ஜூலை 22ம் தேதி, தென் கலிபோர்னிய மக்கள், டாக்டர் மாலினி கிருஷ்ணமூர்த்தியின் மாளவிகா-அக்னிமித்ரா என்ற நாட்டிய நாடகத்தை கண்டு களித்தனர்.
காளிதாஸரின் நாடகத்தை தழுவிய பரத நாட்டிய நாடகம். காளிதாஸர், புகழ் பெற்ற சமஸ்கிருத மொழிப் புலவர். அவர் காளியை தீவிரமாக உபாசித்து, காளியின் மூலமாக விகடத்தையும் ஞானத்தையும் பெற்றவர். காளிதாஸருடைய, 'மாளவிகா-அக்னிமித்ரா', அரண்மனை தாதியாக பணிபுரியும் வேற்று தேசத்து இளவரசியின் மேல் காதல் வசப்படும் அரசனின், அந்தரங்க உணர்வுகளையும் மனத்தோன்றல்களையும் சித்தரிக்கிறது. அரசனுடைய காதல் தொடர்புதான், நாட்டியத்தின் உள்ளோடும் கருத்து. அரண்மனையில் வாழும் ஆண் பெண் இரு பாலாரின் காதல், வெறுப்பு, போட்டி, பொறாமை போன்றவை பார்பவர்களை குதூகலிக்கச் செய்தது. செல்வி அதிதி தாஸ் குப்தா அரசன் அக்னிமித்ராவாகவும் செல்வி அனிஷா மெர்சண்ட் இளவரசி மாளவிகாவாகவும் பாத்திரமேற்றார்கள். செல்வி சரண்யா கலைசெல்வன் மற்றும் செல்வி கரிமா அகர்வால் முறையே அமைச்சராகவும், பகுளவாலிகாவாகவும் தோன்றினார்கள். சிறுவர் முதல் முக்கிய பாத்திரமேற்றவர் வரை அனைவரும் சிறப்பாகச் செய்தனர்.
தில்லானாவை குறிப்பிட்டுச் சொல்லலாம். இசைக்குழுவில் இடம் பெற்ற மைசூர் ஸ்ரீநாத், ஸ்ரீஹரி ரங்கஸ்வாமி, நரஸிம்மமூர்த்தி ரமாமிஸ்ரா மற்றும் ஷங்கர் சுப்பிரமணியம் ஆகியோர் நிகழ்ச்சியை சிறப்புறச் செய்தார்கள்.
அரண்மனை தர்பார், அசோக மரம் போன்ற அரங்க அமைப்புகள் பாராட்டும்படியாக காண்போரை லயிக்கச் செய்த சிறப்பான நாட்டிய நாடக நிகழ்ச்சியாக அமைந்தது. |