ஆந்திர முனகாக்கு வேப்புடு (முருங்கைக்கீரைக் கறி)
மிக்க இரும்பு சத்து உள்ள இது பெண்களுக்கு மிக உகந்ததாகும்.

தேவையான பொருட்கள்

முருங்கைக் கீரை - 1 கட்டு
வெங்காயம் - 1/4
பூண்டு - 1/2 பல்
துவரம் பருப்பு - 2 மேசைக்கரண்டி
மஞ்சள் பொடி - 1 சிட்டிகை (பருப்புக்கு)
கடுகு - 1/4 தேக்கரண்டி
ஜீரகம் - 1/2 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
பெருங்காயம் - சிறிது
வற்றல் மிளகாய் - 3
தேங்காய்த் துருவல் - 4 தேக்கரண்டி (கொப்பரை உபயோகித்தால் சுவை கூடும்)
உப்பு - சுவைக்கேற்ப
வெல்லம் (அ) சர்க்கரை - 1/2 தேக்கரண்டி (தேவையானால்)

செய்முறை

வற்றல் மிளகாய், தேங்காய், பூண்டு இவற்றைத் தண்ணீர் விட்டு கெட்டியாக அரைத்து வைத்துக் கொள்ளவும்

முருங்கைக் கீரையை நன்றாகக் கழுவி உப்புடன் ப்ரெஷர் குக்கரில் தண்ணீர் சேர்க்காமல் அரை வேக்காடாக வேக வைக்கவும். துவரம் பருப்பை, மஞ்சள் பொடி, ஒரு சொட்டு எண்ணை சேர்த்து அரை வேக்காடாக வேக வைத்து எடுக்கவும். (கீரையையும் பருப்பையும் ஒன்றாகவும் வேக வைக்கலாம்).

வாணலியில் எண்ணெய் விட்டுக் கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்துக் கொண்டு, ஜீரகம், பெருங்காயம் இவற்றை வறுத்துக் கொள்ளவும். பின் வெங்காயத்தைச் சேர்த்து வதக்கி, வேகவைத்த கீரையையும், பருப்பையும் சேர்க்கவும். இவை வதங்கும்போது, முன் அரைத்து வைத்திருக்கும் தேங்காய்\மிளகாய் விழுதைப் போட்டு எல்லாம் சேர்ந்து வதங்கும்வரை அடுப்பில் வைத்து எடுக்கவும். (அவசரத்திற்குத் தேங்காயையும் வற்றல் மிளகாயையும் அரைப்பதற்கு பதில் கடையில் கிடைக்கும் தேங்காய்ப் பொடியைச் சேர்க்கலாம்).

முருங்கைக் கீரையின் கசப்பு பிடிக்காதவர்கள், அடுப்பை அணைக்கு முன் வெல்லம் (அ) சர்க்கரை சேர்க்கலாம்.

இதை வெங்காயம், பூண்டு சேர்க்காமலும் செய்யலாம்.

உமா வேங்கடராமன்

© TamilOnline.com