'முதல் பார்வை'
இப்புத்தகத்தில் உள்ள கவிதைகள் டாக்டர் அருள் வீரப்பன் ஜப்பானில் விஞ்ஞானியாகப் பணியாற்றியபோது படைத்தவை. சேலம் அருகில் ஒரு கிராமத்தில் பிறந்து வளர்ந்த கவிஞரின் இளமை நினைவுகளை இவற்றில் காணலாம். சொந்த நாட்டை விட்டு வெளிவந்து முற்றிலும் புதிய கலாசாரம், மனிதர்களுடன் வாழும்போது தன் வேர் களைப் பற்றிய சிந்தனைகள் இதில் பெரும் பாலும் புதுக் கவிதைகளாக மலர்ந்துள்ளன. அவற்றில் பாடுபொருளாக அகம், புறம் என்னும் காதல் சுவை மிகுந்தனவும், வீர அறைகூவல்களும் கொண்ட கவிதைகள் பல உள்ளன.
விஞ்ஞானியாய் பலவகை அழுத்தம் குறித்து ஆராய்ந்த அருளின் பெண்ணின் மன அழுத்தம் பற்றிய கவிதை (பக். 32) நடைமுறையில் நாம் பார்ப்பதுதான். கோவை நகரில் குண்டுகள் வெடித்து நகரவாழ்க்கை நரகமான போது பதைத்த கவியுள்ளத்தையும் பார்க்க முடிகிறது. மன்மதனை மலரம்பன் என்பது இந்திய இலக்கியம். அக்கருத்தின் தொடர்ச்சியாக, பெண்களைப் பூவை எனல் பொருந்துமா என்று கேள்விக்கணை தொடுக்கிறார்.
'முடிந்தால் முத்தமிடு'
கவிஞர் அருளின் அண்மைக்காலக் கவிதைகள் அடங்கிய இந்நூலை நியூயார்க் மாநகரில் மன்ஹாட்டன் சென்டர் அரங்கில் கவியரசர் வைரமுத்து அமெரிக்கக் தமிழ்ச்சங்கக் கூட்டமைப்பின் தமிழர் திருவிழா 2006-ல் வெளியிட்டார். அருளின் அமெரிக்க வாழ்க்கையில் அலர்ந்த படைப்புகள் கொண்ட தொகுப்பிது. கவிஞரின் கல்வி யறிவை 'இந்தச் சிற்பியைச் செதுக்கிய உளி நூல்நிலையம்' என அவர் சொல்லிலிருந்தே உணரமுடிகிறது. ஒன்பது பக்கங்களில் ‘நினைத்தாலே இனிக்கும் நியூயார்க்’ என்னும் உரைவீச்சு தமிழுக்கு ஒரு புதுவரவு. அதில் நியூயார்க் மாநகர் வாழ்வு தமிழில் விரிவாய், அழகாய், சுவையாய் பேசப்படுகிறது:
ஹட்சன் நதி கடலில் கலக்குமிடம் உலகச் சந்தை கடை விரிக்குமிடம்
பங்குச் சந்தை பந்தி வைக்குமிடம் மில்லியன் டாலரும் சல்லிக்காசாய்க் கரையுமிடம்
என்.ஆர்.ஐ. (NRI) இந்தியர்களை Not Required Indians எனப் பகடியாகக் குறிப்பிடுவ துண்டு. அந்நிலை மாறி, பல நாடுகளில் வசிக்கும் பல்துறை வல்லுநர்கள் தாய் நாட்டுக்கு உதவும் வகையைக் கூறுவது தான் 'தேசம் மாற்றியமைப்போம்' என்னும் கவிதை. ‘விளம்பரம் தேடுவதில்லை வேர்’ தன்னலம் கருதாது உழைத்து உயரிய மாணவ சமுதாயத்தை உருவமைத்து நாட்டைக் கட்டி நிர்மாணிக்கும் ஆசிரியர்களின் தொண்டை மென்மையாக நெஞ்சில் ஊன்ற வைக்கிறது. அமெரிக்க வாழ்வில் சற்றே சலிப்புத் தட்டும் போது 'உறைவிடம் மாற்றினோம், உறைபனிக் கேற்ப உடைகள் கூட மாற்றி னோம், ஆனால், உணவை மட்டும் மாற்ற முடியவில்லை. அது தமிழ் உணர்வோடு கலந்ததால்' என்று பாடுகிறார். சின்னத் திரையில் தமிழ்ப் பெண்டிர் சிக்குண்டு காலவிரயம் செய்வதை,
இன்றைய பல தொலைக்காட்சிகளின் தொடர் தமிழ்ப் பண்பாட்டுக்கு இடர்
என்று இரத்தினச் சுருக்கமாகத் தெளிவு படுத்துகிறார்.
மொத்தத்தில், அருள் வீரப்பன் கவிதை நூல்கள் இரண்டும் தமிழுக்கு நல்ல புதுவரவு. ஜனரஞ்சகமாக, எளிய நடையில் கவித்துவம் கொண்டவை. சமூகம் பற்றிய உயர்சிந்தனை கள் பல மன்றங்களில் கலந்துரையாடல்களில் பங்குபெறுதல் காலத்தின் தேவை.
1. முதல் பார்வை, மே 2006 (109 பக்கம், இரண்டாம் பதிப்பு)
2. முடிந்தால் முத்தமிடு, ஜூன் 2006 (120 பக்கம்)
விற்பனை: திருமகள் நிலையம், தி. நகர், சென்னை.
டாக்டர் நா. கணேசன், ஹூஸ்டன், அமெரிக்கா |