சான்ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வெற்றிகரமாக நடந்து வரும் 'இட்ஸ் டி·ப்' என்ற பண்பலை (FM) வானொலி நிகழ்ச்சியின் 100வது ஒலிபரப்பைக் கொண்டாடவும், KZSU வானொலிக்கு நிதி திரட்டும் முயற்சியாகவும் மே 6, 2007 அன்று காம்பெல் நகர சமுதாயக் கூடத்தில் 'சங்கமம்' என்ற நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தன்னார்வ முயற்சியாக இந்த ஒலிபரப்பை நடத்தும் ஸ்ரீகாந்த் அவர்களும் வானொலி நேயர்களும் இணைந்து இந்த சங்கமத்தை நடத்தினர்.
நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் வேணு சுப்ரமணியன் வரவேற்புரை வழங்கினார். முதலில் கீர்த்தனா ஸ்ரீநிவாசாவின் கடவுள் வாழ்த்துப் பாடலுடன் நிகழ்ச்சி தொடங்கியது. வளைகுடாப் பகுதியின் பிரபல இசைக் கலைஞரான ஆஷா ரமேஷ் மற்றும் குழுவினரின் கர்நாடக இசைப் பாடல்கள் அடுத்து வந்தன. அவருக்கு மஹாதேவன் (மிருதங்கம்), நாகராஜ் மாண்டியா (வயலின்) பக்கம் வாசித்தனர். அடுத்து, ஹிந்துஸ்தானி இசையை சோனாலி பட்டாச்சார்யா, ரவி, ரேச்சல் குழுவினர் வழங்கினர். தொடர்ந்து பவித்ரா முகுந்தன் வழங்கிய பரத நாட்டியமும், ஹிமாபிந்து செல்லா குழுவினரின் குச்சுப்புடி நடனம் அரங்கேறியது. ஸ்ரீ£காந்த் ஸ்ரீநிவாசா தன்னுடன் இணைந்து நிகழ்ச்சிகளை வழங்கிய தொகுப்பாளர்கள் அனைவரையும் மேடைக்கு அழைத்து கவுரவித்தார்.
நிகழ்ச்சியின் தலைமை விருந்தினரும், சிறப்புப் பேச்சாளருமான திருமதி அனு நடராஜன் சிறப்புரையாற்றினார். ·ப்ரீமாண்ட் நகரசபை உறுப்பினரான அனு நடராஜன் ஏன் இட்ஸ் டி·பரெண்ட் வானொலி சிறப்பானது என்பதற்கான பத்து காரணங் களை அடுக்கிய விதம் நேர்த்தியாக இருந்தது.
நிகழ்ச்சியின் இரண்டாவது பகுதியில் வளைகுடாப் பகுதியின் பல்வேறு நடனப் பள்ளிகளின் சிறுவர், சிறுமியர் கலந்து கொண்ட கலைநிகழ்ச்சிகள் வழங்கப்பட்டன. இடையில் சோனியா சூரி அவர்களின் இயக்கத்தில், இந்தியப் பாரம்பரியப் பட்டாடைகளை மகளிர் அணிந்து மேடையில் வண்ணமயமாக உலா வந்தனர். நல்லி சில்க்ஸின் ஆடைகளை அணிந்து மகளிரும் சிறுவர்களும் மேடையில் தோன்றியது பட்டாடைகளின் வானவில் போல் ஜொலித்தது. நிகழ்ச்சியின் இறுதிப் பகுதியில் வேணு சுப்ரமணியம் தொகுத்தளித்த வினாடி வினா நிகழ்ச்சி நடைபெற்றது.
நுழைவுச் சீட்டு விற்பனை மூலமாக பெறப்பட்டதில், செலவுகள் போக, $1500 தீனா நிறுவனத்துக்கும், $500 KZSU வானொலி நிலையத்துக்கும் பிரித்து வழங்கப்பட்டது. மேலதிக விபரங்களைக் காண: www.itsdiff.com
திருமலை ராஜன் |