டொரான்டோவில் இயல் விருது விழா
கனடாவின் தமிழ் இலக்கியத் தோட்டம் ஆண்டுதோறும் நடத்தும் இயல் விருது விழா டொரான்டோ பல்கலைக்கழகத்தின் வில்லியம் டூ அரங்கில் ஜூன் 3, 2007 அன்று நடைபெற்றது. தமிழ் இலக்கியத் தோட்டம் பல வருடங்களாக கனடாவில் இயங்கி வருகிறது. உலகளாவிய ரீதியில் தமிழை வளர்ப்பதும் ஊக்குவிப்பதுமே இதன் நோக்கங்கள். இயல் விருது என்பது பாராட்டுக் கேடயமும், 1500 டாலர் நிதி முடிப்பும் கொண்டது. இந்தியா, இலங்கை, மலேசியா, கனடா, அமெரிக்கா போன்ற ஐந்து நாடுகளைச் சேர்ந்த நடுவர் குழு விருதுக்கு உரியோரைத் தேர்ந்தெடுக்கிறது. இவ்வாண்டுக்கான விருது திரு. ஏ.சீ. தாசீசியசுக்கு இந்த விருது வழங்கப்பட்டது. இவர் சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும், சிறந்த நாடகத்துக்கான ஜனாதிபதி விருதையும் இலங்கையில் பெற்றவர். லண்டனில் பி.பி.சி.க்காக பத்து ஆண்டுகளுக்கு மேலாகப் பணிபுரிந்த சமயத்தில் ஐந்து மாதப் பயணத் திட்டத்தில் தமிழ் நாட்டுக்குச் சென்று அங்கே பல பகுதிகளிலும் பயிற்சிப் பட்டறை நடாத்தி, நாடக உலகில் விழிப்புணர்வையும், புதிய பாதையையும் ஏற்படுத்தியவர். சுவிட்சர் லாந்தில் இருந்து கிடைத்த அழைப்பின் பேரில் அங்கே சென்று சலாமி என்ற நாடகத்தை தமிழ், ஜெர்மன், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் உருவாக்கி, மேடையேற்றிச் சரித்திரம் படைத்தவர். ஜெனீவாவில் அமைந்திருக்கும் ஐக்கிய நாடுகள் தலைமை யகத்தில் நீதியான சமாதானத்துக்காகவும், மக்களாட்சிக்காகவும் குரல் கொடுக்கும் திட்டமிடல் குழுவில் பணியாற்றிக் கொண்டு இன்று கலைத்துறையில் தொடர்ந்து சேவை செய்கிறார்.

தமிழ் நாடகக் கலையை உலக மட்டத்துக்கு உயர்த்தி, நாடகத்துக்கும், தமிழுக்கும் புகழ் சேர்த்திருக்கும் தாசீசியஸ் அவர்களுக்கு இந்த விருது கிடைப்பது பொருத்தமானதே. இது தவிர தமிழ் இலக்கியத் தோட்டத்தின் வருடாந்தர விருது விழாவில் விசேஷப் பரிசுகளும் வழங்கப்பட்டன. அவை:

ரேவதி, அபுனைவு இலக்கியம், 2006 ('உணர்வும் உருவமும்' நூலுக்காக)

பதிப்பகம் அடையாளமும் சங்கமமும் இணைந்து, ஜோ டி குருஸ் எழுதிய புனைவு இலக்கியம், 2006 ('ஆழி சூழ் உலகு' நாவல்)

தமிழினி பதிப்பகம், உருத்திரமூர்த்தி சேரன், கவிதை, 2006 ('மீண்டும் கடலுக்கு' நூலுக்காக)

காலச்சுவடு பதிப்பகம், முனைவர் கி. ஸ்ரீனிவாஸன், தமிழ் தகவல் தொழில்நுட்பம், 2006

இந்த வருடத்தில் புதிதாக மேற்சொன்ன தமிழ் தகவல் தொழில்நுட்ப சாதனைக்காக ஸ்ரீனிவாசனுக்கு சுந்தரராமசாமி அவர்கள் நினைவாகப் பரிசு வழங்கப்பட்டது.

ஸ்ரீனிவாசன் கனடாவின் வாட்டர்லூ பல்கலைக்கழகத்தில் மின்னணுவியல் ஆராய்ச்சிக்காக முனைவர் பட்டம் பெற்றார். இவர் இந்திய மொழிகளிலேயே முதலாவதான தமிழ் எழுத்துருவை சி.பி.எம். 80 இயக்கு தளத்துக்காக வடிவமைத்தார். தொடர்ந்து மைக்ரோசா·ப்ட் டாஸ் இயக்குதளத்துக்காக மீண்டும் இந்திய மொழிகளில் முதலாவதான ட்ரூடைப் எழுத்துருவையும், ரோமன் விசைப்பலகை வழியே தமிழை உள்ளீடு செய்யும் ஆதமி என்ற நிரலியையும் உருவாக்கினார். அவர் வடிவமைத்த முன்னோடி ஆங்கிலவழி தமிழ் உள்ளீட்டு முறை இன்றளவும் இணையத் தகவல் பரிமாற்றத்துக்குப் பயன்படுகிறது. ஸ்ரீநிவாசன் நவீன கணினிகளுக்கான தமிழ் உள்ளீட்டு நிரலிகளைத் தொடர்ந்து உருவாக்கி வருகிறார். பரந்துபட்ட சமூகப் பயன் பாட்டுக்கென அவருடைய படைப்புகளைத் தொடர்ந்து இலவசமாகவே அளித்து வருகிறார். தமிழ் எழுத்துத் தரக்குறியீடு தமிழ் உள்ளீட்டு வழிமுறைகள் குறித்த அவருடைய ஆய்வுக்கட்டுரைகளைத் தமிழ் இணைய மாநாடுகள் வழியே பங்களித்திருக்கிறார்.

அ. முத்துலிங்கம்,
கனடா

© TamilOnline.com