையிலிருந்து மெட்டி ஒலிவரை எத்தனை சப்தங்களை என் கூடப் பகிர்ந்து கொண்டிருப்பாய். கடந்த சில ஆண்டுகளில் என் வாழ்க்கையின் பெரும்பகுதியை பகிர்ந்து கொண்டவளாயிற்றே நீ. முதலில் நான் உன்னை அலட்சியப்படுத்தியிருக்கலாம். ஆனால் உன் சக்தி முழுவதும் புரிந்து கொண்டபின் எனக்கு நீ அகிலத்தைத் தன்னுள் அடக்கிய அம்பிகையாகவே தெரிகிறாய். அவளும் பெண்தானே என என் மனைவியும் உன்னை ஏற்றுக்கொண்டது எனக்குக் கிடைத்த பெரிய வரம் அல்லவா? என் மனைவியே உன்னை அன்பு மனம் கொண்டு உன்னைப் பன்னீர் புஷ்பமாக ஏற்றுக் கொண்டுவிட்டாளே! என் வாழ்க்கையில் உன்னை இணைத்துக் கொள்ள நீ சம்மதம் கேட்டபோது உன்னைக் குங்குமம் வைத்து என் மனைவியும் வரவேற்றாளே! அன்று உதயமான நம் உறவு இன்றுவரை மலரும் நினைவாகவே என்றும் நிற்கும். என் இரண்டு வாரிசுகளும் அமெரிக்காவில் இருந்தாலும் நான் பெருமையாக ''நாங்கள் மூவர் வீட்டில் இருக்கிறோம். இணைபிரியா கங்கா, யமுனா, சரஸ்வதி போல" என்று அனைவரிடமும் கூறிக் கொண்டிருப்பேனே!
இன்று உன்னை வீட்டிலேயே விட்டுவிட்டு அமெரிக்கா செல்கிறோம். சில மாதங்கள் உன்னைப் பிரிந்து நான் அமெரிக்காவில் வாழ வேண்டுமே? என் மனைவியின் முகத்தைப் பார்த்தேன். அமெரிக்காவில் இருக்கும் குழந்தைகளோடு சில மாதங்கள் இருக்கப் போகிறோம் என்ற மகிழ்ச்சி அவளது முகத்தில் தெரிந்தாலும் அவளிடமும் இப்பிரிவின் சோக உணர்வைக் காண முடிந்தது. ''எப்படித்தான் இவள் இல்லாமல் ஆறு மாதங்கள் இருக்கப்போகிறோமோ எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வந்துவிடவேண்டும்'' என்றாள் கவலை தோய்ந்த முகத்துடன். என் சோகமோ சொல்லில் அடங்காதது.
விமான நிலையத்தில் நுனி நாக்கில் ஆங்கிலம் பேசிக் கொண்டு எங்கள் பயணச்சீட்டை வாங்கி போர்டிங் பாஸ் கொடுத்து செயற்கையாகப் புன்முறுவல் பூத்து ''இனிய பயணத்திற்கு வாழ்த்துக்கள்'' என்றாள் அந்தப் பணிபெண். விமானத்தில் நுழைந்தாலும் அதே செயற்கையான புன்முறுவல் வரவேற்பு. ஏஷியன் வெஜிடேரியன் என்ற பெயரில் ஏதோ சில இலைதழைகளை சாப்பிட்டுக் கொண்டும் மாறி மாறி டயட் கோக்கும் தக்காளி சர்பத்தும் குடித்துக் கொண்டும், காலை நீட்டி, மடக்கி, மூன்றாவது இருக்கையின் மனிதரை அவ்வப்போது தொந்தரவு செய்து நடு வழியில் நின்றும் - ஒரு வழியாக பாஸ்டன் லோகன் விமான நிலையத்தை அடைந்தோம். ஏறத்தாழ நாற்பதாயிரம் அடி உயரத்தில் பறந்து, உலகமே - குறிப்பாக என் சொந்தங்களில் சிலரும் என் அண்டை வீட்டினரும் என் காலடியில் என்று மிதந்து இருந்தாலும் - 'அவளின் பிரிவு' என்ற சோககீதம் மனதில் ஒலித்துக் கொண்டே இருந்தது.
மாப்பிள்ளை ஏர்போர்ட்டில் காத்திருந்தார். நான்கு பெரிய பெரிய பெட்டிகளையும் காரில் ஏற்றி, ஹேண்ட் லக்கேஜ்களையும் இடுக்கிவைத்து, கால்களை மடக்கி, உடலைச் சுருக்கி காரில் ஏறிக்கொண்டோம். மனதில் ஒரு வெற்றிடம் இருந்ததால் இந்தக் கஷ்டம் பெரிதாகப்படவில்லை. 'இருகோடுகள்' தத்துவம் போல! அவளைச் சென்னையில் விட்டுவிட்டு உலகின் எந்த சுவர்க்கத்தில் இருந்தாலும் மகிழ்ச்சி எனக்கு கிடைக்காது போலத்தான் தோன்றியது.
மகளின் வீடு வந்துவிட்டது. காரில் இருந்து இறங்கும் முன் என் பேரன் எங்களை அணைத்துக்கொண்டான். மகளின் முகத்தில் ஒரே ஆனந்தம். பேரனைத் தூக்கி அணைத்து வீட்டிற்குள் நுழையும் போது ''ஆடுகிறன் கண்ணன்'' இசையை ஸ்ரீனிவாஸ் சுகமாக பாடுவது காதில் தேனாக ஒலித்தது.
என்ன உங்கள் இருவருக்கும் சர்ப்ரைஸ்க்காகத்தான் சொல்லாமல் இருந்தோம். சன்டிவி கனெக்ஷன் கொடுத்து ஒரு வாரம் ஆகிறது. உங்கள் சீரியல்கள் எல்லாவற்றையும் விடாது பார்க்கலாம். நேற்று நீங்கள் பிளேனில் இருந்த போது விட்டுப்போன சீரியல் எல்லாவற்றையும் டேப் செய்து வைச்சுருக்கேன். மெதுவாகப் பார்க்கலாம்'' என்றாள் என் மகள். டெய்லி chatல் நாங்கள் இந்த சீரியல்களைத்தான் அலசி வருகிறோம். என மனைவியின் முகத்திலும் ஆனந்த வெள்ளம்.
என் மகளின் இந்த 'தேமதுரத் தமிழ் சொற்களை'க் கேட்டு எனது இரண்டாவது மனைவியைப் பிரியப்போவதில்லை என்ற மகிழ்ச்சியில் உள்ளே நுழைந்தேன். என் மனைவி பின் தொடர!
தி.கி. பார்த்தசாரதி |