அடுத்த ஜனாதிபதி யார்?
தோழமைக் கட்சியான கம்யூனிஸ்டு ஆதரிக்கும் ஒரு வேட்பாளரையே ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த வேண்டிய நிர்பந்தத் துக்கு உள்ளான காங்கிரஸ் திடீரென்று பிரதிபா பட்டீலின் பெயரை அறிவித்தது. ஜெயலலிதா மூன்றாவது அணி ஒன்றைத் திரட்டி 'நாங்கள் அப்துல் கலாம் அவர்களையே மீண்டும் ஜனாதிபதி ஆக்க விரும்புகிறோம்' என்று கூறினார்.

சிவசேனாவின் ஆதரவு கூடக் கிடைக்காத நிலையில் பா.ஜ.க.வின் ஷெகாவத் கட்சி சாராத வேட்பாளாராக நிற்பதாக அறிவித்திருந்தார். ஆனால், கலாம் போட்டியிடும் பட்சத்தில் தான் விலகிக்கொள்வதாகவும் கூறினார். அப்துல் கலாமோ 'எனக்கு வெற்றியை உறுதி செய்யுங்கள், நான் போட்டியிடுகிறேன்' என்று கூறினார்.

'ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. வலையில் விழுந்து கலாம் ஜனாதிபதி பதவியை அரசியலாக்கக் கூடாது' என்று மிகப் புனிதமாகக் கூக்குரலிட்டது காங்கிரஸ். இந்தமுறை கலாமை வேட்பாளராக வேண்டிக்கொண்டது மூன்றாவது அணிதான் என்றாலும் எதைச் சொன்னால் மக்களை பயமுறுத்த முடியும் என்பது காங்கிரஸ்காரர்களுக்கு நன்றாகத் தெரியும். அந்த மூன்றாவது அணியே பா.ஜ.க. வேட்பாளரை அல்லது தனித்து நிற்கும் ஷெகாவத்தை ஆதரிக்கப் போவதில்லை என்று கூறிவிட்டதும் குறிப்பிடத்தக்கது. சிவசேனாவும் மண்ணின் புதல்வியான பிரதிபா பட்டீலைத்தான் ஆதரிக்கப் போகிறோம் என்று அறிவித்தது.

திருமணம் கூடச் செய்துகொள்ளாதவரும், சொத்துச் சேர்க்க அவசியம் இல்லாதவரும், கோடானு கோடி இளைஞர்களின் உள்ளத்தில் தேசபக்திக் கனலைக் கொளுத்திய அக்னிச் சிறகுகள் கொண்டவருமான அப்துல் கலாம், 'ராஷ்ட்ரபதி பவனின் புனிதத்தைக் கறைப்படுத்த விரும்பவில்லை. நான் போட்டியிட மாட்டேன்' என்று அறிவித்தார். இதற்கு நடுவில் பிரதிபா பாட்டீலும் அவரது குடும்பத்தினரும் செய்த பலவித நிதிமுறை ஊழல்களின் பட்டியல் வெளிவந்த வண்ணம் உள்ளது.

ஜனாதிபதியாக வருபவருக்கு அரசியல் பின்னணி இருக்க வேண்டும் என்பதில் இடதுசாரிகள் மிகக் குறிப்பாக இருக்கிறார்கள். ஆனால் அந்தச் சிம்மாசனத்துக்குப் பெரிதும் பெருமை சேர்த்த டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன், அப்துல் கலாமைப் போலவே அரசியல் பின்னணி இல்லாத கல்வியாளர்தான் என்பதை அவர்கள் ஏன் உணரவில்லை?

அரவிந்த்

© TamilOnline.com