முனைவர் அர்ஜுன் அப்பாதுரை, பிரசித்தி பெற்ற கலாச்சார மானுடவியலாளர் (cultural anthropologist), நியூயார்க்கிலுள்ள நியூ ஸ்கூல் பல்கலைக்கழகத்தின் ப்ரொவாஸ்ட் (provost) மற்றும் முதுநிலை உபதலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜனவரி 1, 2004 முதல் அவர் இந்தப் பதவியில் அமர்வார்.
செப்டம்பர் 11ம் நாள் இதனை அறிவித்த பல்கலைக்கழகத் தலைவர் பாப் கெர்ரி "அப்பாதுரை பன்னாட்டு விவகாரம், மானுடவியல், சமூகவியில் மற்றும் அரசியல் விஞ்ஞானத்தில் தேர்ச்சிமிக்க, நன்கறியப்பட்ட மேதை" என வர்ணித்தார்.
இந்த அசாதாரணப் பல்கலைக் கழகத்திற்கு பாப் கெர்ரியுடன் இணைந்து தலைமையேற்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த முனைவர் அப்பாதுரை, உலகமயமாக்கும் பணியில் துடிப்போடு செயல்படும் நகரத்தில் இந்நிறுவனம் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
மும்பையில் ஒரு தமிழ்க் குடும்பத்தில் பிறந்த அப்பாதுரை மும்பை பல்கலைக் கழகம், பிரான்டீய்ஸ் பல்கலைக்கழகம் (இளங்கலை), சிகாகோ பல்கலைக்கழகம் (முதுகலையும், முனைவர்க்கான ஆய்வும்) ஆகியவற்றில் பயின்றார். ·பிரென்ச், ஆங்கிலம், ஹிந்தி, மராத்தி மற்றும் தமிழில் தேர்ச்சி மிக்கவர்.
எண்ணற்ற விருதுகள், பரிசுகள் மற்றும் வெகுமானங்களை வென்றுள்ள இவர் இந்தியா, ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் இருக்கும் பல கல்வி நிறுவனங்களின் சிறப்பு விரிவுரையாளராகவும் இருக்கிறார்.
இந்தியா, ஆப்பிரிக்கா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் விரிவான ஆராய்ச்சிகள் செய்து 9 நூல்கள் (இன்னும் 3 அச்சில்), 80 கட்டுரைகள் ஆகியவற்றை எழுதியுள்ளார். அமெரிக்க கலை மற்றும் அறிவியல் கழகத்தின் உறுப்பினராக இருப்பதோடு, பல துறைசார் அமைப்புக்களிலும் நிர்வாகக் குழு உறுப்பினராகப் பணியாற்றுகிறார்.
அமெரிக்கன்-இந்தியர்களிடையே ஓர் ஒளிவிளக்காகத் திகழும் டாக்டர் அப்பாதுரை அவர்களை வாழ்த்துவதில் தென்றல் பெருமை கொள்கிறது. |