திருவாரூர்-மயிலாடுதுறை மார்க்கத்தில் பூந்தோட்டம் என்னும் இடத்திலிருந்து 1/2 கிலோ மீட்டர் தூரத்திலுள்ளது ஹரிநாகேஸ்வரம். இவ்வூர் சிவாலயத்தில் எழுந்தருளியிருக்கும் பெருமானுக்கு ஸ்ரீஹரிநாகேஸ்வரர் என்பது திருநாமம். இதுபற்றியே இவ்வூரும் ஹரிநாகேஸ்வரம் என்றழைக்கப்பட்டது. அமைதி தவழும் சூழல்தான் தவமேற்கொள்ளத் தகுந்த இடம். அத்தகைய அமைதி நிறைந்தது இவ்வூர். எனவேதான் கலைமகளும் தான் தவம் மேற்கொள்ள இவ்வூரைத் தேர்ந்தெடுத்தாள். அவ்வாறு கலைமகள் நித்ய வாசம் செய்யத் தேர்ந்தெடுத்த காரணத்தால் இது அம்பாள்புரி என்றும் அதுவும் மருவி அம்பாபுரி என்றும் வழங்கப்படலாயிற்று. பின்னொரு காலத்தில் தஞ்சையை ஆண்ட சோழமன்னன் இரண்டாம் இராச இராசன் தன் அரசவைப் புலவரான ஒட்டக்கூத்தரைப் பாராட்டி அம்பாபுரியைப் அவருக்குப் பரிசிலாகக் கொடுத்தான். அன்று முதல் இவ்வூர் கூத்தனின் ஊராகி 'கூத்தனூர்' என்றழைக்கப் படலாயிற்று.
திருமாலின் அவதாரங்களிலேயே இராமாவதாரமும் கிருஷ்ணாவதாரமும் தாம் மிகவும் அதிக அளவில் பேசப்பட்டிருப்பவை. இவ்விரண்டுக்கும் கூத்தனூருக்கும் நெருக்கமான தொடர்புடைய செய்திகள் நிறைய உண்டு. இராமாவதாரத்தில் இராவணன் சீதையை அபகரித்துச் சென்ற செய்தியை இராமனுக்குச் சொன்னவன் ஜடாயு. இந்த ஜடாயுவைத் தன் தந்தையைப் போல் கருதிய காரணம்பற்றி அவன் இறந்தபோது இராமன் அவனுக்கு ஈமக்கடன் செய்கின்றான். அவ்வாறு எள்ளும் நீரும் இறைத்து ஈமக்கடன் செய்த இடம் கூத்தனூருக்கு அருகிலுள்ள திலதைப்பதி என்னும் இடமாகும். திலதை என்பது எள் என்னும் சொல்லைக் குறிக்கும். இராமாயண காலத்தோடு தொடர்புடையது போலவே இராமாயணம் எழுதிய கம்பரோடும் தொடர்புடையது கூத்தனூர். கம்பர் தான் எழுதிய இராமாவதாரத்தை திருவரங்கப் பெருமான் சந்நிதியில் அரங்கேற்ற விரும்பினார். கோயில் நிர்வாகிகள் அனுமதி மறுக்கவே கம்பர் இறையருள் வேண்ட, பெருமாள் அவர் கனவில் தோன்றி "எம் சடகோபனைப் பாடினையோ" என்று வினவியதன் காரணமாக இவரும் "சடகோபர் அந்தாதி" பாடினார். இறைவனும் கோயில் அந்தணர் மற்றும் நிர்வாகிகள் கனவில் தோன்றி, கம்பருக்கு அனுமதி அளிக்குமாறு பணித்தார். நூல் அரங்கேறும் நேரத்தில் கம்பர் குறிப்பிட்ட 'துமி' என்ற சொல் தமிழில் கிடையாது என்று கூறி நிர்வாகிகள் அரங்கேற்றத்திற்குத் தடையிட்டனர். கம்பர் நாமகளைத் துதித்து வேண்ட, நாமகளும் அவருக்கு உதவ முன்வந்தாள். தயிர்கடைந்து கொண்டிருக்கும் இடைச்சியாய்த் தோன்றி, "துமி தெறிக்கும் விலகிப்போ" என்று தன் குழந்தையிடம் கூறுவாள்போல் அவ்வழியே வந்த கோயில் அந்தணர்கள் காதுபடக் கூறினாள். இதைக் கேட்ட அவர்கள் மறுப்பேதும் கூறாமல் கம்பர் நூல் அரங்கேற்றத்தை நிறைவேற்றினர்.
நாமகள் தனக்குதவிய விந்தையை எண்ணி எண்ணிக் கம்பர் பூரித்திருக்க வேண்டும். அந்த நன்றி அவர் இயற்றிய சரஸ்வதி அந்தாதி என்னும் நூலில் காணலாம். "ஆய கலைகள் அறுபத்து நான்கினையும் ஏய உணர்விக்கும் என்னம்மை--தூய உருப்பளிங்கு போல்வாளென் உள்ளத்தில் இருப்பள் இங்குவாராது இடர்" என்று போற்றுகின்றார். கம்பரின் சமகாலப் புலவர் கவிச்சக்ரவர்த்தி ஒட்டக்கூத்தர். மூவேந்தர்களாலும் பாராட்டப்பெற்றவர். அவர்தம் புலமையைக்கண்டு பொறாமை கொண்ட சங்கமர்கள் முதலில் அவரைக் கொல்ல நினைத்தனர். பின் அவரிடம் சென்று ஒரு போட்டி வைத்தனர். அதன்படி அவர் ஒரு பரணி பாடவேண்டும். பாட முடியாதுபோய் விட்டால் அவரைக் கொன்று விடுவதாக நிபந்தனை விதித்தனர். ஒட்டக்கூத்தரும் அதற்கிணங்கி நாமகளைத் துதித்து 'தக்கயாகப் பரணி' என்னும் நூல் பாடினார். தன் நாவில் அமர்ந்து உதவிய நாமகளைத் தம் பரணியில் "ஆற்றங்கரை சொற்கிழத்தி வாழிய" என்று சொல்லித் துதித்துள்ளார். ஆற்றங்கரை என்று இங்கு அவர் குறிப்பிடுவது கூத்தனூரில் ஓடும் 'ஹரிசொல்மாநதி' என்று இவருடைய வாழ்க்கை வரலாறு கூறும் 'கவிச்சக்ரவர்த்தி ஒட்டக்கூத்தர்' என்னும் நூலில் காணப்படும் செய்தி.
இந்த ஆறு இன்று பேச்சு வழக்கில் அரசலாறு என்று மருவி உள்ளது. ஒட்டக்கூத்தர் என்ற பெயர் வந்ததற்கும் ஒரு நிகழ்ச்சி கூறப்படுகிறது. ஆயிரம் செங்குந்தர்களின் தலைகளை வெட்டிப் பின் அவற்றை ஒட்டவைத்ததாகவும் அதனால் வந்த பெயர் என்று கூறுவர். இவ்வாறு ஒட்டுவதற்காக அவர் நாமகளைத் துதித்துப் பாடிய பாடல்கள் 'ஈட்டிஎழுபது' என்று வழங்கப் படுகின்றது. இந்த எழுபது பாடல்களில் ஒவ்வொரு பாடல் ஈற்றிலும் "வாணித்தாயே" என்று முடித்திருப்பார். "கலைவாணி நீயுலகி லிருப்பதுவும் கல்வியுணர் கவிவல்லோரை நிலையாகப் புரப்பதுவும் அவர்நாவில் வாழ்வதுவும் நிசமேயன்றோ சிலைவாண னரவிந்தா யிரம்புயங்கள் துணிந்துமுயர் சீவனுற்றான் தலையாவி கொடித்திடுஞ் செங்குந்தருயிர் பெற்றிடவும் தயைசெய் வாயே" இந்தப்பாடலில் அவரது பெயர்க்காரணத் தொடர்புடைய செய்தி புரிகிறதல்லவா!
சரஸவாணியாக ஆதிசங்கரரின் வாழ்வில் கலைவாணி நிகழ்த்திய அற்புதங்களை அனைவரும் அறிவர். ஏடும் எழுத்தும் அறியாக் காளிதாசன் நாவில் நாமகள் அட்சராப்பியாசம் செய்வித்து சம்பு ராமாயணம் இயற்றிப் புகழ் பெறச்செய்த பெருமையும் உடையவள். ஊமையாக இருந்த குமரகுருபரரைப் பேச வைத்ததுமல்லாமல் பன்மொழிப்புலமை பெறச்செய்திருக்கின்றாள். நாமகள் அருள் பெற்று இவர் பாடிய சகலகலாவல்லி மாலை சரஸ்வதி தேவியைத் துதித்துப் பாடியவை. இது மட்டுமா? காசிக்குச் சென்று மன்னனிடம் வடமொழியில் பேசி மனதைக் குளிரச்செய்து சைவமடம் நிறுவ இடமும் பொருளும் பெற்ற அதிசயம் இலக்கிய உலகம் அறியும். கூத்தனூரில் வாழ்ந்த ஸ்ரீவித்யா உபாசகரும் காஞ்சிப் பெரியவரால் அன்னதானப் பிரபு என்று போற்றப்பட்டவருமான ஸ்ரீ இராமானந்த யதீந்திரரும் இறுதிவரை இவ்வூர் நாமகளை வழிபட்டு வாழ்ந்து இங்கேயே ஸமாதியும் அடைந்திருக்கின்றார்.
கும்பகோணத்தைச் சேர்ந்த சாரங்கபாணி என்பவரது மகன் புருஷோத்தமன் பிறவி ஊமை. கூத்தனூர் பற்றிக்கேள்வியுற்ற சாரங்கபாணி தன் மகனை அங்கு அழைத்துச் சென்று நாள்தோறும் அரசலாற்றில் நீராடச்செய்து சரஸ்வதியைக் குறித்துத் தவம் இயற்றச்செய்தார். இதன் பயனாய்ப் பேச்சாற்றல் பெற்ற அவர் அதன் <நன்றிக் கடனாக இக்கோயிலுக்குத் தன் செலவில் கும்பாபிஷேகம் செய்தார் என்பதற்கு இக்கோயில் கல்வெட்டொன்று சான்று கூறுகிறது. புருஷோத்தமனும் புருஷோத்தம பாரதி என்றழைக்கப்படலானார். பாரதி என்றவுடன் நம்முடைய காலத்தில் வாழ்ந்து மறைந்த சுப்பிரமண்ய பாரதியார் நினைவுக்கு வருகிறார். அவர் பாடிய "வெள்ளைத் தாமரைப் பூவிலிருப்பாள்"என்று தொடங்கும் சரஸ்வதி துதி பிரஸித்தமான பாடல். நாமகள் அருள் நிரம்பப் பெற்ற அவருக்கு எட்டயபுர அவரது 11வது வயதிலேயே சரஸ்வதியின் இன்னொரு பெயரான "பாரதி" என்ற பட்டம் அளித்துக் கௌரவித்தது.
தெய்வங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு வாஹனம் இருப்பது தெரிந்த செய்தி. ஸரஸ்வதிக்கு வாஹனம் அன்னம். லலிதா ஸஹஸ்ரநாமத்தில் கூறப்பட்டுள்ள "பக்த மானஸ ஹம்சிகா" என்பதன் பொருள் அன்னத்தைப் போலவே பக்தர்களின் மனமாகிய குளத்தில் நீந்திக் கொண்டிருப்பவள்என்பது. அன்னத்தின் நிறம் வெண்மை; அது போலவே ஸரஸ்வதியின் ஆடையும் வெண்மை வீற்றிருக்கும் தாமரையும் வெண்மை. அன்னத்தின் குணம் சாத்வீகம்; இறைவியின் குணமும் அதுவே - கருணையின் வடிவம். நீரை விலக்கிப் பாலை அருந்தும் அதிசயம். கலைமகளும் குற்றம் நீக்கி அன்பர்களின் குணங்களை மட்டும் கொள்பவள்.
கலைமகளுக்கென்று அமைந்த ஒரே ஒரு கோயில் தமிழகத்திலுள்ள இந்த கூத்தனூர்க் கோயில் ஒன்றே. தனியாக இராஜ கோபுரம் என்று ஒன்று கிடையாது. பெரிய மதில்களுடன் ஒரே பிரகாரத்துடன் அமைந்துள்ளது இக்கோயில். பலிபீடத்தின் முன்னே சரஸ்வதியை நோக்கி அன்னம் உள்ளது. இந்து சமய அறநிலயத் துறையினரின் கீழ் நிர்வாகம் செய்யப்படுகிறது. கல்விக்கடவுள் என்பதற்கு அடையாளமாகக் கையில் ஏடு தரித்திருக்கின்றாள். கற்றது கைம்மண் அளவு கல்லாதது உலகளவு என்பதால் வயது வேறுபாடின்றி எல்லா வயதினரும் எல்லாக் காலத்தும் வழிபட்டுக் கலைத் திறனை வளர்த்துக் கொள்ளலாம். "அம்பிகையின் அருளுக்கு அகிலத்தில் ஈடில்லை நம்பி நாம் தொழுதால் நலம் நல்கும் நாயகி, உம்பர் பணியும் ஓங்கார தேவி, அம்பாள்புரி வாழும் ஸ்ரீ மஹா ஸரஸ்வதி வெண்தாமரை அமரும் வேதநாயகி கண்குளிரக் கண்டாலும் அடங்காப் பேரழகி கூத்தனூர் கலைமகள் பாதங்களைப் பக்தியுடன் காலமெல்லாம் நினை."
டாக்டர் அலர்மேலு ரிஷி |