தரங் இசைப் பள்ளி ஆண்டுவிழா
மே 20, 2007 அன்று அட்லாண்டாவிலுள்ள தரங் இசை மற்றும் கலைப் பள்ளியின் (Tarang School of Music & Arts) இரண்டாவது ஆண்டு விழா, வின்ட்வார்ட் பிக் கிரீக் சர்ச் வளாகத்தில் நடைபெற்றது. தரங் பள்ளியை நடத்தி வரும் கோபி மற்றும் இயக்குநர் சுதா நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர். அமெரிக்க தேசிய கீதத்தில் தொடங்கி, இந்திய தேசியகீதத்துடன் நிறைவுற்ற இந்நிகழ்ச்சியில் வாத்திய இசையும், பல மொழிகளில் மெல்லிசைப் பாடல்களும் விருந்தாக அமைந்தன.

தரங் பள்ளி மாணவர்கள் கர்நாடக சங்கீதத்தில் குரலிசை மற்றும் வாத்திய இசை வழங்கினர். நிகழ்ச்சியின் இடையில் மிமிக்ரி செய்த ஓம்முருகன் தன் பல குரல் திறமையினால் ரஜினி, கமல், விஜய் மற்றும் அஜீத் போன்றோரைப் போலப் பேசி மகிழ்வித்தார். இந்தியாவில் ஐ.ஐ.டி.யில் தேர்ச்சி பெற்று, ஜார்ஜியா மாநிலப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும் சுபாஷ் ராஸ்தான் அவர்கள் சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். அவரது சிறப்புரையில், இந்தியாவின் இசைப் பாரம்பரியத்தை வளர்க்கும் சிறந்ததொரு சேவையைத் தரங் போன்ற இசைப் பள்ளிகள் செய்து வருகின்றன என்று குறிப்பிட்டார்.

பாம்பே படத்திலிருந்து 'உயிரே' என்ற பாடலை மிக உருக்கமாகப் பாடினார்கள். பாடல்களின் பின்னணியில், கிடார் மற்றும் கீபோர்டு கற்றுத்தரும் ஜோஸ் தாமஸ் அவர்களின் திறமை வெளிப்பட்டது. கர்நாடக சங்கீதம் கற்றுத்தரும் மீனா நந்தகுமார் குரலில் குரு படத்தின் 'பர்சோ ரே' என்ற இந்திப் பாடல் ஒலித்த போது கைதட்டல் ஓசையில் அரங்கம் அதிர்ந்தது.

நிகழ்ச்சியின் இறுதியில் சுபாஷ் ராஸ்தான் அவர்கள் பள்ளியைச் சேர்ந்த சுமார் 35 மாணவ, மாணவியருக்கும் ஆசிரியர்களுக்கும் கேடயம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்.

© TamilOnline.com