புஷ்பாஞ்சலியின் பதினோராம் ஆண்டு விழா
ஏப்ரல் 29, 2007 அன்று, சான் ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதியில் கலைப்பணி புரிந்து வரும் புஷ்பாஞ்சலி நடனக் கழகம் தனது பதினோராம் ஆண்டு நிறைவு விழாவைக் கப்பர்லி அரங்கில் கொண்டாடியது. மழலைச் சிறார் முதல் பல ஆண்டுகள் கற்றுத் தேர்ந்தோர் வரை சுமார் அறுபது பேர் இந்த நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.

குரு மீனா லோகன் அவர்களின் இயக்கத்தில் நிகழ்ச்சி கண்களுக்கும், செவிக்கும் நல்விருந்து ஆனது. ஜயந்தி உமேஷ் (குரலிசை), ரவீந்திர பாரதி, ஸ்ரீதரன் (மிருதங்கம்), சுஷீல் நரசிம்மன் (வயலின்), குரு மீனா (நட்டுவாங்கம்) ஆகியோர் நிகழ்ச்சிக்குத் தனிப் பரிமாணம் அளித்தனர். திருப்பாவையில் தொடங்கி, அலாரிப்பு, ஜதிஸ்வரம், வர்ணம், தில்லானா ஆகிய மரபுவழி நடனங்களோடு பல பாடல்கள் மேடையில் உயிர் பெற்றன. கடினமான நடன அசைவு களையும் அடவுகளையும் முத்திரைகளையும் சேர்த்து குரு மீனா அமைத்திருந்த நடனக் கோர்வைகள் மனதைக் கவர்ந்தன. அவற்றில், 'ஆனந்த நடமிடும்', ஜதிஸ்வரம், வர்ணம் ஆகியவற்றின் தரம் குறிப்பிடும்படி இருந்தது. குரு மீனா அவர்களே நாட்டியமாடிய 'கிருஷ்ணா நீ பேகனே' நடனம் தாய்ப் பாசத்தின் பல்வேறு நுண் உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தி மனதை நெகிழ்வித்தது.

பொதுவாகவே சிறுமியர் காட்டுகின்ற அளவுக்கு பரதக் கலையில் சிறுவர்களுக்கு ஆர்வம் இருப்பதில்லை. அப்படியே இருந் தாலும், போகப்போக ஈடுபாடு குறைந்து விடுகிறது. இந்நிலையை மாற்றப் புது வழிகள் தேவை. சுவையான கதைகளையும், காலத்துக்கு ஏற்ற நாட்டிய நாடகங்களையும் மேடையேற்றி, மக்கள்முன் படைக்கும்போது கிடைக்கின்ற பாராட்டும், அங்கீகாரமும் இளையோரின் ஆர்வத்தை வளர்க்கும். இப்பணியில் புஷ்பாஞ்சலி போன்ற கலைப்பயிற்சி நிறுவனங்களின் பங்கு மிகவும் முக்கியமானது.

மு.ச. கிருட்டினன்

© TamilOnline.com