அமெரிக்க மண்ணில் பிறந்து வளர்வது, தமிழரின் சிறப்பான கலை வடிவங்களை காக்கவும், கற்றுத்தேர்ந்து மிளிரவும் தடையில்லை என்பதை மீண்டுமொருமுறை தனது அரங்கேற்றத்தின் மூலம் நிரூபித்திருக்கிறார், செல்வி சினேகா பகவன்தாஸ்.
குரு பிரசன்னா கஸ்தூரியினால் நடத்தப் படும் நாட்டியப்பள்ளியில் சேர்ந்தது இவரின் கலையார்வத்திற்கேற்ற தீனியாயிருந்த தென்றால் மிகையாகாது. மென்பொருள் துறையில் தொழில் புரிய அமெரிக்கா வந்து பின் முழுநேர நாட்டிய ஆசிரியரான குருவிடம் ஐந்து வயதிலேயே நடனம் கற்க சேர்ந்தார் சினேகா.
தற்போது 'செல்விட்ஜ்' நடுநிலைப் பள்ளியில் 8-ஆம் வகுப்பை முடித்திருக்கும் இவர் தனது இரண்டரை மணி நேர நாட்டிய அரங் கேற்றத்தை, மிசௌரி மாநில செயின்ட் லூயிஸ் நகரிலுள்ள 'ஆக்கக்' கலை மையத்தில் (Center of Creative Arts) 2006 ஆகஸ்ட் 12ம் நாள் சனிக்கிழமை நிகழ்த்தினார்.
பரதக்கலையில் சிறந்த கலைஞர்களுக் கிணையான அழகிய முகபாவங்கள், கண்ண சைவுகள், துள்ளிக் குதித்தாடும் பாங்கு, சிரித்த முகம், லாவகம், களைப்படையாத உற்சாகப்போக்கு இவற்றின் மூலம் நடனம், மொழி, இசை இவற்றை அறிந்தவர், அறியாதவர் என்ற வேறுபாடின்றி அனைத்துப் பார்வையாளர்களையும் இரண்டரை மணி நேரம் இருக்கையில் ஈடுபாட்டுடன் அமர்ந்து ரசிக்கும்படி செய்தார். பலமுறை பார்வை யாளர்கள் கரவொலி எழுப்பியதும், எழுந்து நின்று கை தட்டியதும், தாளமிட்டு ரசித்ததும் குறிப்பிட வேண்டியவை.
"தாயே யசோதா" பாடலுக்கு யசோதை, கண்ணன், கோபியர் என கண நொடியில் மாறி மாறி நேர்த்தியான முகபாவங்களுடன் சினேகா ஆடியபோதும் கண்ணனாக வாய் திறந்து ஈரேழுலகங்களையும் படமெறி கருவி (Projector) மூலம் காண்பித்து பல்வகை வண்ண விளக்குகளையும், ஒருங்கிணைத்து அளித்தது மெய்சிலிர்க்கவைத்தது. திருவாச கம் மற்றும் ஊத்துக்காடு வேங்கட சுப்பையர் பாடல்கள் சீமா மூர்த்தியின் இனிய குரலில் ஒரு தமிழிசை விருந்தாகவே அமைந்தது. குருவின் நட்டுவாங்கத்துடன், பக்கவாத்தியங் களாக இந்தியாவிலிருந்து வந்த சித்ரா லிங்கத்தின் வீணை, சிகாகோவிருந்து ரவிசங்கர் சுப்ரமணியனின் மிருதங்கம், மஞ்சுளா ராவின் வயலின், ஹூஸ்டனிலிருந்து கார்த்திக் சுப்ரமணியத்தின் புல்லாங்குழல் என கச்சேரி களைகட்டியது.
விடுமுறைக்காலத்தை உல்லாசமாய் அனை வரும் கழிக்கையில், தினமும் நான்கு மணி நேர நடனப் பயிற்சியில் ஈடுபட்டதே சினேகாவின் இந்த வெற்றிக்குக் காரணம். இந்த நடன நிகழ்ச்சியைக் காண சினேகா குடும்பத்தினரின் நண்பர்களும் உறவினர் களும் மிசௌரி தமிழ்ச் சங்க உறுப்பினர்களும் என சுமார் முன்னூறுக்கும் மேற் பட்டோர் திரளாக வந்திருந்து குடும்ப விழாவாகவே இந்த பரத நாட்டிய அரங்கேற்றத் தைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
கடல்கடந்து வந்தாலும் சந்ததிகள் தமிழ்க் கலை, கலாசாரத்தில் சிறக்க வழிவகை செய்த சினேகாவின் பெற்றோர் மென்பொறியாளர் பகவன் தாஸ் மற்றும் நிதி ஆலோசகர் ஹேமலதா இருவரும் இவ்விழா சிறக்க அரும்பாடுபட்டு வெற்றியும் கண்டனர். |