ஹூஸ்டன் தமிழ்ப்பள்ளி ஆண்டுவிழா
மே 12, 2007 அன்று ஹூஸ்டன் தமிழ்ப் பள்ளியின் ஆறாம் ஆண்டுவிழா மீனாட்சி திருக்கோயில் கல்யாண மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. இப்பள்ளியை ஹூஸ்டன் பாரதி கலை மன்றம் நடத்தி வருகிறது. மாணவ மாணவியரின் தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா தொடங்கியது. பள்ளி ஒருங்கிணைப்பாளர் இரா. கோபால கிருஷ்ணன் வரவேற்புரை வழங்கினார். விழாவில் சுமார் 100 குழந்தைகள் பங்குபெற்ற பல்வேறு கலைநிகழ்ச்சிகள் இடம்பெற்றன. பாட்டு, நகைச்சுவை, நடனம், நாடகம் என முத்தமிழ் விருந்து படைத்தனர். 'அ.வி. டி.வி' என்னும் கற்பனை நிகழ்ச்சியில் செய்திகள், துணுக்குகள், பாடல், விளம்பரம் என முழு நகைச்சுவையுடன் இரு மாணவர்கள் தொகுத்து வழங்கினர். பல்வேறு திறமைகளை வெளிக்கொணர்ந்த 'அசத்தப்போவது யாரு', சென்னைத்தமிழ், மதுரைத்தமிழ், கோவைத் தமிழ் என பலவகைத் தமிழ் துள்ளி விளையாடிய 'இம்சை அரசிகள்' என்னும் நாடகம், 1330 குறட்பாக்களையும் எவ் வரிசையிலும் ஒப்பிக்கும் திறன் படைத்த ஆஸ்டின் நகரைச் சேர்ந்த மாணவி காவியா வழங்கிய திருக்குறள் பற்றிய உரை ஆகிய முத்தான நிகழ்ச்சிகளுடன் விழா களை கட்டியது.

நிகழ்ச்சியின் இடையே அடுத்த ஆண்டின் ஒருங்கிணைப்பாளர் தமிழ் கணேசன், பாரதி கலை மன்றத் தலைவி பத்மினி ரெங்கநாதன் இருவரும் தமிழ்ப்பள்ளியின் எதிர்காலத் திட்டங்கள் குறித்து உரையாற்றினர். பத்மினி தமது உரையில் ஹூஸ்டன் பொதுநூலகம் ஏராளமான தமிழ் நூல்களை வாங்கி வைக்க ஒப்புக்கொண்டிருப்பதாகக் கூறினார். சிறப்பு விருந்தினர்களாக முனைவர் இளங்கோவனும் அவரது துணைவியார் முனைவர் சரோஜா வும் சிகாகோவிலிருந்து வந்திருந்தனர். இளங்கோவன் தனது உரையில், திருக் குறளை மனப்பாடம் செய்வதோடல்லாமல், வாழ்க்கையிலும் பின்பற்ற வேண்டும் என்று குறிப்பிட்டு, சில குழந்தைகளை மேடைக்கு அழைத்து உறுதிமொழி எடுத்துக்கொள்ளச் செய்தார். பின்னர் போட்டியில் வெற்றிபெற்ற குழந்தைகளுக்கு சரோஜா அவர்கள் பரிசுகள் வழங்கினார். நன்றி உரையுடன் விழா இனிதே நிறைவுற்றது.

கரு. மாணிக்கவாசகம்,
ஹூஸ்டன்

© TamilOnline.com