ஜூலை 2007: ஜோக்ஸ்
அந்த மனோதத்துவ டாக்டர், மருத்துவமனையில் மூன்று மனநோயாளிகளைச் சோதித்துக் கொண்டிருந்தார்.

முதல் நோயாளியிடம் மூன்றும் மூன்றும் என்ன என்று கேட்டார். அவன் '265' என்று சொன்னான்.

இரண்டாவது நோயாளி 'புதன் கிழமை' என்று பதில் சொன்னான்.

மூன்றாவது ஆளைக் கேட்டபோது அவன் '6' என்று சரியாகச் சொன்னான்.

ஆச்சர்யத்துடன் டாக்டர் அவனிடம் 'எப்படிச் சொன்னாய்?' என்று கேட்க அவன் 'ரொம்பச் சுலபம். 265லிருந்து புதன் கிழமையைக் கழித்தால் போதும்' என்றான்.

*****


அவன் டாக்டரிடம் கேட்டான், 'டாக்டர், என் மனைவிக்குக் காது சரியாகக் கேட்கவில்லை என்று நினைக்கிறேன். என்ன செய்யலாம்?'

டாக்டர், 'வீட்டுக்குப் போனதும் முதலில் 15 அடி தூரத்தில் நின்று கொண்டு 'இன்று என்ன சமையல்?' என்று கேள். அவள் சரியாகப் பதில் சொல்லவில்லையென்றால், கொஞ்சம் கொஞ்சமாகப் பக்கத்தில் சென்று அவளுக்குச் சரியாகக் கேட்கும் வரை கேட்டுப்பார்' என்றார்.

மாலையில் வீட்டுக்குச் சென்று அவன் முதலில் 15 அடி தூரத்திலிருந்து 'இன்று என்ன சமையல்?' என்று மனைவியிடம் கேட்டான். பதில் வராமல் போகவே மேலும் நெருங்கிச் சென்று கேட்டான்.

கடைசியாக அவளது முதுகுக்குப் பின்னால் நின்றுகொண்டு, 'இன்று என்ன சமையல்?' என்று இரைந்தான்.

அவள் 'இத்தோட நாலுதடவை வெண்டைக் காய் கறி, முருங்கைக்காய் சாம்பார்னு சொல்லிட்டேன். கேக்கலியா?' என்று இரைந்தாள் பதிலுக்கு!

*****


பெண்: டாக்டர், என் கணவர் தன்னை ஒரு ஆன்டென்னாவாகக் கற்பனை செய்து கொள்கிறார்.

டாக்டர்: கவலைப்படாதீர்கள்; சரி செய்து விடலாம்.

பெண்: வேண்டாம் டாக்டர், அவரை சினிமா சேனல் பக்கம் இருக்கும்படி செய்தால் போதும்.

*****


டாக்டர்: உங்களுக்கு வந்திருப்பது நிமோனியா.

நோயாளி: சரியாகச் சொல்லுங்கள் டாக்டர். இப்படித்தான் என் சிநேகிதிக்கு ஒரு டாக்டர் நிமோனியா என்றார். ஆனால் அவள் டை·பாய்டால் இறந்து விட்டாள்.

டாக்டர்: கவலைப்படாதீர்கள். நான் ஒரு நோயாளிக்கு நிமோனியா என்றால் அவர் நிமோனியாவால்தான் இறப்பார்.

*****


அந்த ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் வேலை நிறுத்தம் தொடங்கியது.

ஆஸ்பத்திரி நிர்வாகிகள் விடுத்த அறிக்கையில் 'ஒரு மருந்துக் கடைக்காரரிடம், டாக்டர்கள் எழுதிக் கொடுத்த கோரிக்கைகளைப் படிக்கச் சொல்லி, பிறகு முடிவு எடுப்போம்' என்று காணப்பட்டது.

*****


டாக்டர்: நான் என்னுடைய கையுறையை உள்ளே வைத்துத் தைத்து விட்டேன். இன்னுமொரு ஆபரேஷன் செய்ய வேண்டும்.

நோயாளி: அந்தக் கையுறைக்கான காசைக் கொடுத்து விடுகிறேன். இன்னுமொரு ஆபரேஷன் வேண்டாமே.

டி.எஸ். பத்மநாபன்

© TamilOnline.com