நாளைய உலகத்தின் பிரதிநிதிகள்
வருடா வருடம் தீபாவளியின்போது வெடிகள் குறைந்து கொண்டுவருவது போல் தோன்றும். இதைப் பற்றிப் பெரிதாக யோசிக்கவில்லை என்றாலும், பட்டாசுத் தொழிற்சாலையில் சிறுவர்களை வேலைக்கு வைப்பதை எதிர்த்துக் குரல் கொடுத்த பள்ளி மாணவர்கள் பற்றிப் பத்திரிக்கை, தொலைக்காட்சி ஆகியவற்றில் பார்த்ததாக ஞாபகம். புதுடெல்லியில் வசிக்கும் ஒரு நண்பர் எனக்குத் தெரியாத ஒரு செய்தியைச் சொன்னார். அங்கே மாசுபடுதலைப் பற்றிப் பள்ளி மாணவர்கள் கூட நன்கு அறிந்திருக்கிறார்கள். சந்தைகள், மற்றும் பட்டாசுக் கடைகள் அருகே திரளான குழந்தைகள் 'பட்டாசு வாங்காதீர்கள்' போன்ற வாசகங்களுடன் கோஷம் எதுவும் போடாமல் நிற்கிறார்கள். இதனால் டெல்லியில் பட்டாசு வாங்குவது மிகவும் குறைந்திருக்கிறது என்றார்.

பலமுறை எனக்குத் தோன்றியிருக்கிறது, 'எந்த மாதிரி உலகை விட்டுச் செல்கிறோம்' என்ற கேள்வி. எதிர்காலம் இன்றைய குழந்தைகள் கையில்; அவர்களது அறிவுத்திறனும், செயல்பாட்டு வேகமும் நிச்சயம் குறையவில்லை. ஆனால் அவர்களுக்கு நாம் மாசுபடுதல், மத, ஜாதி, இனப் பிரிவினைகள் போன்ற பெரும் இடர்களை மட்டுமே விட்டுச் செல்கிறோம்.

நண்பர் அமித் கன்னாவின் முயற்சிகள் மற்றும் அதற்கான எதிர்வினைகள் நம்பிக்கை அளிக்கின்றன. அவரும் பள்ளிக் குழந்தைகள் அளவில் ஒரு சிறு திட்டத்தை ஆரம்பித்திருக்கிறார் - அடிப்படை "தன் பிள்ளைகளுக்கு பள்ளி Project Work என்றால் எல்லாப் பெற்றோர்களும் செய்வார்கள்". எனவே பள்ளி மாணவர்களுக்கு ஒரு படங்களுடன் கூடிய விளக்கம் (powerpoint presentation). அடிப்படைத் தேவைகளில் ஒன்றான நீர் எப்படிக் கிடைக்கிறது? என்ன பிரச்சினைகள் (சில புள்ளி விபரங்கள் உறைய வைக்கின்றன - 3 வருடங்கள் முன்னால் 100 அடி ஆழத்தில் கிடைத்தது, வருடா வருடம் அதிகரித்து இந்த வருடம் 700 அடி!) ஆகியவற்றை விளக்கிவிட்டு அவரவர் வீட்டுக்கருகே ஆய்வு ஒன்று செய்து சமர்ப்பிக்கச் சொல்லி முடிக்கிறார். இன்னும் பல பள்ளிகள் அவரை அழைத்திருக்கின்றன.

நாளைய உலகத்தின் பிரதிநிதிகள் தயார். இன்றைய உலகத்தின் பாதுகாவலர்களான நாம் ....

கீதா பென்னட் அவர்களது பக்கம் தென்றல் இதழில் பல நாட்களாக வருகின்ற ஒன்று. வேலைப்பளு மற்றும் சில காரணங்களால் அவரது பக்கம் இன்னும் சில இதழ்களுக்கு எழுத இயலாது என்று தெரிவித்திருக்கிறார். இந்த நேரத்தில் இத்தனை நாள் எழுதியதற்கு எங்கள் உளமார்ந்த நன்றியை அவருக்கு தெரிவிக்கிறோம்.

மீண்டும் சந்திப்போம்,
பி. அசோகன்
நவம்பர் 2003

© TamilOnline.com