2007 மே 26-28 தேதிகளில் சிகாகோவில் தியாகராஜ ஆராதனை மிகச் சிறப்பாக நடந்தேறியது. லெமாண்ட் கோவிலில் நடந்த இந்த விழா சிகாகோ தியாகராஜ உற்சவத்தின் 31வது ஆண்டு விழாவாகும். இந்த மூன்று நாட்களில் ஆறு மிகச் சிறந்த கச்சேரிகள் உட்பட 14 நிகழ்ச்சிகள் நடந்தேறின.
முதல்நாள் உற்சவத்தில் விஷ்ணு சஹஸ்ர நாமம் மற்றும் பஞ்சரத்ன கீர்த்தனைகள் அமர்க்களப்பட்டன. 200 குழந்தைகளுடன் பெரியவர்களும் இந்தியாவிலிருந்து வந்திருந்த விற்பன்னர்களுடன் சேர்ந்து பாடி, இவ்வளவு திறமை இந்த ஊரில் இருக்கிறதா என்று ஆச்சரியப்பட வைத்தார்கள். அன்று இரவு நடந்த பார்வதி ரவி கண்டசாலாவின் பரதநாட்டியம் கண்களுக்கு விருந்து. மறுநாள் காலையில் சங்கீத கலாநிதி டி.என். சேஷகோபாலனின் ஹரிகதை கேட்டோரைப் பரவசப்படுத்தியது. என். ரமணியின் புல்லாங்குழல் கச்சேரியும், உன்னி கிருஷ்ணனின் சங்கீதமும் முதல்தரம். கடைசி நாள் உற்சவத்தில் கணேஷ், குமேரஷ் வயலின் விருந்தும், சஷாங்க் மற்றும் அபயங்கர் இருவரும் சேர்ந்து நடத்திய ஜுகல்பந்தியும் அருமை.
இந்த விழாவுக்காக வெளியிடப்பட்ட 'தியாகராஜ விஜயம்', கதை, கட்டுரை, சித்திரங்களுடன் சிறந்து விளங்கியது. இந்த ஆண்டின் நிகழ்ச்சிகளை 'சேத்துலாரா' என்ற பைரவி ராகத்தில் பாடித் துவங்கி வைத்த வித்வான் என். ரமணியும், மிருதங்க சக்ரவர்த்தி ஸ்ரீமுஷ்ணம் ராஜாராவின் ஈடுபாடும், சஷாங்க் மற்றும் உன்னி கிருஷ்ணனின் அபார ஸ்வர ஞானமும் வந்திருந்தோரை வியப்பில் ஆழ்த்தின. ஒவ்வொரு நாளும் 600க்கும் அதிகமானோர் கலந்து கொண்டு விழாவினை ரசித்தார்கள்.
மேலும் அறியத் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல்: info@tyagaraja_chicago.org
ஜோலியட் ரகு |