பருப்பு வகைகளும் (புரதம்), பச்சைக் காய்கறிகளும் சேர்ந்த இக்கூட்டு மிகச் சத்தானதாகும்.
தேவையான பொருட்கள்
பூசணிக்காய் - 1 பத்தை கருவேப்பிலை - சிறிது கொத்தமல்லி - சிறிது பச்சை மிளகாய் - 1 (தேவையானால்) பயத்தம் பருப்பு (அ) துவரம் பருப்பு - 1 கிண்ணம் கடலைப் பருப்பு - (தேவையானால் சிறிதளவு) உப்பு - சுவைக்கேற்ப மஞ்சள் பொடி - 1 சிட்டிகை சாம்பார் பொடி - 2 தேக்கரண்டி பெருங்காயம் - சிறிது உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி மிளகு - 3 தேங்காய்த் துருவல் - 3 மேசைக்கரண்டி ஜீரகம் - 1 தேக்கரண்டி அரிசி மாவு - 1/2 தேக்கரண்டி (கூட்டைக் கெட்டிப்படுத்த)
செய்முறை
வறுத்து அரைக்க வேண்டியது: உளுத்தம் பருப்பு, மிளகு வறுத்து இறக்கி வைக்குமுன் தேங்காய்த் துருவல், ஜீரகம் சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டி, எல்லாவற்றையும் நீர் சேர்த்து விழுதாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
பூசணிக்காயை சிறு துண்டுகளாக நறுக்கி, அதைச் சிறிது உப்பு, மஞ்சள் பொடி, சாம்பார் பொடி, பெருங்காயம் சேர்த்து தண்ணீரில் வேக வைக்க வேண்டும். (ப்ரெஷர் குக்கரில் வேக வைக்க வேண்டுமென்றால் மிகக் கொஞ்சமாகத் தண்ணீர் தெளித்து ஒரு சத்தம் வந்தவுடன் இறக்கி வைக்கவும்.
இவ்வாறு செய்யும்போது உப்பு, மஞ்சள் பொடி, சாம்பார் பொடி, பெருங்காயம் இவற்றை முழுவதுமாகப் போட்டு விடலாம்).
இதை வறுத்து அரைத்த சாமான்களுடன் வெந்த பயத்தம் பருப்பு அ. வெந்த துவரம் பருப்பு, சிறிது வெந்த கடலைப் பருப்பும் (மசித்தது) சேர்த்து, மீதமுள்ள உப்பு, மஞ்சள் பொடி, சாம்பார் பொடி, பெருங்காயத்தைப் போட்டு கொதிக்க விடவும். கொஞ்சம் கூட்டு தளர்ந்து இருக்க வேண்டும்.
பருப்புப் போட்டவுடன் கூட்டு தீய்வதற்கு வாய்ப்புள்ளது, அதனால் கிளறி கொதி வந்ததும் இறக்கி விடவும். கருவேப்பிலை, கொத்தமல்லியைக் கூட்டின் மேலே கிள்ளிப் போடலாம். வாசனைக்கு ஒரு பச்சை மிளகாயை நடுவில் பிளந்து கூட்டின்மேல் மிதக்க விடலாம்.
கூட்டு ரொம்ப நீர்க்க இருந்தால், நீரில் சிறிது அரிசி மாவைக் கரைத்து, கூட்டில் சேர்த்து ஒரு கொதி வரும்வரை அடுப்பில் வைத்தால் கூட்டு கெட்டிப்படும். அவசரமாகச் சமைப்பதென்றால், கறிகாயையும் பருப்பையும் சேர்த்தே வேக வைக்கலாம்.
இந்தக் கூட்டுக்கு முட்டைக் கோஸ், பீன்ஸ், காலி·ப்ளவர் போன்ற காய்கறிளையும் பயன்படுத்தலாம்.
உமா வேங்கடராமன் |