பாலம் - தமிழ்ப் பலகை மாநாடு - 2007
கலிஃபோர்னியாவில் இருக்கும் பெர்க்கலி பல்கலைக் கழகத்தில் இயங்கிவரும் தமிழ்த்துறை ஆண்டுதோறும் தமிழ் மாநாடு ஒன்றை நடத்தி வருகிறது. பெர்க்கிலி பல்கலைக் கழகத் தமிழ்ப் பீடத்தின் மாநாடு இந்த ஆண்டு 'பாலம்' என்ற தலைப்பில், ஏப்ரல் 20 முதல் 22 வரை 3 நாட்கள் நடைபெற்றது. இம்மாநாட்டில் பல அமெரிக்கப் பல்கலைக் கழகப் பேராசிரியர்கள், முனைவர் (PhD) ஆய்வு மாணவர்கள் கலந்து கொண்டு தமிழில் இலக்கியம், தமிழர் பண்பாடு, வழக்கு போன்றவற்றை ஆய்ந்து கருத்துரை வழங்கினார்கள்.

பாலம் என்ற சொல்லின் பலவகைக் கருத்து நுட்பங்களும் அங்கு தரப்பெற்ற கருத்துரை களில் வெளியாயின. ஆழ்வார்களின் பாசுரங்கள், மலையாளம், தமிழ் மற்றும் சமஸ்கிருத இலக்கியங்களில் எவ்விதம் கருத்துகள் பாலமாக அமைகின்றன என்பது ஒருவிதம். சங்ககாலக் கருத்துக்கள், குறிஞ்சி மலர், காக்கும் தலைமகன், ஆண்டாள் என்ற தலைவி போன்ற இலக்கியக் கருத்துக்களைப் பாலமாக வைத்து இன்றைய அரசியல் வாதிகள் மக்கள் மனதில் இடம் பிடிக்கும் உத்திகளைக் காட்டுவது மற்றுமொரு கண்ணோட்டம். காலத்தின் கண்ணாடியாக இருந்து தில்லானா மோகனாம்பாள் என்கிற படைப்பு எப்படி இன்றைய பெண்களுக்கு வழிகாட்டும் பாலம் என்று ஒரு படைப்பு. மேலும், தொல்காப்பியர் போன்ற இலக்கண நூலாசிரியர்கள் பற்றிய கருத்துப் பரிமாறல்கள் போன்றவற்றுடன் மிகச் சிறப்பாக நடந்தேறியது தமிழ் மாநாடு. முதல் நாள் மாலை மாணவர்களின் ஆய்வுக் கட்டுரைகள் வழங்கப் பட்டன. 'தமிழ்ப் பாடல்களும், பண்பாடும்' என்ற தலைப்பில் கருத்துப் பரிமாற்றம் நடைபெற்றது. கவிதைகளின் மொழிபெயர்ப்பு, ஆண்டாளின் வைணவ ஆர்வம், சங்ககாலப் புலவர்களின் ஐங்குறுனூறு, அகநானூறு, புறநானூறு முதலியவற்றிலிருந்து மொழி பெயர்ப்புகள் போன்றவை இந்தக் கருத்துரையாடலில் இடம்பெற்றன.

மாநாட்டின் அடுத்த பகுதியில் தென்னிந்தி யாவின், 19ஆம் நூற்றாண்டுப் புலவர்கள்¢ன் தொண்டுகள் பற்றி உரையாற்றப் பட்டது. பேராசிரியர் சுமதி ராமசுவாமி அவர்கள் பாரதியாரின் தமிழ்நாட்டுப் பற்று பற்றியும், பெர்க்கிலி ஆய்வு மாணவி ஜெனி·பர் கிளேய்ர் தொல்காப்பியம் பற்றியும் பேசினார்கள். மாநாட்டில், கட்டுரைகள் வாசிக்கப் பட்டதுடன், பவர்பாயிண்ட் உதவியுடன் பல வரைபடங்களும், புகைப் படங்களும் காட்டப் பட்டன. தில்லானா மோகனாம்பாள் பற்றிய கட்டுரைக்கு முன்பு, பலவிதமான மல்லாரிகளை ஒலி நாடாவில் போட்டுக்காட்டி அதன் நுணுக்கங்களைப் பற்றி ஒரு முன்னுரையோடு ஆரம்பித்தது சிறப்பாகும். சத்திரக் கட்டடக் கலை பற்றிப் பேசியவர், தமிழ் நாட்டில் இருக்கும் பல்வேறு சத்திரங்களை பல்வேறு காலக் கட்டங்களில் எப்படி வடிவமைத்தார்கள் என்பதைப் படங்கள் காண்பித்து விவரித்தார். புதுக் கோட்டை மற்றும் திருச்சி மாவட்டங்களில் சத்திரங்களுக்கு நடுவில் வாழ்ந்த எனக்கும் கூட, பல அரிய நுணுக்கங்களை விளக்குவதாக அது இருந்தது. போற்றத் தக்க இம்மாநாட்டை ஆண்டுதோறும் திறம்பட நடத்திவரும் பேரா. ஜார்ஜ் ஹார்ட், திருமதி கெளசல்யா ஹார்ட் ஆகியோரைப் பாராட்டித்தான் ஆகவேண்டும்.

பாகீரதி சேஷப்பன்

© TamilOnline.com