நம்பிக்கை தொடரட்டும்
அன்புள்ள சிநேகிதியே,

நீங்கள் மற்றவர்களைப் புரிந்துக்கொண்டு உறவுகளை எப்படி மேம்படுத்துவது என்பது பற்றி பல அறிவுரைகளை வழங்குகிறீர்கள். என்னுடைய நிலைமை இதற்கு நேர் மாறானது.

வாழ்க்கையில் அன்பைத்தவிர நான் எதையுமே பார்த்ததில்லை. பாசத்தைக் கொட்டி வளர்த்தார்கள் என்னைப் பெற்றவர்கள். மும்பையில் அந்த இரண்டே அறை அபார்ட்மெண்டில் (அப்பா ஒரு அரசாங்க ஊழியர்) அப்படி சந்தோஷமாக வளர்ந்தோம் நானும் என் சகோதரனும்.

திருமணம் புரிந்து அமெரிக்காவுக்கு வந்தேன். என் பெற்றோர்கள் செய்த நல்வினையோ என்னவோ அப்படி ஒரு அருமையான கணவர். ஆனந்தமாகக் குடும்பம் நடத்தினோம், 9 வருட தாம்பத்ய வாழ்க்கை. இரண்டு குழந்தைகள். பெண் 5 வயது; பையனுக்கு 3 வயது. 38 வயதில் ஒரு மாரடைப்பு அவருக்கு ஏற்பட்டது. அறுவை சிகிச்சைக்குப் போனவரின் அழகு முகத்தை உயிரோடு நான் பார்க்கவில்லை.

சிறுவயதில் கணவரை இழந்து, இப்போது ஒரே மகனையும் இழந்த என் மாமியார் ஒரு பக்கம் கதற, விவரம் புரியாமல் என் குழந்தைகள் அழுது கொண்டிருக்க, அவர்களுக்காகவாவது நான் உயிர் வாழ வேண்டும் என்று மனதை நானே தேற்றிக் கொண்டு வாழ்க்கையைத் தொடர்ந்தேன். வேலை பார்க்கும் இடத்திலும் சரி, வெளியிலும் சரி - என்னைச் சுற்றி நல்ல நண்பர்கள். அவர்கள் துணை மனதிலும், உடம்பிலும் தெம்பையும் தைரியத்தையும் கொடுத்தது. பூஜையறையில் மற்ற சுவாமிகளுடன் சேர்ந்து கொண்டு என் கணவரும் பக்க பலமாக இருந்தார்.

சரியாக 7 1/2 வருடங்கள். 2 மாதங்களுக்கு முன்பு இன்னொரு சோதனை. எனக்கு 'cervical cancer' என்று கண்டுபிடிக்கபட்டிருக்கிறது. 'வயிற்றில் கட்டி, ஏதோ சாதாரண ஆபரேஷன்' என்று சொல்லி வைத்திருக்கிறேன். என் மாமியார் துடித்துப் போய்விடுவார். என் குழந்தைகள் அரண்டு போய்விடுவார்கள். ஆகவே அவர்களுக்குத் தெரியாமல் சிகிச்சைக்கு போய்க்கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு யுகமாக இருக்கிறது. அடுத்த தீபாவளிக்கு என் குழந்தைகளுக்கு தாயாக இருப்பேனா என்று தெரியவில்லை. தினமும், இரவில் தனியாக நெஞ்சு வெடித்து போகும் அளவுக்கு அழுகிறேன். என் 2 தோழிகளைத் தவிர்த்து வேறு யாருக்கும் விஷயம் தெரியாது. உங்கள் ஆறுதல் வார்ததையையும், அரவணைப்பும் எனக்குத் தேவை.

அன்புள்ள

உங்கள் இந்தக் கடிதம் படிக்கும் ஒவ்வொரு வாசகரின் மனதும் ஒரு 5 வினாடி துடித்துப் போகும். பிறகு இன்னுமொரு 5 வினாடி உங்களுக்காக நம்மையெல்லாம் ஆளும் அந்த மாபெரும் சக்தியிடம் முறையிட்டு வேண்டிக்கொள்ளும்...

என்னுடைய ஆறுதல் வார்த்தைகளுக்கும் மேல் முகம் தெரியாத, பெயர் தெரியாத ஆயிரம் ஆயிரம் 'தென்றல்' வாசகர்களின் உள்ளங்கள் உங்கள் பக்கம் இருக்கும்.

நீங்கள் உங்கள் நோயின் எந்தப் படியில் இருக்கிறீர்கள் என்று தெரியவில்லை. இருப்பினும், உங்கள் இறுதியை நீங்களே கணிக்காதீர்கள். நல்ல நண்பர்கள், நல்ல கணவர், நல்ல மாமியார் என்று நீங்கள் எழுதும் போது நீங்கள் ஒரு அருமையான, பண்புள்ள அன்பின் அவதாரமாக என் கண்ணுக்கு தெரிகிறீர்கள். இந்தக் கடிதம படிக்கும் தினத்திலிருந்து ஒரு 40 நாட்கள் நான் கீழே குறிப்பிட்டப்படி செய்து பாருங்கள்...

தினமும் காலையில் எழுந்தவுடன் அந்த ஒரு நாளை உங்களுடைய முழுவாழ்க்கையாக நினைத்துக் கொண்டு அந்த நாளைக் கொண்டாடுங்கள்.

வேலைக்கு போனாலும் சரி, உடல் வேதனைக்கு மருத்துவமனைக்குச் செல்ல வேண்டியதாக இருந்தாலும் சரி, அந்தந்தச் செயலை, அந்தந்த நிமிடத்தில் மட்டும் நினைத்து செய்யுங்கள். கடந்த நாளைப் பற்றியோ, அல்லது அடுத்த செயலைப் பற்றியோ சிந்தனைகள் வரவிடாமல் நீங்கள் செய்யும் செயலில் முழுதாக ஈடுபட முயற்சி செய்யுங்கள்.

இரவில் உணவிற்குப் பிறகு உங்கள் குடும்பத்திற்குப் பிடித்த பழமோ/இனிப்போ தினமும் ஒன்றாக ரசித்து ரசித்து சாப்பிடுங்கள்.

இரவில் படுக்க போகும் முன்பு குளிர்ந்த நீரில் முகம் அலம்பி, துடைத்துக்கொண்டு 10-15 நிமிடஙகள் தியானம் செய்யுங்கள். அந்த நேரத்தில் எந்த உணர்ச்சியோ/சிந்தனையோ வந்தால் தடுக்காதீர்கள்.

அந்தந்த நாளில் அந்தந்த நிமிடத்தில் நாம் வாழ முயற்சி செய்யும்போது, மனதில் ஒரு நிம்மதி கிடைக்கும். இந்த நாட்டில் கிடைக்கும் வைத்திய சிகிச்சையும், நல்லவர்களின் பிரார்த்தனையும் கண்டிப்பாக வீண் போகாது. உங்கள் நல்ல குணத்தால், உங்களுக்கு சமூகமே ஒத்துழைப்புக் கொடுக்கும்.

இந்த 7 1/2 வருடமாக உங்களிடம் இருந்த மன உறுதியும், நம்பிக்கையும் தொடரட்டும்...

அடுத்த தீபாவளியின் போது நீங்கள் இந்த வருடம் அடைந்த வேதனையை ஒரு கனவாய் மறந்து, ஆனந்தமாக உங்கள் குடும்பத்துடன் இருக்க என் வாழ்த்துக்களுடன், பிரார்த்தனையையும் சேர்த்துக் கொள்கிறேன்.

அன்புடன்
சித்ரா வைத்தீஸ்வரன்

© TamilOnline.com