சல்மாவுடன் ஒரு சந்திப்பு
வளைகுடாப் பகுதிக்கு வருகை தந்திருந்த கவிஞர் சல்மா அவர்களுடன் ஒரு மே 23, 2007 அன்று இலக்கிய சந்திப்பு ஒன்று சிவா சேஷப்பன், பாகீரதி சேஷப்பன் அவர்கள் இல்லத்தில் நடைபெற்றது. கவிஞர் சல்மா, பன்முக ஆளுமை படைத்த ஒரு இலக்கியவாதி. 13 வயதில் இருந்தே கவிதை எழுத ஆரம்பித்த சல்மா, தனது கவிதைகளுக்காக கதா விருது, அமுதன் அடிகள் விருது உட்படப் பல விருதுகளையும், பரிசுகளையும் பெற்றுள்ளார். இவரது கவிதைகள் உயிர்மை, காலச்சுவடு ஆகிய பத்திரிகைகளில் தொடர்ந்து வெளிவருகின்றன. இவரது முதல் நாவலான 'இரண்டாம் ஜாமங்களின் கதை' சமீபத்தில் வெளியாகி பெருத்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இது லஷ்மி ஹோம்ஸ்ட்ராம் அவர்களால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப் பட்டு வருகிறது.

எழுத்தாளர் மனுபாரதி கவிஞர் சல்மாவை அறிமுகப் படுத்தினார். தொடர்ந்து சல்மா தனது 'ஒரு மாலையும் இன்னொரு மாலையும்' என்ற தொகுப்பில் இருந்து கவிதைகளை வாசித்தார். பின்னர் தனது நாவலில் இருந்து சில பக்கங்களையும் வாசித்தார். தன்னை ஒரு இஸ்லாமியப் பெண் கவிஞராக அடையாளப்படுத்திக் கொள்ள விரும்பாமல் ஜாதி மத வேறுபாடுகளைக் கடந்து அனைத்துப் பெண்களின் அனுபவங்களை, பிரச்னைகளை எழுதும் பெண்ணியக் கவிஞராக அடையாளப் படுத்திக் கொள்ளவே விரும்புவதாகக் கூறினார். பெண்கள் தங்கள் சிந்தனையை ஆண்களிடமிருந்து இரவல் பெறாமல் சுயசிந்தனையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறார். அவர் வாசித்த கவிதைகள் பெரும்பாலும் ஒடுங்கிய நிலையில் உள்ள பெண்களின் தனிமை, வலிகள், ஆசாபாசங்களை வெளிப்படுத்துபவையாக இருந்தன.

பின்னர், கலந்து கொண்டோர் அவரிடம் பல கேள்விகளை எழுப்பினர். கடுமையான மதிப்பீடுகள் கொண்ட சமூகத்தில் ஒரு கவிஞராகச் செயல் படுவதில் உள்ள சிரமங்கள், எதிர்ப்புகள், நம்பிக்கைகள், அவரது படைப்பின் சூழ்நிலைகள், அவரது பொதுப் பணிகள் போன்ற பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார். அவரது பிறந்த நாள் கொண்டாடப்பட்டு, இனிய இரவு உணவுக்குப் பின் நிகழ்ச்சி நிறைவடைந்தது.

திருமலை ராஜன்

© TamilOnline.com