கடல் நீர்க்குப் பயன்படாது முத்து (பகுதி- 2)
[சென்ற தவணையில் தலைவனுடன் போகிய தலைவியைத் தேடிப் பாலைவழியே சென்ற செவிலித்தாயிடம் முனிவர் ஒருவர் மலைச்சந்தனமும் கடல்முத்தும் தத்தம் பிறப்பிடத்திற்குப் பயன்படாததைச் சுட்டி அவள் மகளும் அவ்வாறே என்று சொல்லினதைக் கண்டோம். இப்போது மூன்றாவதாக ஒரு உவமையையும் காட்டி உயர்ந்த அறத்தைப் போதிப்பதைக் காண்போம்.]

முனிவர் தொடர்கிறார்:

"ஏழ்புணர் இன்னிசை முரல்பவர்க்கு அல்லதை
யாழுளே பிறப்பினும் யாழ்க்குஅவைதாம் என்செய்யும்?
சூழும்கால் நும்மகள் நுமக்கும்ஆங்கு அனையளே!"

[புணர் = சேர்; முரல் = ஒலியெழுப்பு; முரல்பவர் = ஒலிப்பவர், இசையெழுப்புபவர்; அல்லதை = அல்லது; சூழ் = சிந்தி; கால் = காலம், பொழுது]; அனையள் = அதுபோன்றவள்]

"ஏழ்ஏழாகச் சேரும் (அல்லது, ஏழு நரம்புகள் கூட்டும்) இனிய இசை தம்மை ஒலிப்பவர்க்கு அல்லாமல் யாழுள்ளே பிறந்தாலும் தாம் பிறந்த யாழுக்கு அவை என்ன பயனைச் செய்யும்?
சிந்திக்கும்பொழுது நும் மகளும் நுமக்கு அதுபோன்றவளே! [பயன்படும்போது பிறந்த வீட்டுக்கு அல்லாமல் தன் உள்ளத்தைக் கவர்ந்த தலைவனுக்கே பயனாவாள்]"

மூன்று முறை கேட்டபின்னும் விளங்காதவர் யார்? செவிலித்தாய் தன் மகள் முனிவர் சொன்னதுபோல் தன் தலைவனுக்கே பயன்படுவாள் என்று உணர்கிறாள். ஆயினும் அவளுக்கோ மற்றவருக்கோ "ஆனால் பெற்றோரை மீறிச் செல்வதா? சீராட்டிப் பாராட்டி வளர்த்த பெற்றோருக்குச் சொல்லாமல் கூடச் செல்வதா?" என்று வினா எழலாம் என்றெண்ணி முனிவர் இறுதியாகச் சொல்கிறார்:

"இறந்த கற்பினாட்கு எவ்வம் படரன்மின்!
சிறந்தானை வழிடீஇச் சென்றனள்;
அறம்தலை; பிரியா ஆறும்மற்று அதுவே!"

[இறந்த = மிகுந்த; கற்பினாட்கு - கற்பினாளுக்கு; எவ்வம் = கவலை; படர்= கவலைப்படு; படரன்மின் =கவலைப்படாதீர்; வழி படீஇ = வழிபட்டு; பிரியா = பிரியாத; ஆறு = நெறி, வழி]

"மிகுந்த கற்புடைய அவளுக்குக் கவலைப் படாதீர்கள்! தன் இரண்டு பெற்றோரைவிடவும் சிறந்த தன் தலைவனை வழிபட்டு அவன்பின்னே போனாள்; அவ்வாறு கற்புப் பூண்டு நிகழ்த்தும் அச்செயலே அறத்தில் எல்லாம் தலையாயதாகும்; மற்றும் உயர்ந்த நிலையிலிருந்து பிரியாத வாழ்க்கை வழியும் அதுவே!" என்கிறார். "சிறந்தானை" என்பதற்கு நச்சினார்க்கினியர் (கி.பி 14 -ஆம் நூற்றாண்டு) "இரு முது குரவரிலும் சிறந்த கணவனை" என்றும் "அறம் தலை" என்பதற்கு "இங்ஙனம் கற்புப் பூண்டு நிகழ்த்தும் இவ்வில்லறமே அறங்களில் தலையான அறம்" என்றும் உரைகூறுகிறார்.

இங்கே முனிவர் அந்தத் தலைவியைக் கற்பினாள் என்று சொல்வதுதான் கவனிக்க வேண்டியதாகும். அதாவது தன் மனத்தில் புகுந்த ஒருவனையே கணவனாக வரித்தவள், அவனை அடைவதற்கும் அவனோடு தொடர்ந்து இருப்பதற்கும் இடையில் எந்தத் தடை வந்தாலும் தன்கொள்கையிலிருந்து பிறழாதவள் என்பதே பொருள். கபிலர் பாடிய குறிஞ்சிப்பாட்டு என்னும் சங்கக் கவிதையிலும் தலைவி இரகசியக் காதலில் இருப்பதைத் தெரியாத பெற்றோர் வேற்றொருவனுக்கு மணம்பேசுவதை அறிந்தவுடன் தோழியிடம்

"ஆற்றின் வாரார் ஆயினும் ஆற்ற ஏனை உலகத்தும் இயைவதால் நமக்கு" என்கிறாள்.
"முறைப்படி இப்பிறவியில் என் கணவனாக வாரார் ஆனாலும் ஏனைய பிறவியிலாவது என் கணவனாக இயைவார்

(அதாவது, "நான் உயிரை விட்டு அடுத்த பிறவியிலாவது அவரை அடைவேன்") என்று உறுதியாகச் சொல்கிறாள்.

தமிழர்கள் இருபத்தொரு வள்ளல்களை வரிசைப்படுத்தியுள்ளனர். அவர்களை மூன்று கால கட்டத்தினராகப் பிரித்துள்ளனர். அவர்களில் கடைஎழு வள்ளல்களாகப் பாரி, ஓரி, பேகன் ஆகியோரை நமக்குத் தெரியும். ஆனால் முதல் ஏழு வள்ளல்களில் சிபி, நளன் ஆகியோர் உண்டு. அவர்கள் மிகமிகப் பழங்காலத்தில் வாழ்ந்த தமிழர்கள். நளனைக் காதலித்த தமயந்தியும் அவனைவிட்டுத் தேவர்களில் ஒருவரை மணக்கும் வேண்டுகோளைக் கேட்டு "நஞ்சினை உண்டு சாவேன்; நெருப்பிலே வெந்து போவேன்; நீரிலே மூழ்கிச் சாவேன்; கயிற்றிலே தொங்கி விடுவேன்!" (மகாபாரதம்: நளோபாக்கியானம்: 4:4) என்று சூளுரைக்கிறாள்.

தன் மகள் கற்பு நெறியின்படியே நடந்துள்ளாள்; அதுதான் பெற்றோர்களாகிய தங்களையும் தங்கள் குலத்தையும் உண்மையிலேயே மதிக்கும் செயல் என்று உணர்ந்து பெருமிதமும் அடைகிறாள்.

"ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்"
என்பது பொய்யாமொழி வள்ளுவன் வாக்கன்றோ?

பெரியண்ணன் சந்திரசேகரன்

© TamilOnline.com