குஜ்ஜர் போராட்டம்
'வாலு போச்சு கத்தி வந்தது' கதையாக பஞ்சாப் பிரச்னையே இன்னும் முடிந்த பாடில்லை. அதற்குள் ராஜஸ்தானில் கலவரம் வெடித்துவிட்டது. 'முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா பதவி விலக வேண்டும்', 'ஆட்சி கலைக்கப்பட வேண்டும்' என்றெல்லாம் நாடெங்கிலும் இருந்து எதிர்ப்புக் குரல் ஒலித்த வண்ணம் இருக்கிறது. பிரச்னை இதுதான். குஜ்ஜர் அல்லது குர்ஜார் இன மக்கள் தங்களையும் ஆதி திராவிடர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று போராடத் தொடங்கினார். அது மீனா பிரிவினருடனான மோதலாக திசைமாறி, பல உயிர்களைப் பலி கொண்ட பெரும் கலவர மாக வெடித்தது. பொதுச் சொத்துக்களுக்குப் பல்வேறு சேதங்கள் விளைவிக்கப்பட்டதுடன் அப்பாவிகள் பலரின் உயிரும் பலியானது.

ஆனால் இந்தப் போராட்டத்தின் போது நடந்த கலவரம் தேசிய அவமானம் என்றும், அரசு தகுந்த நடவடிக்கைகள் எடுக்காதது ஏன் என்றும் உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. ஆனால் லட்சக்கணக்கான குர்ஜார்கள் கையில் கம்பு, கத்தியுடன் சாலைகளில் இறங்கிய காட்சி இன்னமும் ரத்தத்தை உறைய வைப்பதாக இருக்கிறது.

தமக்கு நீதி கிடைக்காவிட்டால் உச்ச நீதி மன்றத்தை அணுக குர்ஜார்கள் முடிவு செய்துள்ளனர்.

அரவிந்த்

© TamilOnline.com