எல்லா உணர்ச்சிகளும் நியாயமே
அன்புள்ள சிநேகிதியே...

திருமணமாகிச் சில வருடங்கள் குழந்தை இல்லை. 1998ல் இந்தியாவிலிருந்து ஒரு குழந்தையை தத்து எடுத்து வந்தோம். என் கணவர் ஓர் அமெரிக்கர். ஆனால், இந்திய உணவு, பண்பாடுகள் எல்லாம் என்னைவிட அவருக்குப் பிடிக்கும். மிகவும் அருமையானவர். என்னுடைய உணர்ச்சிகளைப் புரிந்து கொண்டு, என் ஆசைகளைப் பூர்த்தி செய்து, ஆர்வங்களை வளர்த்து - 'அம்மம்மா என்ன தவம் செய்தேன்' என்று அடிக்கடி நினைப்பேன். ஒரு பையன் அவர் வழியாக வேண்டும் என்று கடவுளை வேண்டுவேன். விஞ்ஞான சாதனைகள் துணை புரிய, எனக்குப் போன வருடம் ஒரு மகள் பிறந்தாள். பெரியவளும் பெண். அவளை ராணி போல வளர்த்தோம். இன்னும் அப்பாவின் செல்லம் தான். முதலில் தன் தங்கைப் பாப்பாவை ஆசை, ஆசையாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தவள் பிறந்த சில நாட்களிலேயே அவளை வெறுக்க ஆரம்பித்துவிட்டாள்.

பிறந்த குழந்தையாக இருப்பதால் அதற்கு அதிக நேரம் நான் செலவழிப்பது அவளுக்குப் பிடிக்கவில்லை. பிறந்த குழந்தைக்கு பாய்ஸ் டிரஸ் வாங்குவது என்றால் முகத்தைச் சுளித்துக் கொள்வாள். இதைத் தவிர, அவளுடைய நண்பர்கள் வீட்டுக்கு வந்து குழந்தையைப் பார்த்தபோது நிறத்தைப் பற்றி ஏதோ குறிப்பிட்டிருக்கிறார்கள் போலிருக்கிறது. சுள்சுள் என்று வார்த்தைகள். 'இந்த வயதுக்கு மேல் ஏன் குழந்தை உங்களுக்கு? அப்படியே பெற்றுக் கொண்டாலும் என்னை மாதிரி கறுப்பாக இருந்தால் எனக்கு காம்ப்ளக்ஸ் இருக்காதே. Why did you choose dad's color? உங்கள் பணம், நேரம் எல்லாம் அதற்கே கொட்டிவிடுங்கள். நான் எங்கேயாவது தொலைந்து போய்விடுகிறேன்' என்று அழுகை. நாங்கள் இருவரும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தோம். மனநல மருத்துவர், ஆலோசகர்களிடம் காட்டிக் கொண்டிருக்கிறோம். இவள்தான் தம்பிப் பாப்பா வேண்டும் என்று அரித்து எடுத்தாள். அதைக் கேட்டால் நான் தம்பிதானே கேட்டேன். தங்கை கேட்கவில்லையே என்று பதிலடி கொடுக்கிறாள்.

எவ்வளவுக்கு எவ்வளவு இந்தக் குழந்தையைக் குடும்பத்தில் எதிர்பார்த்தோமோ அவ்வளவுக்கு நரகமாகப் போய்க் கொண்டிருக்கிறது என் பெரிய பெண் செய்யும் கலாட்டாவால். அவளுக்கு jealousy, complex எல்லாம் இருப்பது தெரிகிறது. எப்படி அவளைப் பழைய நிலைக்குக் கொண்டு வருவது?

இப்படிக்கு...

அன்புள்ள சிநேகிதியே...

ஆசை ஆசையாக மகனுக்குப் பெண் பார்த்து கல்யாணம் செய்து தருவாள் தாய். நல்ல மருமகள் கிடைக்க வேண்டும் என்று ஊரிலுள்ள தெய்வத்தையெல்லாம் வேண்டிக் கொள்வாள். மகனும் அம்மா, அம்மா என்று அவளைச் சுற்றிச் சுற்றி வருவான். திருமணத்துக்குப் பிறகு உறவுகளில் முக்கியத்துவம் சிறிது மாறித்தான் போகிறது. 'அம்மா நீ வராவிட்டால் அந்த கான்சர்ட்டுக்கு போக மாட்டேன்' என்று சொல்லும் பையன், 'நாங்கள் போய்விட்டு வருகிறோம்' என்று சொல்லுவான்.

விவேகம் உள்ள தாய் புரிந்துகொண்டு மனதுக்குள் சிரித்துக் கொள்வாள். அது சிறிது குறைந்த தாய் வெளிப்படையாகப் பிறரிடம் சொல்லி ஆதங்கப்படுவாள். இங்கே யாரும் தவறு செய்யவில்லை. எல்லா உணர்ச்சிகளும் நியாயமே. பல வருடங்கள் ஆனால் எல்லாம் பழக்கப்பட்டுப் போய்விடும். அம்மா அமெரிக்காவுக்கு 2 மாதம் வருகிறாள் என்றால் சின்னக் குழந்தையைப் போல் பையன் காத்துக் கிடப்பான். அந்த சமயத்தில் தன் மவுசு சிறிது குறைந்து போவதாக மனைவி நினைத்துக் கொள்வாள். அப்போது காதல் அலைகள் கடலில் கலக்க, பாச அலைகள் கரையில் வரவேற்கும். அது போலத்தான் உங்கள் பெரிய பெண்ணின் நிலையும். குழந்தையாகவும் இல்லாமல், டீன்ஏஜும் இல்லாமல் ஒரு இக்கட்டான காலக்கட்டத்தின் சங்கடமான நிலைமை இது. என்னிடம் ஒரு முக்கியமான விஷயத்தைத் தெரிவிக்கவில்லை நீங்கள். அவளுக்குத் தன் பிறப்பைப் பற்றி தெரியுமா?

எப்படியிருந்தாலும், 9 வருடம், ஒரு அருமையான துணையுடன் நீங்கள் அந்தக் குழந்தையைப் போற்றிப் போற்றி வளர்த்து இருக்கிறீர்கள். நல்ல values கொடுத்து இருப்பீர்கள். இது ஒரு மாற்றம் ஏற்படும் காலம். பொறுமையாக பதில் சொல்லிக் கொண்டு இருக்க வேண்டும். நாம் பொறுமையை இழந்தால்தான் கஷ்டம். அவளுடைய மனநிலையைப் புரிந்து கொண்டு இருக்கிறீர்கள். உங்கள் மனநிலை ஆலோசகரும் உதவி செய்வார்.

You have a beautiful family. Enjoy.

வாழ்த்துக்கள்

சித்ரா வைத்தீஸ்வரன்

© TamilOnline.com